சுடச் சுடச் செய்திகள்

‘சூப்பர்’ சூர்யா

பல நாடுகளில் இருந்தும் திறமையான பாடகர்கள் பங்கேற்கும் ‘சூப்பர் சிங்கர்’ பாட்டுப் போட்டியில் இரண்டாம் பரிசை வென்று  சிங்கப்பூருக்குப் பெருமை சேர்த்துள்ளார் 13 வயது சூர்யா.
அட்மிரல்டி தொடக்கப் பள்ளி மாணவரான சூர்யா தொடக்கநிலை இறுதி ஆண்டுத் தேர்வுக்கு இரண்டு வாரங்கள் இருந்தநிலையில் சிங்கப்பூரில் சென்ற ஆண்டு நடந்த குரல்வள தேர்வுச் சுற்றில்  பங்கேற்றார்.
மொத்தம் 380 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட மூன்று தேர்வுச் சுற்றுகளிலும் தமிழ் திரைப்படப் பாடல்களைப் பாடி தேர்வானார் சூர்யா. தமது இறுதி ஆண்டுத் தேர்வுக்குப் பின் ‘சூப்பர் சிங்கர்’ போட்டியில் பாட   தமிழகம் சென்றார் சூர்யா.

ஏழு வயதிலிருந்தே தமது தாயார் திருமதி ஸ்வப்னா ஆனந்திடம் கர்நாடக இசை கற்று வருகிறார் சூர்யா.  
அக்டோபர் மாதம் தமது தாயாருடன் தமிழகம் சென்ற சூர்யா, தாத்தா ஏற்பாடு செய்து தந்த வீட்டில் ஏழு மாதங்கள் தங்கியிருந்து போட்டிக்காகப் பயிற்சி எடுத்தார்.
விறுவிறுப்பான பாடல்களால் ‘ராக் ஸ்டார்’ என்று நீதிபதிகளால் செல்லமாக அழைக்கப்பட்ட சூர்யா, அனைத்துச் சுற்றுகளையும் கடந்து இறுதிச் சுற்றுக்குத் தேர்வானார்.
பாட்டுத் திறனால் சிங்கப்பூரில் மட்டுமின்றி இந்தியாவிலும் ரசிகர்களை சம்பாதித்த சூர்யா, ஒவ்வொரு சுற்றிலும் தொடர்ந்து முன்னேற்றத்தைக் காண விடாமுயற்சியுடன் பயிற்சி செய்தார்.
அவருடைய பெற்றோரும் உறவினர்களும் தொடர்ந்து ஊக்கம் அளித்து அவரிடம் தன்னம்பிக்கையை வளர்த்தனர். ஒவ்வொரு வாரமும் இரண்டு நாட்கள் சுமார் 12 மணி நேரம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் சூர்யா. 

மாபெரும் இறுதிச்சுற்றில் சூர்யா ‘ஆரோமலே’, ‘கல்லூரிச் சாலை’ போன்ற பாடல்களைப் பாடி நீதிபதிகளின் பாராட்டையும் பெற்றார். “இந்தப் போட்டியின் மூலம் தமிழை எப்படி சரளமாக உச்சரிப்பது, ஸ்ருதியுடன் பாடுவது போன்ற பல உத்திகளைக் கற்றுக்கொண்டேன். கடின உழைப்பு, மேடையில் தன்னம்பிக்கையுடன் பாடுவது, மக்களுடன் தயக்கமின்றி பழகுவது என வாழ்க்கைக்குத் தேவையான பல நல்ல பண்புகளை நான் வளர்த்துக்கொண்டேன். இந்த வகையில் இப்போட்டி எனக்கு ஒரு நல்ல தளமாக அமைந்தது,” என்றார் சூர்யா.

வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைத் தேடித் தந்தவர், தற்பொழுது ஆண்டர்சன் உயர்நிலை பள்ளியில் உயர்நிலை ஒன்றில் பயில்கிறார்.  தமிழகத்தின் விஜய் தொலைக்காட்சி நடத்திய ‘சூப்பர் சிங்கர் 6’ பாட்டுப் போட்டியில் முதல் பரிசாக 50 லட்சம் ரூபாய் (சிங்கப்பூர் வெள்ளி $100,000) மதிப்புள்ள வீடு ஒன்றைப் பெற்றார் ஹிருத்திக். மூன்றாம் பரிசாக 10 லட்சம் ரூபாய் (சிங்கப்பூர் வெள்ளி $20,000) பரிசாகப் பெற்றார் சென்னையைச் சேர்ந்த பூவையார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon