‘மிஸ் அண்ட் மிசஸ் கிளாமர் இன்டர்நேஷனல்’ அழகிப் போட்டி

‘மிஸ் அண்ட் மிசஸ் கிளாமர் இன்டர்நேஷனல்’ அழகிப் போட்டி

2 mins read
73c41383-b3a4-4ca6-a9a5-3f87bff59a8f
‘பியூட்டி விதின்’ எனும் உள்ளூர் நிறுவனம் அண்மையில் சிங்கப்பூரில் நடத்திய அனைத்துலக அளவிலான ‘மிஸ் அண்ட் மிசஸ் கிளாமர் இன்டர்நேஷனல்’ அழகிப் போட்டி - படம்: வாங்கோ ஸ்டுடியோஸ்
multi-img1 of 3
Google News Preferred Icon

‘பியூட்டி விதின்’ எனும் உள்ளூர் நிறுவனம் அண்மையில் அனைத்துலக அளவிலான அழகிப் போட்டி ஒன்றை சிங்கப்பூரில் நடத்தியது.

‘மிஸ் அண்ட் மிசஸ் கிளாமர் இன்டர்நேஷனல்’ போட்டியில் சிங்கப்பூர், மலேசியா, பெல்ஜியம், தாய்லாந்து, ஹங்கேரி போன்ற பத்து நாடுகளிலிருந்து அழகிகள் கலந்துகொண்டனர்.

இப்போட்டியில் முதல் பரிசைத் தட்டிச் சென்றார் கியூரசாவ் நாட்டைச் சேர்ந்த 38 வயது மார்வெலின் ஹவுஸ். இரண்டாம் பரிசை ஹங்கேரியின் 30 வயது சோனா டுடிக்கும் மூன்றாம் பரிசைத் தாய்லாந்தின் 40 வயது அரியா டெர்ம்னிடிகுல்லும் தட்டிச் சென்றனர். 

டிசம்பர் 15ஆம் தேதி லேண்ட்மார்க் ஹோட்டலில் மாலை 6 மணி முதல் நடைபெற்ற இப்போட்டியில் நடனச் சுற்று, நீச்சல் உடை, தேசியப் பாரம்பரிய உடை போன்றவற்றில் நடந்து வரும் சுற்றுகள், தனித்திறமைச் சுற்று, அறிவுசார் வினா-விடைச் சுற்று என மொத்தம் ஐந்து சுற்றுகள் இடம்பெற்றன. 

உள்ளூர் அழகிகளுக்கு வாய்ப்பளிக்கும் வண்ணம் ‘தீபாவளிப் புடவை ராணி’ எனும் சிறப்பு அங்கம் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் அழகிகள் எழுவர், புடவையில் வலம்வந்தனர். 

இப்போட்டியை நடத்திய பியூட்டி விதின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி உமாகாயத்ரி, “அனைத்துலக அழகிகளை அழைத்துவந்து சிங்கப்பூரில் போட்டி நடத்துவது என் பல்லாண்டுக் கனவு. இத்தகைய போட்டிகள் அனைத்துலக அளவில் இத்துறையில் சிங்கப்பூரை முன்னிறுத்துவதோடு பெண்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்கும்,” என்று கூறினார். 

சிங்கப்பூர்ப் பெண்களுக்கான ‘புடவை ராணி’ அங்கத்தை நம் கலாசாரத்தின் பிரதிபலிப்பாகவும் உள்ளூர்ப் போட்டியாளர்களை ஊக்குவிக்கவும் ஏற்பாடு செய்திருந்தோம். வெளிநாட்டுப் போட்டியாளர்களும் நம் கலாசாரம் குறித்துத் தெரிந்துகொள்ள அது உதவியது என்றாரவர்.  

தீபாவளிப் புடவை ராணி அங்கத்தில் முதல் பரிசு பெற்ற தாஜுநிஷா அபுபக்கர், 43, தாதியாகப் பணியாற்றுகிறார்.

மூன்று பிள்ளைகளுக்கு தாயான இவர், “சிறு வயதிலிருந்தே அழகிப் போட்டிகளில் எனக்கு ஆர்வம் உண்டு. நீண்ட இடைவெளிக்குப்பின் கலந்துகொண்டு முதல் பரிசு பெற்றது மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கிறது. தமிழ்ப் பாரம்பரிய உடையான புடவைப் பிரிவில் பரிசு பெற்றது மிகவும் பெருமையாக உள்ளது,” என்றார். 

குறிப்புச் சொற்கள்
போட்டி