மதுபானக் கொள்கை முறைகேடு: டெல்லி துணை முதல்வரையடுத்து முதல்வருக்கு சிபிஐ குறி

மதுபானக் கொள்கை முறைகேடு: டெல்லி துணை முதல்வரையடுத்து முதல்வருக்கு சிபிஐ குறி

2 mins read
af52c73d-1496-4406-be9f-ce0111b20d91
டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுடன் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வரும் நவம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு முன்னிலையாக அமலாக்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னதாக, புதிய மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு முன்னிலையாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிபிஐ அவருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இருப்பிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் சிபிஐ தாக்கல் செய்த இந்த வழக்கு தொடர்பான அறிக்கையில் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெயர் குற்றவாளியாக சேர்க்கப்படவில்லை. அதையடுத்து டெல்லியின் துணை முதல்வராக செயல்பட்ட மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.

இந்த முறைகேட்டில் மணீஷ் சிசோடியாவுக்கு முக்கிய பங்கு இருப்பதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து அமலாக்கத்துறையினரால் அவர் விசாரிக்கப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். சிசோடியாவின் பிணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

சிசோடியாவின் பிணை மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், பாரதிய ஜனதா கட்சியின் மனோஜ் திவாரி, “சிசோடியா மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைப் பார்க்கையில் இந்த ஊழலில் ஆம்ஆத்மி கட்சியின் தலைவர்களுக்கு பங்கிருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் மனோஜ் திவாரி கூறுகையில், வெகுவிரைவில் ஆம்ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், புதிய மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் நவம்பர் 2ஆம் தேதி முன்னிலையாகும்படி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்