நிறம் மாறிய பூக்கள்

சிறுகதை

ஷோபா குமரேசன்

'டர்ர்ர்' தையல் இயந்­தி­ரத்­தின் ஒரு­புற சக்­க­ரம் ராட்­டி­னம் போல் சுழன்­றுகொண்­டி­ருந்­தது. துணி தைத்­துக்­கொண்­டி­ருந்த ரம்யா சோர்­வாகி இயந்­தி­ரத்தை நிறுத்­தி­னாள். அவ­ளின் மனம் வேலை­யில் ஒன்­றா­மல் வழி தடு­மா­றிப்போன வழிப்­போக்­க­னைப் போல எங்­கெங்கோ அலை­பாய்ந்து கொண்­டி­ருந்­தது.

இந்த நிலை­யில் தொடர்ந்து தைப்­பது நல்­ல­தல்ல என அவ­ளின் உள்­ளு­ணர்வு எச்­ச­ரிக்க, மெது­வாக எழுந்­த­வள் சாள­ரத்­தின் திரைச்­சீலையை விலக்க, அப்­போது வந்து தீண்­டிய இத­மான காற்­றும், வெளி­யில் விடி­யற்­கா­லை­யில் பெய்த மிதமான மழை எழுப்­பி­யி­ருந்த மண் வாச­னை­யும் அவளை சற்று அமை­திப்­படுத்­தி­யது.

அட! இந்த இயற்­கைக்­குத்­தான் எவ்­வ­ளவு ஆற்­றல்! இந்த ஆர்ப்­ப­ரிக்­கும் மனத்­திற்­கும் கூட ஒத்­த­டம் போடு­கி­றதே என எண்­ணி­ய­வள், இந்த இயற்­கை­யின் சுகத்தை முழு­வ­து­மாக அனுபவிக்க சிறிது நேரம் உலாவி வர­லாம் எனத் தீர்­மா­னித்து, குடி­யி­ருப்­பின் கீழே இறங்­கி­னாள்.

மழைக்கு அப்­போது இடை­வேளை நேரம் போலும், சற்றே ஓய்­வெ­டுத்­துக் கொண்­டி­ருந்­தது, நல்ல சில்­லென்ற காற்று வீச, மரத்­தில் ஆங்­காங்கே நனைந்த சிட்­டுக்­குருவி­கள் இறக்­கை­களை சிலிர்த்து இசை பாட, கறுத்த மேகமோ ஆத­வ­னுக்கு வழி­வி­டா­மல் இன்­னும் மூடியே இருந்­தது.

இவ்­வாறு ரசித்­துக்கொண்டே சென்­ற­வள் சற்­றுத்தள்ளி ஒரே வரிசை­யில் வளர்ந்­தி­ருந்த செடி­யில் பூத்­தி­ருந்த வெண்மை நிற மலர்­களைப் பார்த்­த­தும் ஒரு கணம் நின்­றாள். எவ்­வ­ளவு அழகு! அதன் இலை­களில் ஆங்­காங்கே பரு­வப்­பெண்­ணின் முகத்­தில் வரும் பருக்­கள் போல, மழைத்­துளி மொட்டு போல் பளிச்­சென்று மின்­னி­யது. அந்­தச் செடியை உற்று ரசித்­த­வ­ளின் மன­நிலை திடீ­ரென திசை­மா­றும் காற்­றைப் போல மாறி, ஏதோ நினை­வு­கள் வந்து அவளை அழுத்­தி­யது.

'இந்த இலை போல இளம்­பச்சை நிறத்­தைக் கொண்ட தனது தோழி­யின் உடை­யில், இந்த அழ­கான பூக்­கள் போலவே வெள்ளை நிறத்­தில் பூத்­ தை­யல் போட்­டுக்கொடுத்­தது' ஒரு மின்­னல் கீற்­றாய் நினை­வில் வர, வீட்­டிற்­குத் திரும்­பி­ய­வ­ளின் எண்­ணங்­களும் பின்­னோக்­கித் திரும்­பி­யது.

