ஆந்திராவுக்குள் புகுந்த 70 காட்டு யானைகள்; வனத்துறையினர் எச்சரிக்கை

ஆந்திராவுக்குள் புகுந்த 70 காட்டு யானைகள்; வனத்துறையினர் எச்சரிக்கை

1 mins read
28c57e44-2d0a-4307-a7be-e1b83be70b79
படம் - ஊடகம்

சித்தூர்: கர்நாடகா மாநில எல்லையில் இருந்து ஆந்திராவின் குப்பம் பகுதிக்கு ஏறக்குறைய 70 யானைகள் கூட்டம் வந்ததாக கர்நாடக மாநில வனத்துறை அதிகாரிகளும் ஆந்திர மாநில காவலர்களும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, இரவு நேரத்தில் பொதுமக்கள், விவசாயிகள் என யாரும் தனித்துச் செல்லவேண்டாம் எனவும் மாலை நேரமானதும் அவரவர்களும் வீட்டிலேயே இருக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்களைக் காவலர்களும் வனத்துறையினரும் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், யானைகள் கூட்டம் எப்போது தங்கள் விவசாய நிலங்களுக்கு வந்து சேதப்படுத்துமோ, தங்களை தாக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள வி.கோட்டா மண்டலம் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மூன்று எல்லைகள் ஒன்றாக சேரக்கூடிய பகுதியாகும்.

கடந்த ஒரு வாரமாக இந்த வி.கோட்டா மண்டலத்தில் உள்ள 13 கிராமங்களில் ஏகப்பட்ட யானைகள் சுற்றி வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் புகார் அளித்துள்ளனர்.

யானைகள் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி வருவதாகவும் இதனால் பல லட்ச ரூபாய் முதலீட்டில் பயிரிடப்பட்ட விளைநிலங்கள் அனைத்தும் அழிந்து வருவதாகவும் இதற்குத் தீர்வு காணவேண்டும் என்றும் கிராம மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

யானைகளைத் தங்கள் பகுதிகளுக்குள் வரவிடாமல் மீண்டும் வனப்பகுதிக்கு அனுப்பும் பணியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபடவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்