இசைச்சுவையுடன் நகைச்சுவை

வாழ்க்கை முழுவதும் நிரந்தர வேலையை தக்கவைத்துக்கொள்ள விரும்புவோர் மத்தியில் 15 ஆண்டுகளுக்கு கணினி மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்த அலக்ஸாண்டர் பாபு தமது 39 ஆவது வயதில் முழு நேர நகைச்சுவையாளரானார்.

அதனைத் தொடர்ந்து கடந்த நான்கு ஆண்டுகளில் கனடா(canada), அமெரிக்கா போன்ற நாடுகளில் கிட்டத்தட்ட 300 நகைச்சுவை நிகழ்ச்சிகளைத் தந்த அவர் சிங்கப்பூரில் தமது நகைச்சுவை திறனால் சிங்கப்பூரர்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கப் போகிறார்.

சிறு வயதிலிருந்தே நகைச்சுவையை மிகவும் விரும்பிய அவருக்கு பத்தாம் வகுப்பு வரை வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால் தமக்குப் பிடித்த பிரபலங்களான எஸ் வி சேகர், விவேக் ஆகியோரின் நகைச்சுவைகளை 'ஆடியோ கேசட்டுகளின்' மூலம் கேட்டு இன்புறுவார்.

அவ்வப்போது திரையரங்குகளில் தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்து வந்த அவர் தேவர் மகன் திரைப்படத்தில் இடம்பெற்ற நகைச்சுவைக் காட்சிகள் தம்மை அதிகம் கவர்ந்ததாகக் கூறினார். மேலும் விவேக், வடிவேலு போன்ற திறமையான நகைச்சுவைப் பிரபலங்களின் நடிப்புத் திறனையும் கண்டு ரசிப்பார். நடிப்பு, இசை, நகைச்சுவை ஆகிய மூன்று அம்சங்களிலும் அதீத நாட்டத்தை கொண்ட அலக்ஸாண்டர் தனிகுரல் நகைச்சுவையின் மூலம் அவற்றை ஒரே மேடையில் படைக்க நான்கு ஆண்டுகளுக்கு முன்பு முடிவுச் செய்தார். 

ராமநாதபுரத்தில் பிறந்த அலக்ஸாண்டர்  தமது நகைச்சுவை கலையை பல இன மக்களிடம்  பகிர ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டார். 'டோஸ்ட் மாஸ்டர்ஸ்' அனைத்துலக அமைப்பில் மூன்று ஆண்டுகளுக்கு பொது இடத்தில் உரையாடுவதற்கான திறனை வளர்த்துக்கொண்டார். அதற்கிடையில் வாரந்தோறும் இந்தியாவின் வெவ்வேறு பொது இடங்களில் தமது நகைச்சுவை அங்கங்களைப் படைத்து மெல்ல மக்களின் மனதில் இடம்பிடித்த அவர் தற்போது சிங்கப்பூரர்களை நகைச்சுவை மழையில் நனைய வைக்க சிங்கப்பூர் வருகிறார்.

ஆங்கிலமும் தமிழும் கலந்து  'அலக்ஸாண்டர் இன் வண்டர்லாண்ட்' எனும் தலைப்பில் அவர் படைக்கவிருக்கும் இந்நகைச்சுவை நிகழ்ச்சி தேசிய நூலகத்தின் 'டிராமா செண்டர் தியேட்டரில் வரும் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு இடம்பெறும்.இந்த இரண்டு மணி நேர நிகழ்ச்சி  மக்கள் தினசரி எதிர்கொள்ளும் வி‌‌ஷயங்களை அலசும் என்று தமிழ் முரசுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறினார் அலக்ஸாண்டர்,43.

தவில், ஹர்மோனியம் போன்ற இசைக் கருவிகளைக் கொண்டு இசையோடு கலந்த நகைச்சுவை நிகழ்ச்சியை சிங்கப்பூரில் படைக்கவிருக்கும் அலக்ஸாண்டர், கவலை மறந்து மகிழ்ச்சிக் கடலில் மிதக்க இது ஓர் அரிய வாய்ப்பு என்றும் ஏழு வயதிற்கு மேல் அனைத்து வயதினருக்கும் உகந்த படைப்பாக இது இருக்குமெனவும் குறிப்பிட்டார்.

ஏப்ரல் 20ஆம் தேதியன்று நடைபெறவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டுகளை வாங்க https://www.apactix.com/events/detail/alex-in-wonderland எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.