'டுரியான், பலாப் பழங்களிலிருந்து கைபேசி மின்னூட்டிகள்'

டுரியான், பலா போன்ற பழங்கள் பழங்களின் அரசனாக இருப்பதோடு, அதில் புதிய பயன்பாடுகளும் சாத்தியம்!

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விளையும் டுரியான், பலாப்பழம் போன்றவற்றில் இருந்து கைத்தொலைபேசிக்கும் மடிக்கணினி மற்றும் மின்சாரக் கார்களுக்குக்கூட தேவையான மின்னூட்டிகளைத் தயாரிக்க முடியும் என்கின்றனர் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியர் வின்சென்ட் ஜி.கோமேஸ் தலைமையிலான குழு ஒன்று இதனை ஆய்வு செய்து கண்டறிந்துள்ளது.

இப்போதைக்கு இப்பழங்களில் இருந்து கைத்தொலைபேசி, மடிக்கணினி போன்றவற்றுக்குத் தேவையான மின்சக்தியை  வழங்கக்கூடிய மின்னூட்டிகளை குறைந்த செலவில்  தயாரிக்க முடியும்.

வருங்காலத்தில மின்வாகனங்களின் மின்சாரத் தேவையையும் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்.

இவ்விரு பழங்களும் 'சூப்பர்கெப்பாசிட்டர்' எனப்படும் தன்மையைக் கொண்டிருப்பதால் அவற்றில் மின்சாரத்தைச் சேமிக்க முடியும்.

நாம் தற்போது பயன்படுத்தும் லித்தியம்-அயன் மின்னூட்டிகளைவிட இந்த  'சூப்பர்கெப்பாசிட்டர்' பொருட்கள் சிறந்த மின்னூட்டிகளாகப் பயன்படுத்தப்படலாம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஏனென்றால்,  'சூப்பர்கெப்பாசிட்டர்' பொருட்களை விரைவில் மின்னூட்ட முடியும். மேலும் அவற்றை எத்தனைமுறை மின்னூட்டினாலும் அவற்றின் தன்மை பெருமளவுக்கு மாறுவதில்லை. அதனால் நீண்ட காலத்துக்குப் பயன்படுத்த முடியும்.

'சூப்பர்கெப்பாசிட்டர்' பொருட்களின் ஆற்றல் அடர்த்தி பொதுவாக குறைவாக இருப்பதால் அவை அதிக பயன்பாட்டில் இல்லை.

ஆனால், இவ்விரு பழங்களிலும் உள்ள, பொதுவாக உண்ணப்படாத பஞ்சு போன்ற பகுதிகளிலிருந்து குறைந்த விலையில் மின்னூட்டிகளைத் தயாரிக்க முடியும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

#டுரியான் #பலா #பழங்கள் #மின்னூட்டிகள் #தமிழ்முரசு