புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரூ.13,000 கோடி விஸ்வகர்மா திட்டத்தை அதிகாரபூர்வமாக ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
அந்தத் திட்டம் கைவினைக் கலைஞர்களுக்குக் கைகொடுக்கும் திட்டம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லியில் உள்ள இந்திய அனைத்துலக மாநாடு, பெருங்காட்சி மையத்தில் அந்த நிகழ்ச்சி நடந்தது.
இத்திட்டம் 3 மில்லியன் (30 லட்சம்) குடும்பங்களுக்குப் பலனளிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
தன்னுடைய பிறந்தநாளன்று திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர், அதையொட்டி நடந்த கண்காட்சியைப் பார்வையிட்டார். கைவினைக் கலைஞர்களுடன் உரையாடினார்.
இந்தத் திட்டம் பற்றி ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தின்போது பிரதமர் அறிவித்து இருந்தார்.
திட்டத்தில் சேர்வோருக்கு பிஎம் விஸ்வகர்மா என்ற சான்றிதழுடன் அடையாள அட்டையும் வழங்கப்படும். திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும்.
தங்கள் கைத்தொழில்களைச் சார்ந்த கருவிகளை வாங்குவதற்காக ரூ.15,000 ஊக்கத்தொகை கொடுக்கப்படும்.
தொடர்புடைய செய்திகள்
முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை வட்டியில்லாத கடனை அவர்கள் பெறலாம். இரண்டாவது தவணையாக இந்தக் கலைஞர்கள் 5% வட்டியில் ரூ.2 லட்சம் வரை கடன் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தின்கீழ் குரு-சீடன் பாரம்பரியம் மேம்படவும் கைவினைக் கலைஞர்களின் குடும்பங்கள் முன்னேற்றம் காணவும் ஊக்கம் கிடைக்கும் என்றும் முன்னதாக அரசாங்கம் அறிவித்து இருந்தது.
கைவினைக் கலைஞர்களின் தயாரிப்புத் தரத்தை உயர்த்த முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களின் தயாரிப்புப் பொருள்கள் அனைத்துலக அளவில் விளம்பரப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

