சிறை அதிகாரிகளுக்குச் சீரான மனநலம் அவசியம்

சிறை அதிகாரிகளுக்குச் சீரான மனநலம் அவசியம்

3 mins read
87723509-948a-4a16-9347-d934838b4c7c
வழிகாட்டியாக அமர்வுகளை நடத்தும் வேணு அர்ஷ். - படம்: சிங்கப்பூர் சிறைத்துறை

சிங்கப்பூர் சிறைத்துறை அதிகாரிகள் தங்கள் பணிகளில் தெளிவான சிந்தனையோடு சிறப்பாக விளங்க அத்துறை 2001ஆம் ஆண்டில் வழிகாட்டித் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.

அத்திட்டத்தின்கீழ், அதிகாரிகள் தங்களின் சக ஊழியர்களோடு கலந்துரையாடல்களில் ஈடுபடக் கற்றுக்கொள்வதோடு, சிறைக் கைதிகளிடம் நல்ல முறையில் உரையாடவும் கற்றுக்கொள்வர்.

சிறையில் பணிபுரிவது ஒரு வகையில் அழுத்தத்தை உண்டாக்கும் ஒரு பணியாகவே கருதப்படுகிறது. சிறைப் பொறுப்புகளைக் கையாள்வதைத் தவிர்த்து, கைதிகளை நல்வழிப்படுத்தி அவர்களை மீண்டும் சமூகத்தில் ஒருங்கிணைத்து, அவர்களின் மறுவாழ்விற்காக அதிகாரிகள் அயராமல் உழைக்கிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் மூத்த அதிகாரியாகவும் சிங்கப்பூர் சிறைத்துறைப் பயிற்சிக் கழகத்தில் மூத்த பயிற்றுவிப்பாளராகவும் இருக்கிறார் 44 வயதாகும் வேணு அர்ஷ்.

அண்மையில் நிபுணத்துவச் சான்று பெற்ற வழிகாட்டியான இவர், சிறை அதிகாரிகளுக்கு வழிகாட்டியாக இருக்கும் அவசியத்தை ஒட்டி தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

வேணு அர்ஷ்.
வேணு அர்ஷ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிறு வயதில் பள்ளியில் தீயச் செயல்களில் ஈடுபட்ட மாணவர்களைப் பார்த்தபோது வேணு, “இவர்களை வருங்காலத்தில் யார் திருத்தப் போகிறார்களோ?” என்று நினைத்ததுண்டு. அப்போது அவருக்கு எதிர்காலத்தில் இதுபோன்றவர்களைச் சீர்திருத்தும் பணியில் ஈடுபட வேண்டுமென்ற எண்ணம் பிறந்தது.

தேசிய சேவை புரிந்தபோது தனது படைப்பிரிவில் இருந்த நண்பர் ஒருவர் குற்றம் புரிந்ததால் சிறைக்குச் சென்று வந்தார். விடுதலைக்குப்பின் வேணுவைச் சந்தித்த அவர், சிறையில் அதிகாரி ஒருவர் அவரின் வாழ்க்கையை மாற்றியமைத்ததைப் பெருமையுடன் பகிர்ந்துகொண்டார். அப்போது, வேணு சிறைத் துறையில் காலெடுத்து வைக்கவேண்டும் என உறுதியாக இருந்தார்.

தேசிய சேவைக்குப் பிறகு சிங்கப்பூர் சிறைத் துறையில் சேர்ந்த வேணு, பின்னர் புதிதாகச் சேரும் அதிகாரிகளுக்கு உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தில் பயிற்சி அளித்து வந்தார். 2021ல் உள்துறைக் குழு பயிற்சிக் கழகத்தின் சிறந்த பயிற்றுவிப்பாளர் விருதை வென்ற வேணு, தனக்குப் பிடித்தமான பயிற்சி வகுப்பில் சேர்ந்துகொள்ள $500 பரிசும் பெற்றார்.

வழிகாட்டிப் பயிற்சி வகுப்பில் சேர்ந்த அவர், பின்னர் வாழ்வில் தனது நோக்கம் என்ன, தனது அடையாளம் என்ன எனப் பல கேள்விகளுக்கு விடைதேடி, மாற்றங்களைக் காணத் தொடங்கினார்.

சிறை அதிகாரிகளுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களுக்குப் புதிய திறன்களைக் கற்றுத்தருவதைவிட, அவர்களுடன் ஆழமாக உரையாடி அவர்கள் பகிர்ந்துகொள்வதை நன்கு செவிமடுப்பதே ஆகும்.

வழிகாட்டியாக இருப்பதால் அதிகாரிகள் சந்திக்கும் சவால்களுக்குத் தீர்வு அளிக்க முற்படும் எதிர்பார்ப்புக்கு ஆளாகிறார் வேணு. ஆனால், அதிகாரிகளைத் தனிப்பட்ட முறையில் புரிந்துகொண்டு பணி சார்ந்த குழப்பங்களுக்கு ஆலோசனை வழங்குவது வேணுவின் பொறுப்பு.

முன்பு வாழிகாட்டி ஒருவரின் அமர்வுகளுக்குச் சென்ற பிறகு ஆறே மாதங்களில் தன் நடத்தையில் பெரிதளவில் மாற்றம் ஏற்பட்டதாக கூறிய வேணு, “எனது மகள் என்னைப் பார்த்து அப்பா நீங்கள் பெரிய அளவில் மாறி விட்டீர்கள். எனக்கு உங்கள் மேல் அதிக அன்பு பிறந்துள்ளது,” என்று கூறியதை நினைத்து நெகிழ்ந்தார்.

சிறை அதிகாரிகள் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 100 கைதிகளுடன் உரையாடுகிறார்கள். உரையாடுவதற்கு அப்பாற்பட்டு அவர்கள் கைதிகளின் மறுவாழ்வில் ஈடுபட வேண்டும், அதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும், சிறையில் அவர்களின் கட்டொழுங்கைக் கண்காணிக்க வேண்டும். இவற்றையெல்லாம் பொறுப்பேற்று பணியில் துவண்டு போகாமல் இருக்க வேணுவை போன்ற வழிகாட்டிகள் உறுதுணையாக இருக்கிறார்கள்.

அண்மை காலமாக வேலை இடங்களில் ஊழியர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும் முக்கியத்துவத்தை ஒட்டிய செய்திகள் சமூக ஊடகத் தளங்களில் பரவலாக வலம் வந்தன. அது குறித்து கருத்துத் தெரிவித்த வேணு, வழிகாட்டி அமர்வுகளில் அதிகாரிகளுக்கு உளவியல் சார்ந்த தளம் உருவாக்கப்பட்டு அவர்கள் மனம் விட்டுப் பேச வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றார்.

பிறருக்கு வழிகாட்டியாக இருப்பதால் வேணு சில நேரங்களில் சோர்ந்து போவதுண்டு. அந்நேரங்களில் அவர், தனது இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ள வாரத்திற்கு மூன்று நாள் நீச்சல், கடற்கரைக்குச் செல்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். பயிற்றுவிப்பாளராக தன் உடல் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள வேணு மெதுவோட்டத்திலும் தியானத்திலும் நேரம் செலவிடுகிறார்.

கைதிகளுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட அவர், கைதிகளை மனிதர்களாக மதித்து அவர்களிடம் மனிதநேயத்தோடு நடந்துகொண்டால் அவர்களும் அதிகாரிகளை மதிப்பார்கள் என்றார்.

குறிப்புச் சொற்கள்