மலேசிய, சிங்கப்பூர்ப் பாடகர்கள் இணைந்து வழங்கிய இசைவிருந்து, இளங்கோவனின் படைப்பாற்றல், முஸ்தஃபாவின் நகைச்சுவை, ரஜினி சுரேஷ் - வாணிஸ்ரீ நடனம், அறுசுவை உணவு போன்றவற்றுடன் இனிதாக நடைபெற்றது கேலாங் சிராய் சமூக மன்றத்தின் தீபாவளிக் கலைவிழா.
சனிக்கிழமை (நவம்பர் 22) நடந்த நிகழ்ச்சியை கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழு (ஐஏஇசி), பெண்கள் செயற்குழு, ‘ஐஎன்சி’ ஆகியவை யூனோஸ் வில்லேஜ், டாய் கெங் கார்டன்ஸ், கேலாங், ஹேக் ரோடு - தஞ்சோங் காத்தோங் குடியிருப்பாளர் குழுக்களுடன் இணைந்து ஏற்பாடுசெய்தன.
மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதி அடித்தள ஆலோசகராக முதன்முறையாகத் தீபாவளிக் கலைவிழாவில் கலந்துகொண்டார் திருவாட்டி டயானா பாங்.
“எஸ்ஜி60ஐக் கொண்டாடும் தருணத்தில், வலுவான, நல்லிணக்கமிக்க பல்லினச் சமூகத்தை உருவாக்கியதில் நம் நாடு அடைந்துள்ள வெற்றியைக் கொண்டாடும் விதமாக இக்கொண்டாட்டம் அமைகிறது,” என்றார் கேலாங் சிராய் இந்தியர் நற்பணிச் செயற்குழுத் துணைத் தலைவரும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருமான முஹம்மது மாலிக்.
“தீபாவளி என்பது, ஒரு சிறு ஒளியால் ஆழ்ந்த இருளை விலக்கமுடியும் என்பதை நினைவூட்டுகிறது. நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரது வாழ்விலும் ஒளியாக இருக்கவேண்டும்,” என்றார் திருவாட்டி டயானா.
“நான் 40 ஆண்டுகளாக ரஜினிபோல் வேடமிட்டு, அவரது பாடல் காட்சிகளை நடித்துவருகிறேன். சிங்கப்பூர் ரசிகர்கள் ரஜினியை எப்படி ரசிக்கிறார்களோ அதேபோல் என்னைப் போன்ற கலைஞர்களையும் ரசிக்கிறார்கள்,” என்றார் மலேசியாவைச் சார்ந்த ரஜினி சுரேஷ்.
“கேலாங் செராயில் நான் பாடியது இதுவே முதல் முறை. மலாய், சீன, தமிழ் மக்கள் பலரும் வந்திருந்தனர். அவர்கள் முன்னிலையில் பாடியது நன்றாக இருந்தது,” என்றார் 20 ஆண்டுகளாகப் பாடிவரும் சிங்கப்பூர்ப் பாடகர் ரமேஷ். அவருடன் சேர்ந்து பாடினார் சிங்கப்பூர்ப் பாடகி மலர்விழி.
சரிகமப பருவம் 4ல் போட்டியிட்டு இறுதிச் சுற்றுகள்வரை முன்னேறிய அருளினி ஆறுமுகம், ‘இசை யுத்தம்’ போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற சக்தி பிரியா இளங்கோவன், ‘தணேஸ் அண்ட் பேண்ட்’ இசைக்குழுவை நடத்தும் தணேஸ் போன்ற மலேசியக் கலைஞர்களும் இன்னிசைப் பாடல்கள் பாடினர்.
தொடர்புடைய செய்திகள்
ஏழு வயதில்தான் பேசத் தொடங்கிய அருளினிக்கு இசைதான் பேராதரவாக இருந்தது. அவருக்கு ‘ஆட்டிசம்’ குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார். இசையுலகுக்கு அப்பால், ‘சாட்சி’ எனும் தொலைக்காட்சித் தொடர் மூலம் அண்மையில் நடிப்பிலும் இவர் கால்பதித்துள்ளார்.
“இந்தப் பயணத்தில் தொடர்ந்து பிறருக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். என்னைப் போன்றோர் எந்நாட்டிலிருந்து வந்தாலும், அவரவர் நாட்டைப் பிரதிநிதிக்கவேண்டும் என்பதே என் ஆசை,” என்றார் அருளினி.
மதியிறுக்கத்தால் பாதிக்கப்பட்டோரிடம் கனிவன்புடன் நடந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார் அருளினி. இவர் சிங்கப்பூருக்கு வந்துள்ளது இது முதன்முறையன்று. மெர்லையனைக் காண்பதும் வாத்துச் சோறு (Duck rice) உண்பதும் தமது விருப்பங்கள் என்கிறார் இவர்.
“நான் ஏழு வயதிலிருந்து பாடுகிறேன். என் பெற்றோரும் பாடுவர். 90களில் ‘புதிய ராகம்’ எனும் புகழ்பெற்ற இசைக்குழுவில் என் தந்தை பாடினார்,” என்றார் ‘சந்திரலேகா’ பாடலைப் பாடிய சக்தி பிரியா இளங்கோவன்.

