தென்னிந்தியாவை வதைத்துத் திணறவைத்த மிச்சாங் புயல்

தென்னிந்தியாவை வதைத்துத் திணறவைத்த மிச்சாங் புயல்

2 mins read
d9495544-a33f-4e5c-9f12-e4dcff1db581
கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்திலிருந்து மக்கள் சரக்கு வாகனம் ஒன்றின் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். - படம்: இபிஏ
multi-img1 of 2

சென்னை: மிச்சாங் புயலால் இந்தியாவின் சென்னை நகர் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

தங்களின் வீடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை அடைவதற்காக மீட்புப் பணியினர் படகுகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

தென்கரையைத் தாக்கிய மிச்சாங் புயல், கடும் மழையையும் காற்றையும் கொண்டு வந்து மரங்களை வேரோடு சாய்த்ததுடன் சாலைகளைக் கடும் சேதத்துக்குள்ளாக்கியது.

வெள்ளத்தால் ஏறத்தாழ 13 பேர் உயிரிழந்துவிட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் தமிழ்நாட்டின் உற்பத்தித்துறை மையத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

காற்று நிரப்பப்பட்ட படகுகளில் கயிறுகளைக் கொண்டு மக்களை மீட்டுவரும் நிலையில், மீட்புப் பணியினர் பாதி மூழ்கிய வாகனங்களைக் கடந்து ஆழமான வெள்ளப்பெருக்கைக் கடந்து செல்லும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் காட்டி வருகின்றன.

மேலும், வெள்ளத்தில் சிக்கிய இல்லங்களில் இருப்பவர்களுக்கு உணவுப் பொருள்களை ஆகாயப் படை ஹெலிகாப்டர்கள் விநியோகம் செய்து வருகின்றன.

இவ்வாறு கடுமையான வானிலையைக் கையாளும் ஆற்றல் நகரின் உள்கட்டமைப்புக்கு உண்டா என்று மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.

இதற்கிடையே, மிச்சாங் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதத்தைச் சரிசெய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி (S$607.01 மி.) வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாள்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கனமழையுடன் வெள்ளப் பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் வியாழக்கிழமையும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி இவ்வாறு விடுமுறை அளிக்கப்பட்டது.

மிச்சாங் புயலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்