அரேபிய இளவரசியாக ஆஸ்திரேலிய இந்தியர்

 

உலகின் பல நாடுகளில் தடம் பதித்து, தற்போது சிங்கப்பூரில் மேடையேற்றப்படும் அலாவுதீன் இசை நாடகத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் குமாரி சுபஸ்ரீ கந்தையா, 24. ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த இந்திய இனத்தவர் சுபஸ்ரீ. இவரது முன்னோர் மலேசியாவைச் சேர்ந்தவர்கள்.  

“ஆஸ்திரேலியாவில் வளரும்போது வேற்று மனிதராக இருப்பது போன்ற உணர்வு இருந்தது. நான் பார்ப்பதற்கும்   வித்தியாசமாக இருந்தேன். வகுப்புகளில் ஒரே இந்திய மாணவியாக நான் இருந்திருக்கிறேன்,” என்றார் குமாரி சுபஸ்ரீ. 

உள்ளூர்வாசிகளைப்போல இருக்க வேண்டும் என்ற ஆவல் அப்போது அவருக்கு இருந்ததுண்டு.

‘ஜாஸ்மின் இளவரசி’ கதாபாத்திரம் உருவாக்கப்படுவதற்கு முன்பு  55 ஆண்டு காலமாக ‘டிஸ்னி’யின் இளவரசிகள் வெள்ளை இனத்தவராக அல்லது ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக சித்திரிக்கப்பட்டனர். 

‘டிஸ்னி’ நிறுவனம் 1992ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘அலாவுதீன்’ திரைப்படத்தில் அரேபிய இளவரசியாக ‘ஜாஸ்மின்’ கதாபாத்திரம் சித்திரிக்கப்பட்டிருந்தது.

இங்கு நடத்தப்பட உள்ள இசை நாடகத்தில் அந்த ‘ஜாஸ்மின்’ கதாபாத்திரத்தை ஏற்கிறார் சுபஸ்ரீ.    

“இளவரசி ஜாஸ்மின் கதாபாத்திரம் என் சிந்தனையை மாற்றியது. இந்த கதாபாத்திரத்தை முதலில் பார்த்தபோது வியப்படைந்தேன். யாராலும் இளவரசியாக முடியும் என்ற நம்பிக்கை எனக்குப் பிறந்தது,” என்று சொன்னார் குமாரி சுபஸ்ரீ. 

பல ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றுத் தந்த  ‘ஜாஸ்மின் இளவரசி’ கதாபாத்திரம், கலைகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தைத் தூண்டியுள்ளது என்றார் அவர். 

இசை அரங்கேற்றத் துறையில் 2017ஆம் ஆண்டு பட்டம் பெற்ற குமாரி சுபஸ்ரீ ஈடுபடும் முதல் நிபுணத்துவ படைப்பு இந்த இசை நாடகம்.  

அமெரிக்காவின் பிராட்வே அரங்கத்தில் புகழ்பெற்ற ‘அலாவுதீன்’ இசை நாடகத்தின் இந்தப் படைப்பு, 2016ஆம் ஆண்டு சிட்னியில் தொடங்கி ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளிலும் நியூசிலாந்திலும் அரங்கேறியுள்ளது. 

ஆசியாவின் ஒரே நாடாகவும் இந்த படைப்பின் கடைசி இடமாகவும் சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

ஜூலை 21ஆம் தேதி முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரை இந்த நிகழ்ச்சி மரினா பே பகுதியில் அமைந்துள்ள சேண்ட்ஸ் தியேட்டரில் இடம்பெறும். 

சிங்கப்பூரில் கிடைக்கும் ‘லக்சா’, ‘ஐஸ் கச்சாங்’ போன்ற சில உணவு வகைகள் தமக்கு மிகவும் பிடித்திருப்பதாகக் குறிப்பிட்டார் குமாரி சுபஸ்ரீ.