வதோதரா: குஜராத் மாநிலத்தின் வதோதராவைச் சேர்ந்த 40 வயதுப் பெண், 2014ஆம் ஆண்டு தன்னைத் திருமணம் செய்துகொண்டவர், ஆணாக மாறுவதற்கு பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்று கோத்ரி காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
முன்னதாக விஜய்தா என்ற ஒரு பெண்ணாக இருந்த டெல்லியைச் சேர்ந்த டாக்டர் விராஜ் வர்தனுக்கு எதிராக மோசடி மற்றும் இயற்கைக்கு மாறான உடலுறவு குறித்த புகாரை அவர் பதிவு செய்தார், மேலும் டாக்டர் வர்தனின் குடும்பத்தினரும் உண்மையை மறைத்து தனக்குத் திருமணம் செய்துவைத்ததாக அவரது புகாரில் கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு தனது முதல் கணவனை இழந்த அந்தப் பெண், குடும்பத்தினரின் விருப்பத்திற்கு இணங்க வரன்தேடும் இணையத் தளம் மூலம் டாக்டர் விராஜ் வர்தன் என்பவரைச் சந்தித்தார்.
இருவரும் பேசிப்பழகி திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சுற்றம் சூழ திருமணம் செய்துகொண்டனர்.
மணம் முடித்து ஏழு ஆண்டுகள் ஆகியும் இருவருக்கும் தாம்பத்திய உறவு என்பது கொஞ்சமும் இல்லை. கணவனோ, "தான் ரஷ்யாவில் இருந்தபோது ஒரு விபத்துக்கு ஆளானேன். அதற்குப் பிறகு என்னால் தாம்பத்திய உறவில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது," என்றும் சிறு அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரிசெய்துவிடலாம் என்றும் மனைவிக்கு ஆறுதல் கூறி காலத்தைக் கழித்துவந்தார். ஜனவரி 2020இல், அவர் தனது எடையைக் குறைக்க அறுவை சிகிச்சை செய்ய விரும்புவதாகக் கூறி கோல்கத்தா சென்றார்.
வர்தன் மீது சந்தேகப்பட்ட மனைவி வர்தனின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து வந்தார். அப்போதுதான் அவருக்கு ஓர் அதிர்ச்சியான உண்மை தெரியவந்தது. தனது கணவன் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சைக்காக கோல்கத்தா செல்லவில்லை. பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளவே சென்றுள்ளார், அவர் முன்பு ஒரு பெண்ணாக இருந்தார் என்ற உண்மையைத் தெரிந்துகொண்டார். இதைத் தொடர்ந்து அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

