(காணொளி): இரு திரை திறன்பேசியால் சந்தையில் மீண்டும் மிளிரும் மைக்ரோசாஃப்ட்

புத்தகத்தைப் போல் திறக்கக்கூடிய இரு திரை கைப்பேசிகளை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் கணினி வெளியீட்டு நிகழ்ச்சியின்போது ‘நோட்பேட்’ அளவில் பெரிதான கைப்பேசியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மைக்ரோசாஃப்ட் தனது திறன்பேசி சந்தையை ஆப்பிளுக்கும் கூகலுக்கும் விட்டுக்கொடுத்தது. சர்ஃபேஸ் டுவோ (Surface Duo ) என்ற அந்தத் திறன்பேசி, மிக மெலிந்த 5.6 அங்குல திரைகளைக் கொண்டுள்ளது. இதனை உண்மையிலேயே திறன்பேசியாகக் கூட வகைப்படுத்த முடியாது என்றும் இது முற்றிலும் புதிய விதமான கருவி என்றும் மைக்ரோசாஃப்ட் கூறியுள்ளது.

 

கிளவுட் கம்பியூட்டிக் சேவைகள், எக்ஸ்பாக்ஸ் காணொளி விளையாட்டு வர்த்தகம், பிங்க் தேடுதளம், சர்ஃபேஸ் டேப்லட் கருவிகள், மேசைக் கணினிகள், லிங்க்இன் தளம் ஆகியவற்றால் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்குப் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஆயினும், திறன்பேசி வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் மைக்ரோசாஃப்டிற்குப் போராட்டமாகவே இருந்துவந்தது. ஃபின்லாந்தில் தளம் கொண்டுள்ள நோக்கியா நிறுவனத்தைக் கையகப்படுத்தி ‘விண்டோஸ்’ மென்பொருளின் பெயரில் சில திறன்பேசிகளை வெளியிட்டது. ஆனால், அந்த முயற்சி ஆப்பிளிடமும் கூகலிடமும் தோற்றுப்போனது.

இருப்பினும், இந்த மூன்றாவது முயற்சி பலனளிக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள் சிலர். பல்லாண்டுகளாகப் பதுங்கிய பின்னர் முற்றிலும் மாறுபட்ட கருவியுடன் பாய்ந்துள்ள மைக்ரோசாஃப்ட், வாடிக்கையாளர்களைத் தன்வசம் இழுக்கும் என்ற எதிர்பார்ப்புகள் இப்போது எழுந்துள்ளன.