உறக்கம் என்பது வரம் என்பார்கள் ஆனால், சாபமாக அமைந்துவிட்டது இருபது வயதே நிரம்பிய அழகிய பெண்ணுக்கு. நிக்கோல் எனும் இந்த 'ஸ்லீப்பிங் பியூட்டி' தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் போராடி வாழ்ந்து வருகிறார். ஒருமுறை உறங்கினால் இவர் எழுந்திருக்க மாதங்கள் ஆகின்றன. 'கேஎல்எஸ்' எனப்படும் 'க்ளீன் லெவின் சிண்ட்ரோம்' நோயால் பாதிக்கப் பட்டுள்ளார் அவர். நரம்பியல் சார்ந்த அரியவகை உறக்கக் குறைபாடு இது. இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு 24 மணிநேரமும் யாராவது உடன் இருந்து கவனித்துக்கொள்ள வேண்டும்.
ஆறு வயதில் நாள் ஒன்றுக்கு 18 மணி நேரம் நிக்கோல் தூங்கியதைக் கண்ட அவரது தாயார் சந்தேகமுற்று மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அந்தச் சின்ன வயதில் தனக்கு என்ன நேர்கிறது என்பது கூட நிக்கோலுக்குத் தெரியாது. தூங்கி எழும்போது தனது தாய், உறவினர் போன்றவர்களைக் கண்டு உணரவே இவருக்குச் சற்று சிரமமாக இருந்தது. அவரது 14வது வயதில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. நவம்பர் மாதம் 24ஆம் தேதி உறங்கத் தொடங்கிய அவர், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் கண் விழித்தார். இதற்கு இடையே என்ன நடந்தது என்பது இவருக்குத் தெரியாது. நிக்கோலின் இந்த மயக்கநிலை உறக்கம் சார்ந்த குறைபாட்டிற்கு 25 மாதகாலம் சிகிச்சை அளித்தனர் மருத்துவர்கள். பொதுவாக நிக்கோல் நீண்டநாள் உறங்கப் போகிறார் என்பதை அவருக்குத் திடீரென வரும் தலைவலி மற்றும் மந்தமான நிலையை வைத்து அறிந்துகொள்ள முடியுமாம்.
தினமும் குறைந்தது 18 மணி நேரம் வரை தூங்கும் நிக்கோல் 22 முதல் 64 நாட்கள் வரை தொடர்ந்து தூங்கக்கூடியவர். படம்: இணையம்