எடப்பால் (மலப்புரம்): பணத்தைத் திருடியதற்காக வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு திருடன் தப்பிச் சென்ற சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.
மலப்புரம் அருகில் உள்ள எடப்பால் பகுதியைச் சேர்ந்தவர் ஷம்சீர். அவசரத் தேவைக்காக, நகைகளை அடகு வைத்து பெற்ற பணம் ரூ.67,000ஐ வீட்டில் வைத்திருந்தார் இவர். பணம் இருப்பதை அறிந்திருந்த திருடன், வீட்டில் யாருமில்லாத நேரத்தில், பணம் இருந்த அறைக்குள் சென்று அங்கு இருந்த பணம், ரூ.67,000 எடுத்துக்கொண்டான். தெரிந்த வீட்டில் திருடுகிறோமே என எண்ணிய திருடன், அங்கிருந்த தாளையும் பேனாவையும் எடுத்து ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுச் சென்றான்.
"ஷம்சீர், என்னை மன்னித்துவிடுங்கள். அவசரத் தேவைக்காக உங்க வீட்டில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்கிறேன். எனக்கு இப்போது உடல்நிலை சரியில்லை. நடக்கக்கூட முடியவில்லை.
"என்னை உங்களுக்கு நன்றாகத் தெரியும். நான் யாரென்று இப்போது குறிப்பிட விரும்ப வில்லை. விரைவில் பணத்தைத் திரும்பிக் கொடுத்துவிடுகிறேன். ஆனா, அதுக்கு சிறிது கால அவகாசம் வேண்டும்.
"எங்க வீட்டிலேயும் இதுபற்றி யாருக்கும் தெரியாது. தயவுசெய்து என்னை மன்னித்துவிடவும்," என்று கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஷம்சீருக்குத் தெரிந்தவர்கள்தான் அவரது வீட்டில் பணத்தைத் திருடியிருப்பார்கள் என்ற கோணத்தில் சங்கரங்குளம் போலிசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.