பெங்களூரு: ஆந்திராவைத் தொடர்ந்து கர்நாடகாவையும் கனமழை குறிவைத்துள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு பெங்களூரில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் பிற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்யும் என்றும் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை காலை வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக பெங்களூரில் காய்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலம் முழுவதும் கடும் குளிர் நிலவுவதால் மின்சார பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளது. வழக்கத்தைவிட 30 விழுக்காடு அளவில் மின் பயன்பாடு குறைந்துள்ளதாக மின்வாரியத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் சளிக்காய்ச்சல், சுவாச ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதற்கிடையே, ஆந்திராவில் நீடிக்கும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சார இணைப்புகளைச் சீரமைக்க 123 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் மழை காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது.
ஐம்பதுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களைப் பற்றி இதுவரை விவரங்கள் ஏதும் தெரியவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஹெலிகாப்டரில் பறந்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆந்திராவில் சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள 1,316 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.