தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் போராட்டம்

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து கர்நாடக விவசாயிகள் போராட்டம்

2 mins read
a4149b71-86e0-4db9-86e9-b3d56b78c61f
தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவதைக் கண்டித்து புதன்கிழமை இரவு முழுதும் கர்நாடக விவசாயிகளும் சமூக ஆர்வலர்களும் குந்தியிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். - படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு 7,329 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு கர்நாடக மாநிலத்தின் மாண்டியாவில் உள்ள விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய கட்சியின் சட்டமன்ற பிரதிநிதி தர்ஷன் புட்டனய்யா இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளார்.

விவசாயிகள் கே.ஆர்.எஸ் அணை முன்பு புதன்கிழமை இரவு முழுவதும் கையில் மெழுகுவத்தி மற்றும் தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து, காவிரி நீர் தொடர்பாக ஆலோசனை நடத்த துணை முதல் அமைச்சர் டி.கே. சிவகுமார் நாளை டெல்லி செல்ல இருக்கிறார்.

காவிரியில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்கான பங்கை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்துவிட உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அந்த வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில், காவிரியில் தமிழகத்துக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி, தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்குமுறை குழு, காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து தமிழகத்துக்கு காவிரியில் விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீர் வீதம் 15 நாட்களுக்கு திறந்து விடக்கூறி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் புதன்கிழமை உத்தரவிட்டது. அதையடுத்து, கர்நாடகாவின் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு 7,329 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்த மாநில விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்