சிங்கப்பூரின் லாசால் கலைக் கல்லூரி அண்மையில் தனது நாற்பதாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது.
அதனையொட்டி, அக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட பலர் லாசால் குறித்த தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டனர்.
லாசால் கலைக்கல்லூரியின் ஆசியக் கலை வரலாறுகள் வகுப்பின் முன்னாள் மாணவரும், நாடாளுமன்ற நியமன உறுப்பினருமான உஷா சந்திரதாஸ் கலை சார்ந்த தமது பயணத்தில் கல்லூரி அளித்த பல்வேறு வாய்ப்புகளைப் பதிவுசெய்தார்.
“கலைகளுக்கும் புத்தாக்கத் தொழிற்துறைகளுக்கும் லாசால் என்னை அறிமுகம் செய்தது. என்னுடன் இணைந்து கலை சார்ந்த சஞ்சிகையான ‘ப்ளூரல் ஆர்ட் மேக்’ (PluralArtMag) துவங்கத் துணைபுரிந்த வகுப்புத் தோழர்களை இங்குதான் சந்தித்தேன்,” என்றார் திருவாட்டி உஷா.
உலகப் புகழ்பெற்ற கலைஞர்களைச் சந்திக்கவும், அனைத்துலக அளவில் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவும் கல்லூரி வாய்ப்புகள் அளித்ததை நினைவுகூர்ந்த திருவாட்டி உஷா, வளர்ந்துவரும் கலைஞர்கள், துறைசார்ந்த மாணவர்கள் பற்றியும் குறிப்பிட்டார்.
“கலை சார்ந்த வாழ்க்கைத் தொழிலைத் தொடர்வது சில சமயங்களில் சவாலாக இருக்கலாம். ஆனால் நீங்கள் உண்மையிலேயே செய்ய விரும்புவது இதுதான் என்றால், படிப்பைத் தொடருங்கள். உங்கள் பணி முக்கியமானது,” என்றார் திருவாட்டி உஷா.
லாசால் கல்லூரியின் முன்னாள் முதுகலை மாணவரும் திரைப்படத் தயாரிப்பாளர், எழுத்தாளர், நாடகக் கலைஞர் எனப் பன்முகத் திறன்வாய்ந்த கலைஞருமான சலீம் ஹாதி, லாசால் தமக்கு ஓர் அழகான புகலிடம் என்றும் தமது கனவுகளுக்கு வடிவம் கொடுத்த கூடம் என்றும் கூறினார்.
“முதுகலை பயின்றபோது மறக்க முடியாத நினைவுகள் இருந்தபோதிலும் எனது கதைப் படைப்பிற்காக தங்கமுனை விருது பெற்றது குறிப்பிடத்தக்கத் தருணம்,” என்றார் சலீம்.
லாசாலின் கல்வி அமைப்பும் சமூகமும் புதிய சாத்தியக்கூறுகளைத் தொடர்ந்து உருவாக்கி வருவதாகக் குறிப்பிட்ட சலீம், தற்போதைய மாணவர்கள் அல்லது வளர்ந்துவரும் கலைஞர்கள் என யாராக இருப்பினும், அவர்கள் கொண்டிருக்கும் அழகியக் கனவுகளை மற்றவர்களிடமிருந்தும் பாதுகாப்பின்மை, பயம் போன்ற தத்தம் உணர்வுகளிலிருந்தும் காத்திட வேண்டும் என்றார்.
துணிவும், கற்பனையுமே லாசால் மாணவர்களை வரையறுக்கின்றன என்றார் லாசால் கலைக்கல்லூரியின் தலைவர் பீட்டர் சியா.
“எம்ஆர்டி பயணத்தில் அல்லது வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைகளில் சுற்றிலும் நீங்கள் காணும் அடையாளங்கள், கலைப்படைப்புகள் முதல் ஒவ்வொரு தேசிய தினத்திலும் நாம் பாடும் பாடல்கள் வரை, லாசால் ஏற்படுத்திய தாக்கத்தை அனைத்து சிங்கப்பூரர்களின் வாழ்விலும் உணர முடியும்,” என்றார் திரு சியா.
லாசாலின் 40ஆம் நிறைவுவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அதிபர் தர்மன் சண்முகரத்னம், “லாசால் கல்லூரி, பங்காளிகளுடன் இணைந்து கலைகள் எவ்வாறு பொருளாதாரப் புதுமைகளைத் தூண்டி சமூக நலனை மேம்படுத்த உதவுகிறது என்பதைக் காட்டுகிறது,’’ என்று கூறினார்.
சிங்கப்பூரில் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லாசால் கலைக்கல்லூரி கலாசாரப் பதக்கம், இளம் கலைஞர் விருது போன்றவற்றைப் பெற்ற எண்ணற்ற புகழ்மிக்க கலைஞர்களைக் கலைத்துறைக்கு அளித்துள்ளது. லாசாலின் நாற்பதாம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் 2025ஆம் ஆண்டிலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


