நாடாளுமன்ற அத்துமீறல் : அறுவரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த திட்டம்

நாடாளுமன்ற அத்துமீறல் : அறுவரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த திட்டம்

1 mins read
4b8a6ca7-455d-437a-a34c-afb899ecf630
படம் - தமிழ் முரசு
Google News Preferred Icon

புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் தொடர்பில் கைது செய்யப்பட்ட அறுவரிடம் உண்மை அறியும் சோதனை நடத்த புதுடெல்லி காவல் துறை, பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளது.

காவல் துறை சார்பாக முன்னிலையான அரசு வழக்கறிஞர் அகாந்த் பிரதாப் சிங், “முன்கூட்டியே திட்டமிட்டு இந்த அத்துமீறல் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்தார். இதில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான புலன் விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் தொடர்பில் விசாரணையை கூடுதல் அமர்வு நீதிபதி ஹர்தீப் கவுர் ஜனவரி 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நாடாளுமன்றத்தில் டிசம்பர் 13ஆம் தேதி, பார்வையாளர்களாக நுழைந்த சாகர் சர்மா, மனோரஞ்சன் இருவரும் திடீரென மக்களவைக்குள் நுழைந்து புகைக் குப்பிகளிலிருந்து புகையை பரப்பினர். இவர்களுக்கு உதவியாக அமோல் ஷிண்டே, நீலம் ஆகிய இருவர் நாடாளுமன்றத்துக்கு வெளியே அதேபோன்ற புகைக் குப்பிகளிலிருந்து புகை வீசி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இதையடுத்து இந்த சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட லலித் ஜா உட்பட 6 பேரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதுடெல்லி காவல் துறை கைது செய்தது. இவர்களுக்கு, ஜனவரி 5ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர்களிடம் உண்மை அறியும் சோதனை நடத்த காவல் துறை அனுமதி கோரியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களை சம்பவ இடங்களுக்கு அழைத்துச் சென்று காவல் துறை விசாரணை நடத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்