சமூகத் தொண்டராக செயலாற்றுபவர்

சமூகத் தொண்டராக பலரது நெஞ்சங்களிலும் இடம்பிடித்திருக்கும் திரு இரா.மாதவன், 2004ஆம் ஆண்டில் தமது மனைவி, மகளோடு வேலை தேடி பெங்களூரிலிருந்து சிங்கப்பூருக்கு வந்தார். 

2010ஆம் ஆண்டில் ஹவ்காங் வட்டாரத்தில் குடியேறிய அவர், ஈராண்டுகளில் பல்வேறு அடித்தள அமைப்புகளில் சேர்ந்து தொண்டூழியம் புரிய தொடங்கினார். 

தற்போது சி யுவான் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவின் துணைத் தலைவராகவும் ‘அங் மோ கியோ-ஹவ்காங் பகுதி 9’ வசிப்போர் குழுவின் செயலாளராகவும் செயலாற்றும் இவர், கடந்த எட்டாண்டுகளாக அடித்தள அமைப்புகளில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

“சிங்கப்பூரில் அடித்தள அமைப்புகள் மிகவும் துடிப்பாகச் செயல்படுகின்றன. ஹவ்காங் வட்டாரத்தில் நான் குடியேறியபோது, ‘டோர் நாக்கிங் எக்சர்சைஸ்’ எனும் நடவடிக்கை மூலம் சமூக மன்ற உறுப்பினர்கள் என் குடும்பத்தை அணுகினர். 

“வீட்டிற்கு வந்து பழகுவதுடன் வட்டார நிகழ்வுகளுக்கும் அழைப்பார்கள். இந்நிகழ்வுகளில் பங்கேற்று, ஆர்வம் ஏற்பட்டதால் நானும் இந்த அமைப்புகளில் சேர்ந்து பணியாற்ற விரும்பினேன்,” என்றார் திரு மாதவன், 44.  

குடியிருக்கும் வட்டாரத்தைச் சுத்தம் செய்தல், சமூகத்தினரிடையே டெங்கி காய்ச்சல், கொரோனா கிருமித்தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளுக்கு கைகொடுத்து வருகிறார் திரு மாதவன். 

“டோர் நாக்கிங் எக்சர்சைஸ் என்ற திட்டத்தின் மூலம் நம் வட்டாரத்தில் உள்ள இல்லங்களுக்குச் சென்று குடியிருப்பாளர்களுக்கு டெங்கி பரவலைத் தடுப்பதற்கான ஆலோசனையை வழங்குகிறோம். 

“அண்மையில் ஏற்பட்டுள்ள கொரோனா கிருமித்தொற்று பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சி எடுத்து வருகிறோம். முகக்கவசங்களை விநியோகிக்கவும் உதவினோம்,” என்றார் திரு மாதவன். 

சி யுவான் சமூக மன்றத்தின் அவசரகாலத் தயார்நிலை குழுவின் செயலாளராகவும் சேவையாற்றும் திரு மாதவன், வட்டாரப் பாதுகாப்பு குறித்த குடியிருப்பாளர்களுக்கான பயிற்சியையும் வழிநடத்தி வருகிறார். அவசரகாலத்தில் முதலுதவி வழங்கவும் இக்குழு திறன்பெற்றுள்ளது. 

இவர் வசிக்கும் வட்டாரத்தில் இருக்கும் சமூகத் தோட்டம் ஒன்றை நிர்வகிக்கும் பொறுப்பையும் இவர் ஏற்றுள்ளார். 

சிங்கப்பூர் நிரந்தரவாசிகளான திரு மாதவனும் அவரது குடும்பத்தினரும் சிங்கப்பூரர்களுடன் ஒன்றிணைய பல முயற்சிகளை எடுத்துள்ளனர். 

“பல இனங்களைச் சேர்ந்த குடியிருப்பாளர்களுடன் நாம் ஒன்றாக வாழ்கிறோம். குறிப்பாக தீபாவளி, சீனப் புத்தாண்டு உட்பட அனைத்துவித பண்டிகை காலங்களிலும் ஒன்றுக்கூடி நெருக்கமாகப் பழகுவோம். பலகாரங்களைப் பகிர்ந்துகொள்வோம். 

“இவ்வாண்டு சீனப் புத்தாண்டிற்கு என் அண்டை வீட்டார் என் குழந்தைகளுக்கு ‘அங் பாவ்’ சிவப்பு பாக்கெட்டைக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார்கள்,” என்றார் திரு மாதவன். 

திரு மாதவனின் மகளான 16 வயது காருண்யா மாதவன், உயர்நிலைப் பள்ளியில் தமிழைத் தாய்மொழியாக படித்தாலும், தனிப்பட்ட விருப்பத்தாலும் பெற்றோரின் ஊக்கத்தாலும் கூடுதல் பாடமாக சீன மொழியையும் கற்று வருவதைத் திரு மாதவன் சுட்டினார்.

“என் அண்டை வீட்டார் சிலரால் சீன மொழி மட்டுமே பேச முடியும். அவர்களைத் தொடர்புகொள்ள வேண்டுமானால் என் மகள்தான் அவர்களுடன் சீனத்தில் பேசுவார். 

“சிங்கப்பூரர்களுடன் எனது மகள் அணுக்கமாக ஒன்றிணைவாள் என்ற நம்பிக்கையுடன் சீன மொழியைப் படிக்க ஊக்குவித்தோம்,” என்றார் திரு மாதவன். 

“சீன மொழி தெரிந்த என் அண்டை வீட்டுக்காரர், தாமாக முன்வந்து என் மகளுக்கு சீன மொழியில் துணைப்பாடம் நடத்தினார். அதன் மூலம் உயர்நிலைப்பள்ளி தேர்வுகளில் காருண்யாவால் ‘ஏ’ தகுதியுடன் தேர்ச்சிபெற முடிந்தது,” என்று பெருமிதத்துடன் கூறினார் திரு மாதவன். 

‘ஐபிஎம்’ நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப வடிவமைப்பாளராகப் பணியாற்றும் திரு மாதவன், பல ஆசிய நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுகிறார். 

“சிங்கப்பூரில் எனக்கு மிகவும் பிடித்தது இங்குள்ள இன, சமய நல்லிணக்கம். அதுவே சிங்கப்பூரைக் கட்டிக்காக்கிறது. உலகளவில் இந்நாட்டின் தனித்துவத்தை எடுத்துக்காட்டுகிறது,” என்றார் திரு மாதவன்.