சமூகத்தில் நிலைத்தன்மைமிக்க தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்நுட்பங்களை ஆதரித்து, அவற்றைச் சந்தைக்குக் கொண்டுவர உதவுகிறது என்யுஎஸ் என்டர்பிரைஸ், சிங்கப்பூர் சமூகநோக்கு வர்த்தகங்களுக்கான நிலையம் (ரெய்ஸ் சிங்கப்பூர்) இணைந்து வழங்கும் ‘டிஎஸ்2’ விரைவாக்கத் திட்டம்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் தொழில்முனைவோர், பத்து வாரங்களில் முறையான வழிகாட்டுதல் மட்டுமன்றி முதலீட்டாளர்களுடனான அணுகலையும் பெறுகின்றனர்.
2024ல் இத்திட்டம் தொடங்கியபோது ஏழு வர்த்தகங்கள் ஆதரவுபெற்று ஜப்பான், வியட்னாம், இந்தோனீசியா போன்ற சந்தைகளுக்கு விரிவடைந்தன.
இவ்வாண்டு இத்திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து நிறுவனங்கள் தலா $100,000 ஆதரவைப் படிப்படியாகப் பெறவுள்ளன. நவம்பர் 25ஆம் தேதி தெமாசெக் கடைவீட்டில் அவை முதலீட்டாளர்களிடம் தங்கள் தொழில்நுட்பங்களைக் காட்சிப்படுத்தின.
“நாங்கள் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளாக ஆரம்பகட்ட நிறுவனங்களில் கவனம் செலுத்துகிறோம். வர்த்தகத்தைத் தொடங்கும்போதே அவர்கள் சமூகச் சிந்தனையையும் உட்புகுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என்றார் ரெய்ஸ் சிங்கப்பூர் உதவித் தலைமை நிர்வாகி சுபாஷினி பாலகிருஷ்ணன்.
பேச இயலாத குழந்தைகள் பிறருடன் தொடர்பு ஏற்படுத்த வழிவகுக்கும் நிறுவனம், கதை சொல்லுதலையும் விளையாட்டையும் இணைத்து கற்றல் அனுபவத்தை மேம்படுத்தும் நிறுவனம், சிங்க நடனத்தைத் தொழில்நுட்பம்மூலம் கற்பிக்கும் நிறுவனம் போன்றவை இவ்வாண்டு பங்கேற்றன.
மனநல அறிகுறிகளைக் கைப்பேசிமூலம் உணர்தல்
மனநலப் பிரச்சினைகள் தலைதூக்கும் முன்பே அவற்றுக்கான அறிகுறிகளைக் கண்டறிந்து தக்க சமயத்தில் உதவி நல்குகிறது ‘யுனிவர்சல் ஹெல்த்’ நிறுவனத்தின் புதிய செயலி ‘W3LL கம்பேனியன்’.
மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தம் தாயார், தமக்கு மனநலப் பிரச்சினை உள்ளதை ஒருபோதும் ஒத்துக்கொள்ளாததை இன்றுவரை நினைவுகூர்கிறார் யுனிவர்சல் ஹெல்த் தலைமை நிர்வாகி கிளேரா சன்.
தொடர்புடைய செய்திகள்
தாயாருக்குத் தெரியாமல் அவர் உட்கொள்ளும் உணவில் மனச்சிதைவு நோய்க்கான மருந்தைக் கலக்கவேண்டியிருந்தது. ஆயினும், கிளேராவுக்கு சிறுவயதாக இருந்தபோதே அவரின் தாயார் உயிரை மாய்த்துக்கொண்டார்.
அந்த ஆறாத வடு, மனநலப் பிரச்சினைகளை ஆரம்பகட்டத்திலேயே அடையாளங்கண்டு ஆதரிக்க வேண்டும் என்ற தீராத முனைப்பை கிளேராவிடத்தில் விதைத்தது.
சுகாதாரத் துறையில் நெடுங்காலம் பணியாற்றிவந்த நீரஜ் கோத்தாரியுடன் ஒரு தற்செயலான சந்திப்பால் அமைக்கப்பட்டது யுனிவர்சல் ஹெல்த். ‘W3LL கம்பேனியன்’, எனும் மனநலம் தொடர்பான செயலியை அவர்கள் உருவாக்கினர்.
தமக்கு இருக்கும் மனநலப் பிரச்சினையை ஒருவர் தாமாகக் கண்டறியாவிட்டாலும் அச்செயலி கண்டறிந்துவிடும்.
2016லிருந்தே திரு நீரஜ், கைப்பேசிமூலம் ஒருவரின் ஆரோக்கியத்தைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வந்துள்ளார். 2023ல் ஏஸ்டார் அமைப்புடன் இணைந்து புதிய தொழில்நுட்பம் ஒன்றை உருவாக்க கூட்டுமுயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. 2019 முதல் 2024 வரை மருத்துவமனைச் சோதனைகளும் நடைபெற்ற பின்பே யுனிவர்சல் ஹெல்த் நிறுவப்பட்டது.
“கைப்பேசியில் ஜிபிஎஸ் ரிசீவர், ஆக்சலரோமீட்டர் போன்ற உணர்கருவிகள் உள்ளன. உங்கள் இருப்பிடத்தை வைத்தே நீங்கள் வேலைக்குச் சென்றீர்களா, நலமாக உள்ளீர்களா, கைப்பேசிப் பயன்பாட்டை வைத்து நீங்கள் சரியாகத் தூங்குகிறீர்களா என்பதை அறியலாம்.
“இதன்மூலம், உங்களுக்கு மனவுளைச்சல் அதிகமானால் அதை அடையாளம் கண்டு, எங்கள் செயலிவழி அன்றாடப் பரிந்துரைகளை வழங்குகிறோம்,” என்றார் திரு நீரஜ்.
10,000 ஊழியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 71 விழுக்காட்டினர் இத்தகைய சிறு சிறு மனநலப் பரிந்துரைகளுக்குப் பணம் செலுத்தத் தயாராக உள்ளதாகவும் தெரியவந்தது.
‘W3LL கம்பேனியன்’, செயலியை கூகல் பிளே ஸ்டோரில் பதிவிறக்கலாம். ஆப் ஸ்டோரிலும் அது விரைவில் அறிமுகம் காணவுள்ளது.

