புதுடெல்லி: மதுபான முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணைக்கு டிசம்பர் 21 ஆம் தேதி நேரில் முன்னிலையாக வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பி உள்ளது.
இந்த முறைகேடு தொடர்பான வழக்கில் ஏற்கெனவே டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். அவரிடம் சிபிஐ பல மணி நேரம் விசாரணை நடத்தியது. அதன் முடிவில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கையால் பலனடைந்த ஒரு தரப்பினர் கோடிக்கணக்கான ஊழல் பணத்தை கோவா உள்ளிட்ட பிறமாநில தேர்தல் பிரசார செலவுக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு திசை மாற்றியதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் அம்முறைகேடு வழக்கு விசாரணைக்கு நேரில் முன்னிலையாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. எனினும் அவர் முன்னிலையாகவில்லை. அமலாக்கத்துறையின் அழைப்பாணையை மூன்று முறை தவிர்க்கும் பட்சத்தில், ஒருவருக்கு எதிராக கைது ஆணையை பிறப்பிக்க முடியும்.
கடந்த ஏப்ரல் மாதமே கெஜ்ரிவாலிடம் சிபிஐ ஒன்பது மணிநேரம் விசாரணை நடத்தியது. தற்போது சிபிஐ மட்டும் அல்லாமல் அமலாக்கத்துறையும் நெருக்கடி அளிக்கத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே, டெல்லி சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அம்மாநில முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலை சந்தித்துப் பேசினார்.
இருவரும் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து அமைத்துள்ள இண்டியா கூட்டணி குறித்து ஆலோசித்தனர்.
இண்டியா கூட்டணியின் முக்கியத் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை சந்திப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கு முன்பே டெல்லி முதல்வரை சந்தித்துள்ளார் தமிழக முதல்வர்.

