தானே: கோவிலுக்குச் சென்ற கொள்ளையன் ஒருவன், கடவுளை வேண்டிவிட்டு உண்டியலைத் தூக்கிச் சென்ற காணொளி சமூக ஊடகங்களில் பரபரப்பாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், தானேவில் உள்ள அனுமார் கோவிலில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இரவு நேரத்தில் கோவிலுக்குள் நுழைந்த அக்கொள்ளையன், சில நொடிகளுக்குச் சுற்றுமுற்றும் நோட்டமிட்டதைக் கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளி காட்டியது.
பின்னர் கைபேசியில் படமெடுப்பதுபோல் நடித்த அவன், சாமி சிலைக்கு முன்னால் சென்று, தொட்டு வணங்கியபின் உண்டியலைத் தூக்கிக்கொண்டு ஓடிவிட்டான்.
கோவிலுக்குத் திரும்பிய அர்ச்சகர், அங்கு உண்டியல் இல்லாததைக் கண்டு, காவல்துறையிடம் புகார் அளித்தார். உண்டியலில் கிட்டத்தட்ட ஆயிரம் ரூபாய் இருந்ததாகக் கூறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கொள்ளையனைத் தேடிப் பிடித்து கைது செய்த காவல்துறையினர், அவனிடமிருந்த உண்டியல் பணத்தையும் மீட்டனர்.