விளம்பரச்செய்தி: விருப்பங்கள் வழி மக்களிடையே பிணைப்புகளை வளர்ப்பவர்

ஆர்வமும் விருப்பமும் தேச வேறுபாடுகளைக் கடந்தது. 24 வயதில் இளம் தொழில்நுட்ப நிபுணராக சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த சுப்ரமணியன் கல்யாண்குமார், சொந்த வேலை இடத்தினரையும் இந்தியாவைச் சேர்ந்தவர்களையும் தாண்டி தமது நட்பு வட்டத்தை விரிவுபடுத்த விரும்பினார்.

“பல இன மக்களைக் கொண்ட சிங்கப்பூரில் தமிழர்களுக்கு நெடிய வரலாறு உள்ளது. வெளிநாடு சென்று நல்ல நிலைக்கு உயரவேண்டும் என்று சுற்றுவட்டாரத்தில் உள்ள இளையர்களைப் போல நானும் நினைத்தேன். இருந்தபோதும் சிங்கப்பூர் எனக்கு அந்நியமல்ல,” என்றார் இப்போது 38 வயதான திரு கல்யாண்.

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டை நகரைச் சேர்ந்த திரு கல்யாண், தமது தாய்வழித் தாத்தா இளம் வயதில் சில ஆண்டுகள் சிங்கப்பூரில் வாழ்ந்ததாகவும் மாறுபட்ட சில பழக்கங்களுடன் சொந்த ஊர் திரும்பியதாகவும் கூறினார். 

“வீட்டில் அவர் வேட்டிக்குப் பதிலாக அரைக்கால்சட்டையை அணிவார். குடுவையிலிருந்து காஃபியை ஊற்றிக் குடிப்பார். என் தாத்தா அந்தப் பழக்கங்களை இங்குதான் கற்றுக்கொண்டு, பின்பற்றத் தொடங்கினார் என்பதை சிங்கப்பூருக்கு வந்த பிறகே உணர்ந்தேன்,” என்றார் திரு கல்யாண்.

   பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணினி பொறியியலில் இளநிலைப் பட்டத்தையும் அதன்பின் இணையத் தொழில்நுட்பத் துறையில் முதுநிலைப் பட்டத்தையும் அவர் பெற்றார். 2006ஆம் ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த திரு கல்யாண்,  முதலில் பன்னாட்டுத் தளவாட நிறுவனம் ஒன்றில் தகவல் தொழில்நுட்பராகப் பணியாற்றினார். அதன் பிறகு அவர் தெமாசெக் பலதுறை தொழிற்கல்லூரியில் தகவல் கட்டமைப்பு நிபுணராகச் சேர்ந்து தற்போது அங்கு பணியாற்றுகிறார்.

   வளப்பமிக்க நாடாக இருந்தாலும் சிங்கப்பூர் என்றாலே கட்டுக்கோப்பு, கெடுபிடியான சட்டதிட்டம் என நினைத்தபடியே வந்ததாகக் கூறினார் திரு கல்யாண். ஆனால் இங்கு வந்த பிறாகே சிங்கப்பூரர்களின் அமைதியான மனப்போக்கையும் விருந்தோம்பலையும் உணர்ந்ததாகத் தெரிவித்தார்.

“தொடக்கத்தில் எனக்குப் பல்வேறு சிங்கப்பூர் உணவு வகைகள் ஒத்துப்போகவில்லை. எனக்கு இந்திய உணவு கிடைக்க சிங்கப்பூரர்கள் பலர் உதவினர். நான் பன்றி, மாடு இறைச்சிகளைச் சாப்பிடமாட்டேன் எனத் தெரிந்தபோது அதற்கேற்றவாறு எனக்கு இந்த வகையில் உதவி, மனதை நெகிழ வைத்தனர்,” என்று திரு கல்யாண் கூறினார்.

 தாம் இங்கு வந்திருந்தபோது ஏற்கெனவே தம் உறவினர்கள் சிலர் இங்கு வந்து குடியிருந்ததாக அவர் குறிப்பிட்டார். ஆயினும், சிங்கப்பூரின் பலதரப்பட்ட மக்களுடன் பிணைப்புகளை வலுப்படுத்த விரும்பிய திரு கல்யாண், சமூக நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அத்தகைய நிகழ்ச்சிகள் பலவற்றுக்கு ஏற்பாடு செய்தார்.