ரம்யா எந்த மாதி­ரி­யான உடுப்­பு­க­ளைக் கொடுத்­தா­லும் அதை நேர்த்­தி­யாக ரசித்­துத் தைப்­ப­வள். அதோடு அவள் விரல்­க­ளின் பின்­ன­லில் பூக்­கும் பூத்­தை­ய­லும், அதில் வடி­வ­மைத்த மலர்­களும் அவள் பெய­ருக்­கேற்ப ரம்­ய­மாக இருக்­கும். அத­னால் அந்த 'பொங்­கோல்' வட்­டா­ரத்­தில் அவ­ளின் பெயர் சற்­றுப் பிர­ப­லம்.

ரம்­யா­வின் வீட்­டிற்கு நேர் கீழே ஏழா­வது தளத்­தில் குடி­யி­ருக்­கும் நாற்­பது வயது மதிக்­கத்­தக்க பெண்மணி மரி­யம் ஒரு மாதத்திற்கு முன்பு அறி­மு­க­மா­னார். இதற்கு முன்பு அடிக்­கடி குடி­யி­ருப்­பிற்­குக் கீழே அவ­ரைச் சந்­தித்­தி­ருந்­தா­லும் இரு­வ­ருக்­குள் பேசிக்­கொள்­ளும் அள­விற்கு நெருங்­கிய பழக்­க­மில்லை.

ஒரு நாள் ரம்­யா­வைத் தேடி வந்த அவ­ரின் கையில் பண்­டி­கைக்­காக எடுத்த சற்றே பள­ப­ளப்­பான, இளம்­பச்சை நிற உடை இருந்­தது. அதை ரம்­யா­வி­டம் கொடுத்து அதில் அழ­கான பூத் ­தை­யல் போட்­டுக் கொடுக்­கு­மாறு கேட்­டுக் கொள்ள, ரம்­யா­வும் அவ்­வாறே செய்து கொடுத்­தாள். பண்­டி­கைக்கு மரி­யத்­தின் வீட்­டிற்கு வந்த உற­வி­னர்­க­ளின் கண்­களை அவ­ளின் உடை­யின் அழகு கவர்ந்­தி­ழுக்க அவ­ருக்கோ அதில் மிக­வும் பெரு­மி­தம். அந்­தக் களிப்­பில் பண்­டிகை தினத்­தன்று ரம்­யா­வைத் தேடி கமகமக்­கும் பிரி­யா­ணி­யும் வர, இரு­வ­ருக்­கும் இடை­யில் நாள­டை­வில் நல்லுறவு மலர்ந்­தது.

திரு­ம­ண­மாகி இரண்டு ஆண்­டு­க­ளா­கி­யும் ரம்­யா­விற்­குக் குழந்­தைப்­பேறு தள்­ளிப்­போக, அவள் அவ்­வப்­போது தன் மன பாரத்தை மரி­யத்­தி­டம் இறக்கி வைப்­பாள். மரி­ய­மும் தனக்­குத் தெரிந்த சில ஆலோ­ச­னை­க­ளை­யும் கொடுத்து ஊக்­கப்­ப­டுத்­து­வார்.

ஆனால் இந்த அன்பை அண்மைக் கால­மாக காண­மு­டி­ய­வில்லை. எத்தனை முறை கிளிப்­பிள்­ளைக்­குச் சொல்­வது போல் விளக்­கு­வது?

நினைக்­கும்போதே ரம்­யா­விற்கு மனத்­தில் சலிப்பு தட்­டி­யது. அப்­போது சிந்­த­னை­யி­லி­ருந்து மீண்­டெ­ழுந்த ரம்யா வீட்டு வேலை­களில் மும்­மு­ர­மாக இருக்க, மதி­யம் சரி­யாக இரண்டு மணி­ய­ள­வில் வீட்­டில் அழைப்பு மணி சிணுங்­கி­யது.

'அய்யோ, திரும்­ப­வும் பிரச்­சி­னையோ, அவ­ரா­கத்­தான் இருக்­குமோ?' என்ற பதற்­றத்­து­டன் கத­வைத் திறக்க, ஆம் ரம்யா நினைத்­தது போலவே வெளி­யில் மரி­யம்­தான் நின்று கொண்­டி­ருந்­தார்.

