டேராடூன்: இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்றால், தக்க பதிலடி தரப்படும் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேலும், எல்லை கடந்து சென்று எதிரிகளைத் தாக்குவதற்கு இந்தியா தயங்காது என்றும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
டேராடூனி்ல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவதையே இந்தியா விரும்புகிறது என்றார்.
"இந்தியா எப்போதும் எந்த நாட்டையும் தாக்கியது இல்லை. அந்நிய மண்ணை நாம் ஆக்கிரமிப்பதும் இல்லை. ஆனால் சிலர் இதைப் புரிந்துகொள்வதில்லை.
"இது அவர்களது வழக்கமா அல்லது குணாதிசயமா என்று தெரியவில்லை," என்றார் அமைச்சர் ராஜ்நாத் சிங்.
பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் இந்தியாவைச் சீர்குலைக்க பாகிஸ்தான் முயற்சி செய்வதாகக் குறிப்பிட்ட அவர், இத்தகைய அத்துமீறல்களுக்குப் பதிலடி தருவது மட்டுமல்லாமல், அந்நாட்டின் நிலப்பரப்புக்குள் சென்று வான்வழித் தாக்குதலை நடத்துவோம் என்றும் தெளிவான தகவல் கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அண்டை நாடான சீனாவும்கூட சில விஷயங்களைப் புரிந்துகொள்வதில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவின் ஓர் அங்குல நிலத்தைக் கூட எந்த நாட்டாலும் ஆக்கிரமிக்க முடியாது என்றார்.