மார்பகப் புற்றுநோயை மையப்படுத்திய நூதன அழகுப் போட்டி

மத்தியத் தரைகடல் உணவு வகைகளைப் பயன்படுத்தி பெண்கள் மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக தங்களது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கலாம் என்கிறார் இத்தாலியை சேர்ந்த இமானுவேலா. தொழில்நுட்ப திட்ட அதிகாரியாக பணிபுரியும் 37 வயது குமாரி இமானுவேலா, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தமது தோழி ஒருவரின் வேதனையைக் கண்டு மனம் வெம்பினார். அந்த வேதனையே, இந்நோயைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள அவருக்கு உந்துதலாக இருந்தது.

மார்பகங்களில் அளவுக்கு அதிகமான உயிரணுக்களின் வளர்ச்சியால் பெண்களுக்கு மார்பக புற்று நோய் ஏற்படுகிறது. அதனைக் கட்டுப்படுத்தக்கூடிய அழற்சி-எதிர்ப்பு உணவுகள்(anti-inflammatory food), காய்கறி , ஆரோக்கிய கொழுப்புகள் ஆகியவற்றைப் பரிந்துரைக்கும்  ஈட்பிங்க்8’ என்ற உணவுமுறை இயக்கத்தை குமாரி இமானுவேலா  தொடங்கியுள்ளார்.

‘சிங்கப்போலிட்டன் எனும் அழகு ராணி போட்டியின்  ‘இளஞ்சிவப்பு நாடா’ (pink ribbon initiative) அங்கத்தில் குமாரி இமானுவேலாவின்  ‘ஈட்பிங்க்8’,  சிறந்த மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வுத் திட்டத்திற்கான விருதைப் பெற்றது. 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அந்தப் போட்டியில் இவ்வாண்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டனர். ஜனவரி மாதம் தொடங்கிய அந்தப் போட்டி ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி முடிவடைந்தது.  போட்டியின் இறுதிச் சுற்றுக்குள்  ‘மிஸ் சிங்கபோலிட்டன்’ பிரிவில் அறுவரும், ‘மிசஸ் சிங்கப்போலிட்டன்’ பிரிவில் எழுவரும், ‘எலிட் சிங்கப்போலிட்டன் பிரிவில் ஐவரும் அடியெடுத்து வைத்தனர்.

ஆடை அலங்காரம், கேள்வி பதில் அங்கம் உள்ளிட்ட அழகுப் போட்டிக்கான வழக்கமான அம்சங்கள் இருந்தபோதும், மார்பகப் புற்றுநோயை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரிவு இந்தப் போட்டியின் நூதன அம்சமாக இருந்தது. அந்தப் பிரிவில் குமாரி இமானுவேலாவுடன்  மற்ற இரு  போட்டியாளர்களும் பரிசு வென்றனர்.

 ‘ஹீல் ஏ சோல்’ எனும் திட்டத்தை உருவாக்கிய திருமதி ஜீவான்ஷி நீபேணி அவர்களில் ஒருவர். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த பெண்களும் அவர்களின் பராமரிப்பாளர்களும் தங்களது அனுபவங்களையும் வாழ்க்கைக் கதைகளையும் பகிர்வதற்கான தளத்தை உருவாக்கியுள்ளார் 35 வயது திருமதி ஜீவான்ஷி.

மனோதிடத்துடன் அவர்கள் எவ்வாறு மார்பக புற்றுநோயை எதிர்கொண்டனர் என்பதை உணர்ச்சிபூர்வமாக நினைவுகூர்ந்து இந்நோயுடன் போராடும் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இத்தளம் வாய்ப்பளிக்கிறது.

‘இளஞ்சிவப்பு நாடா’ இப்பரிசை வென்ற 30 வயது திருமதி உஷ்மாலீனா பசுமட்டேரி இல்லத்தரசியாகவும் தீவிர தொண்டூழியராகவும்  இருந்து வருகிறார். அசாம் மாநிலத்தைப் பிரதிநிதித்த அவர் ‘ தி ரோட் அப் ஹீல்  எனும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.

தமது பூர்வீகமான இந்தியாவின் அசாம் மாநிலத்தில்  மார்பகப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள  அவர் விரும்பினார்.  நிபுணர்கள், மார்பக புற்றுநோயிலிருந்து குணமானவர்கள் ஆகியோருடன் திருமதி உஷ்மாலீனா இது குறித்து ஆராய்ச்சி செய்து வந்தார்.

இந்தப் புற்றுநோய்க்கான காரணங்கள், ஆரம்ப அறிகுறிகள், குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகள் போன்ற விவரங்களைத் திரட்ட அவர் மருத்துவ அறிக்கைகள், ஊடகக் கட்டுரைகள்  பலவற்றைப் படித்து குறிப்புகளைச் சேகரித்தார். அந்த தகவல்களை மக்களுக்கு எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய விதமாக உஷ்மாலீனா, காணொளித் தொகுப்புகளைத் தயாரித்து வெளியிட்டார்.  ‘யூடியூப்,’ ‘ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் அந்தக் காணொளிகளைப் பதிவேற்றம் செய்து மார்பகப் புற்றுநோய் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை அதிகரிக்க  உஷ்மாலீனா, இதற்காக அழகு ராணி போட்டியில் கௌரவிக்கப்பட்டார்.

புறத்தோற்றத்தைத் தாண்டி பெண்களது உள்ளத்தின் தரத்தையும் சமூகத்திற்கு அவர்கள் ஆற்றும் பங்களிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் அமைந்திருந்த இந்த அழகு ராணி போட்டியின் மாபெரும் இறுதிச் சுற்றில் வெற்றியாளர்கள் மூன்று பிரிவுகளில் போட்டியிட்டனர்.

‘மிஸ் சிங்கப்போலிட்டன்’ பிரிவில் இத்தாலி, ‘மிசஸ் சிங்கப்போலிட்டன்’ பிரிவில் தாய்லாந்து, ‘எலிட் சிங்கப்போலிட்டன் பிரிவில் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த  அழகு ராணிகள் வாகை சூடினர்.

‘வுமன் ஆஃப் இன்புலுவன்ஸ் விருதை பொதுமக்கள் வாக்குகள் மூலம் வியட்னாமை பிரதிநிதித்த திருமதி திரிஷ் நியூஜேன் பெற்றார்.

பெண்களை கௌரவப்படுத்தும் இந்த போட்டி தொடர்ந்து நடத்தப்படும் என்று குறிப்பிட்ட இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் திருமதி வனிதாதேவி சரவணமுத்து இவ்வாண்டின் போட்டியாளர்களின் பங்கைப் பற்றி தமது கருத்தினை தெரிவித்தார்.

“இவ்வாண்டு பல நாடுகளிலிருந்து அழகு ராணிகள் இப்போட்டிக்காக சிங்கப்பூருக்கு வந்தனர். அவர்களில் சிலர் திருமணமானவர்கள். அனைவருமே சில மாதங்கள் இங்கேயே தங்கி இப்போட்டிக்காக தங்களைத் தயார் செய்தனர்.  அதுமட்டுமல்லாமல், இப்போட்டியில் வழங்கப்பட்ட அனைத்து நிலைகளிலும் பயிற்சிகளிலும் மனமுவந்து கலந்துகொண்டனர்.

“பெண்களை அங்கீகரித்து இந்த உலகத்தை மேம்பத்துடுவதற்காக அவர்கள் மேற்கொண்டுள்ள முயற்சிகளை  ஊக்குவிக்கும் இப்போட்டி, இம்முறை நல்ல வரவேற்பைப் பெற்றது,” என்றார் வனிதாதேவி சரவணமுத்து.