மொழி நிபுணத்துவத்தை ஊக்குவிக்கும் பட்டப்படிப்பு

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத் தமிழ்மொழிப் பட்டம் தமிழகத்தில் வழங்கப்படும் பட்டத்திற்கு நிகராக அதே வேளையில் உள்ளூர் மாணவர்களின் திறன்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.  இப்பல்கலைக்கழகத் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பட்டப்படிப்பில் 50 விழுக்காடு மொழிக்கும் 50 விழுக்காடு  இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் தரும் வகையில் பாடங்கள் பகுக்கப்பட்டுள்ளன. 

இளங்கலைப் பட்டம் பெற மொத்தம் 26 பாடங்கள் எடுத்துப் படிக்க வேண்டும். ஒவ்வொருபாடத்திற்கும் 5 மதிப்பீட்டுப் புள்ளிகள் என மொத்தம் 130 மதிப்பீட்டுப் புள்ளிகள் நிறைவு செய்ய வேண்டும். மாணவர்கள் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தைத் தனியாகவும்  தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பாடங்களோடு பிறதுறை பாடங்களை இணைத்தும் பயிலும் வகையில் நெகிழ்ச்சித்தன்மையுடன்  பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தை முதன்மைப்பாடமாக படிக்க விரும்பும் மாணவர்கள் 110 மதிப்பீட்டுப் புள்ளிகளுக்குத் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பாடங்களையும் 10 மதிப்பீட்டுப் புள்ளிகளுக்கு மனிதவியல் மற்றும் நடத்தை அறிவியல் பள்ளியின் அடிப்படைப் பாடங்களையும் எஞ்சிய 10 மதிப்பீட்டுப் புள்ளி

களுக்குப் பல்கலைக்கழக அடிப்படைப் பாடங்களையும் படிப்பர். 

தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பாடங்களோடு பிற துறை பாடங்களுடன் இணைந்து பயில விரும்பும் மாணவர்கள் 80 மதிப்பீட்டுப் புள்ளிகள் தமிழ்ப் பாடங்களையும் மீதி புள்ளிகளுக்கு இதர பாடங்களையும் எடுத்துப் படிப்பர். 

அதில் சிங்கப்பூரின் இருமொழிக் கொள்கைக்கு ஏற்ப பல்கலைக்கழக அடிப்படை பாடங்களை ஆங்கிலத்தில் படிக்க வேண்டும். 

ஆங்கில மொழித்திறனில் சிக்கல் உள்ளவர்கள் தமிழிலும் படிக்க இயலும். ஒன்று, ஏன்நன்மை செய்ய வேண்டும்? என்ற தலைப்பில் அமைந்த விழுமியம் சார்ந்த பாடம். அடுத்தது, 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பத் துறையின் ஆற்றலும் வரம்புகளும் பற்றிய பாடம். சிங்கப்பூர் போன்ற நகர்மயமாக்கப்பட்ட நாட்டில் வா

ழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதுகுறித்த மற்றொரு பாடம். இவ்வாறு இன்றைய சமூகப்பிரச்சினைகள் குறித்தும் மாணவர்கள் எஸ்யுஎஸ்எஸ் பல்கலைக்கழகத்தில் படிக்க முடியும் என்பது சிறப்பம்சம்

எஸ்யுஎஸ்எஸ் பல்கலைக்கழகத் தமிழ்ப்பாடங்களின் மதிப்பீட்டு முறை இரண்டு பகுதிகளைக் கொண்டது. ஒன்று  ஆசிரியர் மதிப்பீட்டுக் கட்டுரை. இரண்டு இறுதித்தேர்வு. ஆசிரியர் மதிப்பீட்டுக் கட்டுரைக்கு 50%,இறுதித்தேர்வு 50% எனப் பிரிக்கப்பட்டு மதிப்பிடப்படுகிறது. மாணவர்கள் ஒரு பாடத்திற்கு இரண்டு ஆசிரியர் மதிப்பீட்டுக் கட்டுரைகளை ஒப்படைக்க வேண்டும். மாணவர்கள் மின்னியல் வழியே அவர்களுடைய ஆசிரியர் மதிப்பீட்டுக் கட்டுரைகளை அனுப்புவர். 

