புதுடெல்லி: கடந்த 2023ஆம் ஆண்டு ‘பிரீ கேஜி’ முதல் 2ஆம் வகுப்பு வரை மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதனை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையை தமிழகம் உள்பட பல மாநிலங்கள் அமல்படுத்தவில்லை.
இந்த சூழலில் 2024-25ஆம் கல்வி ஆண்டு வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு சுற்றறிக்கையை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
அதில், பிரீ கேஜிக்கு மூன்று வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும், எல்கேஜி எனில் நான்கு வயதும், யுகேஜி எனில் ஐந்து வயதும் பூர்த்தி ஆகி இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் எனில் மாணவர்களுக்கு ஆறு வயது நிரம்பியிருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 3, 4, 5 ஆகிய வகுப்புகளுக்கு வரும் கல்வியாண்டில் புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட சில அம்சங்களால், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் புதிய கல்விக் கொள்கையை ஏற்கவில்லை. இதனால் இந்த மாநிலங்களில் இந்த திட்டம் இதுவரை அமல்படுத்தப்படவில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை 1ஆம் வகுப்பில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான வயது வரம்பு 5 என்ற பழைய நடைமுறையிலேயே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
புதிய கல்விக்கொள்கையின்படி 1 முதல் 5ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் மாணவர்கள் கல்வி பயில வேண்டும். மேலும் மூன்று ஆண்டுகள் அங்கன்வாடி அல்லது கேஜி வகுப்புகளும், 12 ஆண்டுகள் வழக்கமான கல்வியும் பயில வேண்டும்.
கடந்த 1948ம் ஆண்டு முதல்முறையாக கல்விக்கொள்கை வகுக்கப்பட்டது. அதன் பின்னர் 2020ம் ஆண்டு வரை 8 முறை கல்விக்கொள்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 2020ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானி கஸ்தூரி ரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம், புதிய கல்விக்கொள்கைக்கான பரிந்துரைகளை அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

