உலகப்புகழ் இசை நாடகம் விரைவில் சிங்கப்பூரில்

‘தி ஃபெண்டம் ஆஃப் தி ஒப்பரா’ (The Phantom of the Opera), ‘கேட்ஸ்’ (CATS), அலாவுதீன் (Aladdin) போன்ற  தரமான பல இசை நாடகங்களை சிங்கப்பூருக்கு கொண்டு வந்துள்ளது ‘பேஸ் என்டர்டெய்ன்மெண்ட் ஏ‌ஷியா’ (Base Entertainment Asia) நிறுவனம். 

அந்த வரிசையில் ‘பிராட்வே’ (Broadway) அரங்கத்தில் 2011 தோற்றம் கண்ட ‘புக் ஆஃப் மோர்மன்’ என்ற நகைச்சுவை இசை நாடகத்தை சிங்கப்பூருக்கு கொண்டு வர திட்டங்கள் இருப்பதாக ‘பேஸ் என்டர்டெய்ன்மெண்ட் ஏ‌ஷியா’ தெரிவித்துள்ளது. 

‘சௌத் பார்க்’ (South Park) என்ற அமெரிக்கத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்கிய டரெ பார்க்கர்(Trey Parker), மேட் ஸ்டோன் (Matt Stone) ஆகியோருடன் ராபர்ட் லோபஸ் (Robert Lopez) என்றவரும் இணைந்து உருவாக்கிய இசை நாடகம் இது. 

இதுவரை US$500 மில்லியனுக்கு மேல் வசூல் திரட்டியுள்ளது இந்த நாடகம். அத்துடன் பிராட்வே படைப்புகளுக்கு வழங்கப்படும் ‘டோனி’ விருதுகளை ‘புக் ஆஃப் மோர்மன்’ ஒன்பது முறை வென்றுள்ளது. வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் இருந்தால் அது நாடகமாகிவிடாது.

“நட்பு, மனித நேயம், அன்பு, சமூக பிணைப்பு ஆகியனவற்றை காட்சியளிக்கும் படைப்பாக இந்த இசை நாடகம் அமையும்,” என்று குறிப்பிட்டார் முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திரு நிக் பிளேக். 

“எந்தக் காட்சியும் கெட்ட உணர்வோடு எழுதப்பட்டதில்லை. அப்படி இருந்தால் நான்கூட அதில் நடிக்கமாட்டேன்,” என்றார் மற்றொரு முன்னணி நடிகர் திரு பிளேக் போடன்.  

இந்தப் படைப்பில் உகாண்டா நாட்டில் நடக்கும் சில பிரச்சினைகள் சித்திரிக்கப்படுகின்றன என்றும் எதுவும் பொய் இல்லை என்றும் கூறினார் திரு பிளேக். 

“உண்மையில் உலகத்தில் நடக்கும் பிரச்சினைகளை இப்படைப்பின் மூலம் அறிந்துகொள்ளலாம். உலகத்தில் சில கொடுமையான சம்பவங்கள் நிகழ்ந்தாலும், சமூகம் எப்படி ஒன்றிணைந்து அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்பதை இந்தப் படைப்பு காட்டும்,” என்றார் திரு பிளேக். 

சிங்கப்பூருக்கு வருவதற்கு குறித்து ஆலோசித்து வருகிறோம் என்று பெஸ் என்டர்டெய்ன்மெண்ட் ஆசியா குறிப்பிட்டது.