பாட்னா: இந்தியாவின் எதிர்த்தரப்புகள் பீகாரின் பாட்னா நகரில் வெள்ளிக்கிழமை சந்தித்தன. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கூட்டணி ஒன்றை அமைப்பதற்கான வழிகாட்டித் திட்டங்களை உருவாக்குவதற்காக நேற்றைய கூட்டம் நடந்தது.
காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஏபிபி, திமுக உள்ளிட்ட 27 அரசியல் கட்சிகள் வெள்ளிக்கிழமை கூட்டத்தில் கலந்துகொண்டன.
கூட்ட முடிவில் கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கூட்டம் தொடங்கியதற்கு முன்பாக பேசிய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி, அடுத்த ஆண்டு தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாகச் சேர்ந்து பாஜகவை வீழ்த்த தயாராகிவிட்டதாகத் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை கூட்டத்தில் கருத்திணக்கம் ஏற்படவில்லை என்று ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. அடுத்த சந்திப்பை சிம்லாவில் நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிடுவதாகவும் அத்தகவல்கள் குறிப்பிட்டன.

