தேசியக் கல்விக் கழகத்தில் தீபாவளிக் கொண்டாட்டம்

2 mins read
7bf32928-9df1-4168-bda0-9c87ddca8621
சிறப்பு விருந்தினரும் முக்கிய விருந்தினர்களும் மத்தாப்புகளைக் கொளுத்தி தீபாவளிக் கொண்டாட்ட உணர்வில் திளைத்தனர்.  - படம்: தேசியக் கல்விக் கழக தமிழ்மொழி, பண்பாட்டுத் துறை
multi-img1 of 3

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி புதன்கிழமையன்று தீபாவளிக் கொண்டாட்டம் களைகட்டியது.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தேசியக் கல்விக் கழக ஆசிய மொழிகள் பண்பாட்டுத் துறையின்கீழ் இயங்கும் தமிழ்மொழி, பண்பாட்டுத்துறை, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ்மொழி மன்றத்துடனும் தேசியக் கல்விக் கழகத் தமிழ்மொழி மன்றத்துடனும் இணைந்து நவம்பர் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

வேர்களை மறந்துவிடாமல் போற்றிக் காக்க வேண்டும் என்னும் நோக்கிலும், பழைமையும் புதுமையும் கைகோத்து நிற்கும் நவீனப் போக்கை வெளிப்படுத்தும் வகையிலும் ‘வேரும் விழுதும்’ என்ற கருப்பொருளில் இக்கொண்டாட்டம் இடம்பெற்றது.

தேசியக் கல்விக் கழக கல்வியியல் ஆய்வுக்கான புலமுதன்மையரும் குழந்தை மேம்பாட்டுக்கான ஆய்வு மையத்தின் இயக்குநருமான பேராசிரியர் கென்னத் பூன் கின் லூங் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அவர் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து வந்திருந்தது நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.

கல்வியாளர்கள், மாணவர்கள் என ஏறக்குறைய 200 பேர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

மேளதாளத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் பின்னர் சிறப்பு விருந்தினரும் முக்கிய விருந்தினர்களும் மத்தாப்புகளைக் கொளுத்தி, தீபாவளிக் கொண்டாட்ட உணர்வில் திளைத்தனர்.

“மரபைக் கட்டிக்காப்பதுடன் மகிழ்ச்சி நிறைந்து, நவீன உலகிற்கேற்றவாறு புதுமையோடு தீபாவளியைத் தமிழர்கள் கொண்டாடுவதை நினைக்கும்போது, தமிழ் வாழும்மொழியாக நிலைத்திருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை,” என்று பேராசிரியர் லூங் தமது சிறப்புரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியின் சிறப்பு அங்கமாகக் கலைநிகழ்ச்சிகள் அரங்கேறின.

‘வேரும் விழுதும்’ என்ற தலைப்பில் நாடகம் மேடையேறியது.

பழங்காலத் தீபாவளி நிகழ்வுகளைப் பாட்டி ஒருவர் தம் பேரனுக்கும் பேத்திக்கும் எடுத்துரைப்பதாகவும் நவீன யுகத்தில் தீபாவளி எங்ஙனம் பழமை மாறாமல் புதுமையைப் புகுத்திக் கொண்டாடப்படுகிறது என்பதைப் பேரனும் பேத்தியும் பாட்டிக்கு விளக்குவதாகவும் நாடகம் அமைந்திருந்தது.

கலைநிகழ்ச்சியின் இடையே, விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் நிகழ்வில் பங்கேற்க வைக்கும் வகையில் புதிர் அங்கம் ஒன்று இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து அதிர்ஷ்டக் குலுக்கல், சிறந்த பாரம்பரிய உடையணிந்து வந்தவர்களுக்குப் பரிசு போன்ற பரிசு அங்கங்களும் இடம்பெற்றன.

குறிப்புச் சொற்கள்