“முதலில் நான் மாணவர்களுக்கான தமிழ் நாடகம் ஒன்றை நடத்தத் தொடங்கினேன்,” என்றார் திரு கல்யாண். 

இங்குள்ள இளையர்கள் பலர் காற்பந்தை விரும்புவதால் ஃபுட்சால் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்வது குறித்து ஆர்வமாக இருந்தார். 2012ல் திரு கல்யாண், தமது 29 வயதில் நற்பணிப் பேரவையின் இளையர் அணியில் சேர்ந்து இத்தகைய ஃபுட்சால் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கினார். முன்னாள் அமைச்சரான காலஞ்சென்ற டாக்டர் பாலாஜி சதாசிவனின் பேரில் தொடங்கிய அந்தப் போட்டியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு முறையும் ஏற்பாட்டுக் குழுவில் பங்கேற்றதாகக் கூறினார். 

2010ஆம் ஆண்டில் நற்பணிப் பேரவையில் சாதாரண உறுப்பினராகச் சேர்ந்த திரு கல்யாண் படிப்படியாக உயர்ந்து துணை செயலாளராகி பின் கடந்தாண்டு ஏப்ரலில் துணை பொருளாளராக உயர்ந்தார்.  இருந்தபோதும், இவை தனக்குள்ள பொறுப்புகள்தான் என்றும் எந்த நிலையிலும் உண்மையாகச் செய்யப்படும் சமூக சேவையால் மட்டுமே மக்கள் பயனடைவர் என்றும் திரு கல்யாண் தெரிவித்தார்.

தெம்பனிஸ் சாங்காட் வட்டாரம் மூன்றின் வசிப்போர் குழுவின் உறுப்பினராகவும் உள்ள திரு கல்யாண், பிற இனத்து முதியோரை லிட்டில் இந்தியா, கரையோரப் பூந்தோட்டம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வார். ஒருங்கி ணைப்பு பற்றி காணொளிகளையும் அவர் தயாரித்திருக்கிறார்.

  புதிய குடியேறிகளை சிங்கப்பூர் மக்களுடன் பழக சமூக நிகழ்ச்சிகளுக்கு  அவ்வப்போது ஏற்பாடு செய்து வந்தாலும் இளையர்கள் மீது கவனம் செலுத்த விரும்புவதாக இரண்டு இளம் மகள்களுக்குத் தந்தையான திரு கல்யாண் தெரிவித்தார்.

   “இளையர்கள் துடிப்பானவர்கள். தயக்கமின்றிப் பிறருடன் பழகக் கூடியவர்கள். தங்களது ஆர்வங் களைப் பகிரும் மற்றவர்களுடன் இன, சமய பாகுபாடின்றிப் பழகுவர்,” என்று அவர் கூறினார்.சிங்கப்பூரர்களுடன் ஒருங்கிணைய விரும்பும் வெளிநாட்டவர்கள், முதலில் தங்களுக்குப் பழக்க மானவற்றைக் கடந்து செல்ல வேண்டும் என்றார் அவர். 

“ஒருங்கிணைப்பு என்பது கரவொலியைப் போன்றது. இரு கைகளும் இணைந்தால்தான் கைதட்டல் சாத்தியமாகும்.  புதிய நாடு என்பதால் வெளிநாட்டவர்கள் குறுகிய மனப்போக்கால் முடங்கி இருக்கக்கூடாது,” என்று திரு கல்யாண் தெரிவித்தார்.

பிற நாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வருபவர்,  சிங்கப்பூருக்கும் தங்களது தாயகங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை உணர்ந்து  அவற்றைத் திறந்த மனதுடன் ஏற்கவேண்டும் எனத் திரு கல்யாண், புதிதாக இங்கு குடியேற வருபவர்களுக்கு வழி மொழிகிறார். 

அதேபோல,  சிங்கப்பூரர்கள், இங்குவரும் வெளிநாட்டவர்களுக்கு இடையிலான பன்முகத்தன்மையை உணர்ந்து ஒருவரைப் போல அனைவருமே இருப்பர் என எண்ணிவிடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொள்கிறார். 

 பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த இந்திய இனைத்தவரைக் கூடுமானவரையில்  சமூகப் பணிகளின் மூலம் ஒன்றிணைக்க விரும்புகிறார் திரு கல்யாண்.