பெரானாக்கான் உணவு வகைகளோடு அறுசுவை சைவ விருந்து

3 mins read
44b7ba2c-886a-4fb4-8994-c87d5521ac21
ஆல்ஸ்பைஸ் சமையல் பள்ளியில் நடந்த பெரனக்கன் உணவு விருந்து. - படம்: ரவி சிங்காரம்

‘புவா கலுவாக்’ உள்ளிட்ட பல பெரானாக்கான் உணவுவகைகளைச் சுவைக்கும் வாய்ப்பை மக்களுக்கு வழங்கியது, சிங்கப்பூர் பெரானாக்கான் இந்தியர் (சிட்டி மலாக்கா) சங்கமும் ஆல்ஸ்பைஸ் சமையல் பள்ளியும் சனிக்கிழமை டிசம்பர் 7ஆம் தேதி பிற்பகல் இணைந்து நடத்திய நிகழ்ச்சி.

புவா கலுவாக் (கறுப்பு), சிட்டி ரண்டாங்குடன் சைவ உருண்டைகள், ரொட்டி ஜாலா, சமோசா.
புவா கலுவாக் (கறுப்பு), சிட்டி ரண்டாங்குடன் சைவ உருண்டைகள், ரொட்டி ஜாலா, சமோசா. - படம்: ராஜே‌ஷ் ‌‌‌ஷா

டோக் பாஞ்சாங் (Tok Panjang) பாணியில், ஒரு நீண்ட மேசையில் சுமார் 50 பேர் ஒன்றாக அமர்ந்து ஒரு பெரிய பெரானாக்கான் குடும்பமாக உண்டனர்.

தென்னிந்திய வேர்களைக் கொண்ட சிட்டி மலாக்கர்கள், சீன வேர்களைக் கொண்ட பாபா - நியோன்யா (சீனப் பெரானாக்கான்) என இரு வகையான பெரனக்கன் சமூகத்தினரின் தனிப்பட்ட உணவுகளையும் ஒருசேர சுவைக்க முடிந்தது.

சிங்கப்பூரில் பெரானாக்கான் உணவகங்கள் இருப்பினும், சிட்டி மலாக்கா உணவுகளுக்கென தனிப்பட்ட உணவகங்கள் இல்லை. தம் இல்லத்திலிருந்து சமைப்போரே உள்ளனர். அதனால், இதுபோன்ற நிகழ்ச்சிகள் சிட்டி மலாக்கா உணவுகளை மக்களுக்குக் கொண்டுசெல்கின்றன.

ஆல்ஸ்பைஸ் கழகத்தின் சமையல் நிபுணர் அனூப் குமாரும் சிட்டி மலாக்கா சமூகத்தின் இல்லச் சமையல்காரர்களும் இணைந்து உணவுவகைகளைச் சமைத்தனர்.

சென்ற ஆண்டு வெளியான சிட்டி மலாக்கா சமையல் குறிப்பு நூலிலிருந்த சில உணவுகள் இந்நிகழ்ச்சிக்கென தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனால், ஒரு பெரிய வித்தியாசம்… அனைத்தும் முற்றிலும் சைவம் (Vegan). அதற்குக் காரணம், புகழ்பெற்ற விலங்கியல் நிபுணரான டாக்டர் ஜேன் குடோலின் தாக்கம்.

“இதே நாள் காலையில் டாக்டர் குடோல், ஆல்ஸ்பைஸ் கழகத்துக்கு ஒரு சைவ விருந்துக்காக வந்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இவ்விருந்தையும் சைவமாக மாற்ற தீர்மானித்தோம்,” என்றார் சிங்கப்பூர் பெரானாக்கான் இந்தியர் (சிட்டி மலாக்கா) சங்கத் தலைவர் பொன்னுசாமி காளஸ்திரி, 76.

அதனால், கோசுக்கிழங்கு (turnip), காய்கறிகள், இறால் முதலானவற்றை உள்ளடக்கும் ‘குவே பை டீ’ (Kueh Pie Tee) எனும் பெரானாக்கான் உணவில், முட்டை நிரம்பிய ஓடுகளுக்குப் பதிலாக பானிபூரி பயன்படுத்தப்பட்டது; இறால் நீக்கப்பட்டது.

சிட்டி மலாக்கா சமையலில் முக்கியம்வாய்ந்த ‘சிட்டி சிக்கன் ரண்டாங்’கின் கோழிக்குப் பதிலாக சைவ உருண்டைகள் சிட்டி ரண்டாங், ரொட்டி ஜாலாவுடன் வழங்கப்பட்டன. லாவுக் சம்பூர் சம்பூர் (Lauk Champur Champur), மீ குனிங் டாவ்சியூ (Mee Kuning Tauchiew), சமோசாக்கள் என அறுசுவை உணவுகளை மக்கள் சுவைத்தனர்.

மீ குனிங் டாவ்சியூ.
மீ குனிங் டாவ்சியூ. - படம்: ரவி சிங்காரம்

வறுத்த தேங்காய் சேர்க்கப்பட்டு, இனிப்புப் பாசிப்பயிறு நிரம்பிய அரிசி உருண்டைகள் (Tepong Gomak), தேங்காய்ப் பால் நிரம்பிய நியோன்யா கேக் (Kueh Bingka Ubi) ஆகிய இனிப்புவகைகளும் இருந்தன. செம்பருத்தி பானமும் மசாலா தேநீரும் விருந்தை முடித்துவைத்தன.

‘பரச்சு’(Parachu) எனும் சிட்டி மலாக்கா படையலும் காட்சிக்கு இருந்தது. அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார் திரு பொன்னுசாமி.

“பரச்சு’ என்பது நம் முன்னோர்களுக்கான தொழுகை. அவர்களை வழிபட்டு, அவர்களுக்குப் பிடித்த உணவை வாழையிலையில் படைப்போம். இந்த வழக்கம் எந்தவொரு சமயத்தையும் சார்ந்ததன்று. இது சிட்டி மலாக்கர்களின் வழக்கம்.

முன்னோர்களுக்காக சிட்டி மலாக்கர்கள் ‘பரச்சு’ எனும் படையலைப் படைத்து வழிபடுகின்றனர்.
முன்னோர்களுக்காக சிட்டி மலாக்கர்கள் ‘பரச்சு’ எனும் படையலைப் படைத்து வழிபடுகின்றனர். - படம்: ரவி சிங்காரம்

“நம் இளம் தலைமுறையினரும் மூதாதையருக்கு மரியாதை செலுத்துவதை என்றும் மறக்கக்கூடாது. எதிர்காலத்தில், ஒரு பெரிய இடத்தில் ஒன்றாகக் கூடி முன்னோர்களை வழிபடவும், டோக் பாஞ்சாங் வடிவில் உண்ணவும் பரிந்துரைக்கிறேன்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்