ஹைதராபாத்: உக்ரேனில் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், அங்கிருந்து வெளியேற முற்பட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த 12 மாணவர்கள் அந்நாட்டின் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரேனின் அண்டை நாடான ருமேனியாவுக்குள் தரைவழி நுழையும் திட்டத்துடன் சென்ற அந்த மாணவர்களைத் தடுத்து நிறுத்திய பாதுகாப்புப் படையினர், தங்களிடம் இருந்த பற்று அட்டைகளைப் பறித்துக்கொண்டதாகவும் அம்மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
போலந்து, ருமேனியா நாடுகளின் எல்லைப் பகுதிகளில் நிலைமை மோசமடைந்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தைச் சேர்ந்த, மருத்துவம் படிக்கும் எட்டு மாணவர்கள் உக்ரேன், போலந்து எல்லைப் பகுதியை அடைந்த நிலையில், அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் லேசான தடியடி நடத்தி, மீண்டும் உக்ரேனுக்கு திரும்பிச் செல்ல வைத்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய குணால் என்ற மாணவரின் தந்தையான விஸ்வநாத், தன் மகன் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பை மேற்கொண்டுள்ளதாகவும் பாதுகாப்புப் படையினரால் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்தார்.
தகவல் தொடர்பில் இடையூறு ஏற்பட்டதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தன் மகனைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றார் அவர்.
"ருமேனிய எல்லையைச் சென்றடைந்துவிட்டால் அங்கிருந்து விமானம் மூலம் நாடு திரும்பலாம் என்று திட்டமிட்டு, என் மகன் உட்பட 12 மாணவர்கள் அங்கு சென்றுள்ளனர்.
"ஆனால் ருமேனிய எல்லையைச் சென்றடைய ஐந்து கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருந்த நிலையில், பாதுகாப்புப் படையினரால் 12 பேரும் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களுடைய கைபேசிகள் இயங்கவில்லை.
"பின்னர் என்னைத் தொடர்புகொண்டு பேசிய என் மகன், சுமார் முப்பது கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்ததாகவும் தற்போது அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
"ருமேனிய எல்லைக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறினார்," என்று விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதற்கிடையே, 12 மாணவர்களிடம் இருந்து பற்று அட்டைகளை பாதுகாப்புப் படையினர் பறித்துக் கொண்டதாகவும் எல்லையைக் கடந்து செல்ல அதிகாரிகளிடம் அனுமதி பெறுமாறு கூறியதாகவும் மாணவர் குணால் தெரிவித்தார்.
தங்களுக்கு உதவி செய்ய இந்தியத் தூதரக அதிகாரிகள் யாரும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

