‘சோலோ டிராவல்’, அதாவது யாருடைய துணையுமின்றி வேறு நாட்டிற்குத் தனியாகப் பயணம் மேற்கொள்வது அண்மைக்காலமாகப் பிரபலமாகி வருகிறது.
தனியாகப் பயணம் செல்பவர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு பயணம் செல்வோரின் எண்ணிக்கை, 2023 முதல் 2030 வரை ஆண்டுக்குச் சராசரியாக 9.1 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, தனியாகப் பயணம் செல்பவர்களில் 85 விழுக்காட்டினர் பெண்கள் என்பது ஓர் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்து போன்ற நாடுகளில் தனிப் பயணத்திற்கான முன்பதிவுகள் கடந்த ஈராண்டுகளில் 42 விழுக்காடு உயர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தொடக்கத்தில் பயம், தயக்கம், தனிமை, சலிப்பு போன்ற பல மனக்குழப்பங்கள் ஏற்படுவது இயல்பே.
ஆனால், இவற்றை எதிர்கொண்டு தனியாகப் பயணம் செய்தோர் எண்ணற்ற அனுபவங்களையும் நன்மைகளையும் பெற்றுள்ளனர்.
தன்னம்பிக்கை வளர்த்துக்கொள்ளுதல், புதிய கண்ணோட்டம், சுதந்திரம், தன்னிச்சையாகச் செயல்படுதல், புதிய நட்புகள், தன்னைத் தானே ஆழமாகப் புரிந்துகொள்ளுதல் போன்ற பல காரணங்களுக்காக தனிப்பயணம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தனிப்பட்ட விருப்பத்திற்கேற்ப ஒரு பயணத்தைத் திட்டமிடும்போது, முடிவுகள் நம் கையில் உள்ளதால் தன்னம்பிக்கையையும் முடிவெடுக்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது.
ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள், கடமைகள் என வரும்போது நண்பர்களுடன் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது சற்று சிரமமாகக்கூடும், அல்லது விருப்பங்களும் வேறுபடக்கூடும். ஆனால், இன்றைய பல பயணச் செயலிகளின் உதவியுடன், ஒருமித்த விருப்பங்கள் கொண்டவர்களை எளிதாகக் கண்டறிந்து இணைய முடியும்.
தொடர்புடைய செய்திகள்
அனைவரும் தனிப்பயணம் மேற்கொள்கிறார்கள் என்பதால், தாமும் செல்லலாம் என எண்ணி அது எளிதானது என எடுத்த எடுப்பிலேயே முடிவெடுக்கவேண்டிய அவசியம் இல்லை.
‘வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்’ என்ற குறளிற்கேற்ப அதற்காக நாம் முன்கூட்டியே தயார்ப்படுத்திக்கொள்வது அவசியம்.
நாம் எந்த நாட்டிற்குச் செல்கிறோமோ, அந்நாட்டின் அரசியல் சூழல், கலாசாரம், மொழி, அந்நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், அண்மைக் காலங்களில் வெளிவந்த செய்திகள், அபாயமிக்க இடங்கள், இயற்கைப் பேரிடர்களுக்கான அறிகுறிகள் ஏதும் உள்ளதா போன்றவற்றை அறிந்துகொள்ள வேண்டும்.
இன்று உலகமே நம் கையில் என்று சொல்லும் அளவிற்குச் சமூக ஊடகம் வளர்ந்துள்ளது.
இப்போது ‘வ்லாக்ஸ்’, ‘ப்லாக்ஸ்’ போன்ற பிற பயணிகளின் வலைப்பதிவுகளின் வாயிலாக அவர்களின் அனுபவங்களைப் பார்த்து அந்த நாட்டைப் பற்றிய சில குறிப்புகளை எடுத்துக்கொள்ளலாம்.

