தசைநார், எலும்புநார், மூட்டுகள் வலுவாக...

2 mins read
a527b833-7d02-42df-b0c2-a22809c2fddb
தசைநார், எலும்புநார், மூட்டுப் பயிற்சிகளை எளிமையாக, வீட்டிலிருந்தபடியே செய்யலாம். - படம்: பிக்சாபே

உடல் எடையைக் குறைப்பதற்கும் மேம்பட்ட உடல்நலத்திற்கும் உடற்பயிற்சிகள் பல இருப்பினும் மூட்டு (joint), எலும்புகளைப் பிணைக்கும் எலும்புநார் (ligament), தசையை எலும்புடன் பிணைக்கும் தசைநார் (tendon) போன்ற உடல் உறுப்புகளுக்குத் தனிக் கவனம் தேவை. 

தசைநார், எலும்புநார், மூட்டுகளை நலமாக வைத்திருக்க உடற்பயிற்சி அவசியம்.

வயது ஏற ஏற, உடல் தசைகளை எலும்புகளுடன் இணைக்கும் தசைநார் காலப்போக்கில் கடினமாகி, எளிதில் சேதமுறலாம். குறிப்பாக, முழங்கால், முழங்கை, குதிகால் தசைநார் (Achilles tendon) போன்றவற்றுக்கு நாளடைவில் அதிக பாதிப்பு ஏற்படலாம்.

தசைநார் காயங்களைத் தடுக்க மெதுவான எடையுடன் கூடிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக, அமர்ந்துகொண்டே கெண்டைக்காலை மெதுவாக உயர்த்தும் பயிற்சியை மேற்கொள்ளலாம். படிப்படியாக, கையில் ஓர் எடையை அல்லது ‘டம்பெல்’லைப் பிடித்துக்கொண்டே தசையை வலுவாக்கும் இப்பயிற்சியைத் தொடரலாம். 

மேல்கைத் தசைகளுக்கு கையில் ஓர் எடை அல்லது ‘டம்பெல்’ பிடித்துக்கொண்டு மெதுவாக மேலும் கீழும் அசைக்கலாம். வசதிக்கேற்ப எடையை அதிகரித்து இந்தப் பயிற்சியைச் செய்யலாம். 

எலும்புகளைப் பிணைக்கும் எலும்புநார் உடலை உறுதியாக வைக்க உதவுகிறது. தசைநார்கள் போலன்றி, எலும்புநார் அதிகப்படியான பயன்பாட்டால் சிதைவதில்லை. மாறாக, அவை திடீரென சேதமடையும் வாய்ப்புகள் அதிகம். மேலும், எலும்புநார்க் காயங்கள் உடலில் உள்ள நரம்புகளையும் பாதிக்கும். 

எலும்புநார்க் காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள், அதன் உறுதித்தன்மையை மீண்டும் பெற குறைந்த எடை கொண்ட உடற்பயிற்சிகளைப் பலமுறை செய்யலாம். 

எடுத்துக்காட்டாக, கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டிருந்தால், அக்காலை அசைக்காமல் உயர்த்தி, மற்றொரு காலில் நிற்பது நன்று. வலி குறையும்வரை இந்தப் பயிற்சியைத் தொடரலாம். சுளுக்கு போன்ற எலும்புநார்க் காயங்களைச் சரிசெய்யவும் உடலை மீண்டும் உறுதியாக்கவும் இந்த உடற்பயிற்சி உதவுகிறது. 

முழங்கால், முழங்கை, இடுப்பு போன்ற மூட்டுகள் நாளடைவில் விறைப்புத்தன்மை (stiff joints) அடைந்து, பிறகு அழற்சி ஏற்படுகிறது. இதை தவிர்க்க, அடிக்கடி அவற்றை அசைக்க வேண்டும்.  

இடுப்பு, தோள்பட்டைகளை அசைப்பது, சிறிது எடை அல்லது ‘டம்பெல்’ பிடித்துக்கொண்டே மணிக்கட்டுகளை அசைப்பது, யோகா, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகள் மூட்டுகளை வலுவாக்கும். 

தசைநார், எலும்புநார், மூட்டுப் பயிற்சிகளை எளிமையாக வீட்டிலிருந்தபடியே செய்யலாம். இருப்பினும், எந்த ஓர் உடல்நலப் பிரச்சினைக்கும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

குறிப்புச் சொற்கள்