அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனாவின் புதிய வரைபடம்

அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனாவின் புதிய வரைபடம்

1 mins read
30470dcf-4b05-41c2-aba5-70834e603690
சீனா வெளியிட்டுள்ள புதிய வரைபடத்தில் அருணாச்சலப் பிரதேசத்தை தெற்கு திபெத் குறிப்பிட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் பகுதியான அருணாச்சலப் பிரதேசத்தை தங்கள் நாட்டுக்குச் சொந்தமானது என சீனா கூறிவருகிறது. அப்பகுதியை தெற்கு திபெத் என்று சீனா கூறுகிறது. அதற்கு இந்தியா தரப்பில் பலமுறை கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது சீனா சர்ச்சைக்குரிய வகையில் புதிய வரைபடம் ஒன்றை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் வழக்கம் போல, ஆக்கிரமிப்பில் வைத்து இருக்கும் இந்தியப் பகுதிகளை அக்‌ஷயா சின் என குறிப்பிட்டிருக்கிறது. அத்துடன் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தை, தெற்கு திபெத் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இந்திய நிலப் பகுதிகளை மட்டுமல்ல பல்வேறு நாடுகளின் எல்லைப் பகுதிகளையும் கூட சீனா தம்முடைய பிரதேசம் என இந்த வரைபடத்தில் உரிமை கோரி இருக்கிறது. தைவானையும் தனது நிலப் பகுதியாக சுட்டிக்காட்டியுள்ளது.

கால்வன் பள்ளத்தாக்கில் இந்திய வீரர்களுக்கும் சீன வீரர்களுக்கும் நடந்த மோதலை தொடர்ந்து இந்தியா - சீனா இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

இருதரப்புக்கும் இடையேயான பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இந்த நிலையில், மீண்டும் சீனா அடாவடியாக வரைபடம் வெளியிட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்