அதனை மின்னியல் வழியாகவே ஆசிரியர்கள் மதிப்பிட்டு பின்னூட்டங்களுடன் மாணவர்களுக்கு அனுப்பி வைப்பர். இதனால் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் எளிதாவதுடன் தங்களின் திறன்களை உடனடியாக உணர்ந்து செயல்படவும் முடியும்.

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் வாழ்நாள் கற்றலை முதன்மை நோக்கமாகக் கொண்டு செயல்படும் பல்கலைக்கழகம். ஆதலால் பணி செய்து கொண்டிருப்பவர்கள் அல்லது பணியில் இருந்த  மாணவர்களின் பணியிடத் திறனை மேம்படுத்தும் நோக்கில் பாடத்திட்டம் அமைந்திருக்கின்றது. 

இளங்கலைத் தமிழ்மொழி மற்றும் இலக்கியப் பட்டப்படிப்பு ஒரு பகுதிநேரப் படிப்பு. ஒரு பாடத்திற்கு ஆறு வகுப்புகள் மட்டுமே நடைபெறும். ஒவ்வொரு வகுப்பும் மூன்று மணி நேரம் நடைபெறும். வகுப்பு இரவு 7 மணி முதல் 10 மணிவரை நடைபெறும். வகுப்புகள் வார நாட்களில் மட்டுமே நடைபெறும். ஒரு கல்விப்பருவம் இரண்டு தவணை கொண்டது. ஒரு தவணையில் இரண்டு பாடங்களை மட்டுமே படிப்பர். ஒரு பருவத்திற்கு நான்கு பாடங்கள்வரை படிப்பர். 

மாணவர்கள் பட்டப்படிப்பில் சேரும் முதல் பருவம் மட்டும் ஆறு பாடங்கள்வரை படிக்க முடியும். இதர பருவங்களில் குறைந்தது இரண்டு பாடங்கள் அதிகபட்சம் நான்கு பாடங்கள்வரை படிக்க முடியும். மொத்தத்தில் இப்பல்கலைக்கழகத் தமிழ்மொழி, இலக்கியப் பட்டப்படிப்பு நெகிழ்ச்சித்தன்மை உடையது எனலாம். 

சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகம் ஒவ்வொரு பாடத்திற்கும் கற்றல் துணைவன் எனும் பாடநூலை வடிவமைத்து வழங்குகிறது. இப்பாட நூல்களைப் பல்கலைக்கழகமும் தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளர்களும் இணைந்து எழுதியுள்ளனர். 

கற்றல் துணைவன் எனும் பாட நூலோடு அப்பாடத்திற்குத் தேவையான இதர கற்றல் வளங்களையும் பல்கலைக்கழகமே இலவசமாக வழங்குகிறது. இதனை மாணவர்கள் Pdf, epub கோப்புகளாகப் பெறமுடியும். இதனை மாணவர்கள் கைபேசி உள்ளிட்ட அனைத்து மின்னியல் சாதனங்கள் வழியாகவும் பயன்படுத்த முடியும். 

இவ்வாறு பல்கலைக்கழகமே கற்பதற்குத் தேவையான அனைத்து வளங்களையும் வழங்குவதால் மாணவர்களின் கற்றல் செயல்பாடு சிறப்பாக அமைகிறது.  சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி நுணுக்கங்களைக் கற்றுக்கொடுத்து அவர்களை மொழி நிபுணர்களாக்கும் பணியைச் செய்து வருகிறார் டாக்டர் மணிவண்ணன் முருகேசன். 

2007ல் பெரியார் பல்கலைக்கழகத்தில் இளநிலைப்பட்டம் பெற்ற அவர், பின்னர் முதுநிலைப் படிப்பை காந்திகிராம் பல்கலைக்கழகத்திலும் டாக்டரேட் படிப்பை ஜவகர் லால் நேரு பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.  

“இந்தியாவில் கற்பிக்கப்படும் தமிழ்மொழி பட்டக்கல்வியைப் போலவே இதுவும் உள்ளது. ஆயினும், சிங்கப்பூர் சூழலுக்கு ஏற்ற விதமாக இது அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பு அம்சங்களில் இந்தத் திட்டம் கூடுதலாகக் கவனம் செலுத்து கின்றது,” என்றார் டாக்டர் மணிவண்ணன்.