புதுடெல்லி: ஏழு மாதங்களுக்கு முன்னர் தினமும் ஆயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையிலிருந்து இந்தியா மீண்டு வந்துள்ளதாக நியூ யார்க் டைம்ஸ் தெரிவித்து உள்ளது. இந்த நிலையை எட்ட, நாட்டின் தலைவர்கள் தங்களது கொள்கைகளில் மாற்றம் செய்ததும் தடுப்பூசி போடும் நடவடிக்கையை அரசாங்கம் வேகப்படுத்தியதும் முக்கிய காரணங்கள் என்று அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.
இருந்தபோதிலும் கொள்ளைநோயால் வரக்கூடிய ஆபத்து பற்றிய பயம் இன்னும் நீங்கவில்லை என்று சுகாதார நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஒரு பில்லியன் தடுப்பூசி என்னும் நிலையை எட்டிய பின்னர் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் நடவடிக்கையில் சுணக்கம் காணப்
படுகிறது. விழாக்காலங்களில் கடைத் தொகுதிகளிலும் சந்தைகளிலும் பெருங்கூட்டம் காணப்பட்டது. வீடுகளுக்கு விருந்தினர்கள் கும்பல் கும்பலாகச் செல்கிறார்கள்.
பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. டாக்டர் நமஞ்சயா கோப்ரேகேட் போன்ற தடுப்பூசி பிரசார தொண்டூழியர்களுக்கான அவசியம் இனி தேவைப்படாது என்று அரசாங்கம் தெரிவிப்ப
தாகத் தகவல்கள் கூறுகின்றன.
தற்போதைய நிலைமை குறித்து, கிழக்கு மாநிலமான ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த டாக்டர் கோப்ரேகேட் கூறுகையில், "கட்டுப்பாடுகளைத் தளர்த்திவிட்டு சுதந்திரமாக நடமாடுவதற்கான நேரம் இன்னும் வரவில்லை. ஏராளமான மக்கள் முதல் தடுப்பூசி மட்டுமே போட்டுள்ளனர். இதை இப்படியே விட்டு விட முடியாது. தடுப்பூசி போடுவதை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும்," என்றார்.
இதற்கிடையே, கொள்ளை
நோயிலிருந்து மீள்வோரின் விகிதம் 98.25 விழுக்காடாக அதிகரித்துள்ளது என்றும் நோய்ப் பரவல் தொடங்கியது முதல் இது அதிக விகிதம் என்றும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (நேற்று) காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 11,466 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 264 நாள்களுக்குப் பிறகு மிகக் குறைவான எண்ணிக்கை. 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பால் 460 பேர் உயிரிழந்தனர்.