முன்­பெல்­லாம் இது­போல வரும்­போது அவ­ரி­டம் மலர்ந்­தி­ருக்­கும் இன்­மு­கம் இப்­போது இல்லை.

ரம்யா தன்­னைத்­தானே சுதா­ரித்­துக் கொண்டு, மரி­யத்தை வர­வேற்­றாள்.

ஆனால் அவ­ளின் வர­வேற்பு மரி­யத்­தின் செவியை எட்­டி­ய­தா­கத் தெரி­ய­வில்லை. வந்­த­வ­ரின் முக­மும் சரி­யில்லை. அவர் எது­வும் கூறா­மலே ரம்­யா­வால் அவர் வரு­கை­யின் நோக்­கத்தை ஓர­ளவு யூகிக்க முடிந்­தது.

அப்­போது மெது­வாக ஆரம்­பித்த மரி­யம் சிறிது நேரத்திற்கு முன்­பு­தான் அவ­ரு­டைய துணி­யைத் துவைத்து சமை­ய­ல­றையை ஒட்­டி­யுள்ள சன்­ன­லுக்கு வெளியே இருக்­கும் கம்­பி­யில் காயப்­போட்­ட­தா­க­வும், அதுல கோழி எலும்­புத் துண்டு விழுந்­தி­ருப்­ப­தா­க­வும் வருத்­தம் கலந்த குர­லில் கூறி­னார். அவர் நேர­டி­யாக ரம்­யா­வைக் குறை கூறா­விட்­டா­லும், இது­போன்று அவர் அவ்­வப்­போது வந்து சொல்­வது ரம்­யா­வின் மனத்­தில் கலக்­கத்தை உண்­டாக்­கி­யது. 'ஏன் என்­னி­டம் வந்து அடிக்­கடி குறை­பட்­டுக்கொள்­கி­றார்? ஒரு­வேளை என்­னைச் சந்­தே­கிக்­கி­றாரா?' கேள்­விக்­க­ணை­கள் அவள் நெஞ்­சுக்­குள் தைத்­தன.

இது­போன்ற பிரச்சினை­கள் கடந்த மூன்று வாரங்­க­ளாக முடிவு தெரி­யாத கொரோனா தொற்­றுப் போல் சென்­று­கொண்­டி­ருக்­கிறது.

முத­லில் மீன்­முள், எலும்பு எனத் தொடங்கி பின்­னர் பட்­டி­யல் நிறுத்­தமே இல்­லா­தி­ருக்­கும் விரை­வுச்­சா­லையைப் போல் நீண்டு கொண்டே சென்­றது. இதெல்­லாம் கூட பர­வா­யில்லை.

நேற்று கையில் ஈரத்­து­ணி­யோடு வந்­த­வ­ரின் முகம் சற்­றுக் கோப­மாக வேறு காணப்­பட்­டது.

அவர் கையி­லி­ருந்த உடையை காண்­பித்து அதை அன்­றைக்­குத்­தான் முதன்­மு­றை­யா துவைத்து காய வைத்­த­தா­க­வும், அதில் அங்­கங்கே கறை பட்டு, கரு­வாட்­டுக் கறி வாடை அடிப்­ப­தா­க­வும் சலிப்­போடு கூறி­னார். அவர் கையி­லுள்ள உடையை உற்­றுப் பார்த்த ரம்­யா­விற்­குத் தூக்­கி­வா­ரிப் போட்­டது.

அது அவள் ஆசை­யாய்த் தைத்­துக் கொடுத்த பண்­டிகை உடை. அதில் ரம்யா போட்­டுக்கொடுத்த வெள்ளை நிற பூத்­ தை­யல் கறை­பட்டு நிறம் மாறி­யி­ருந்­தது. அதைக் கண்ட ரம்­யா­வின் மனம் திருஷ்டி பூச­ணிக்­காய் போல் சித­றி­யது.

*

அன்று மாலை அலு­வ­ல­கத்­தில் இருந்து வழக்­கத்­திற்கு மாறாக சற்று முன்­ன­தா­கவே திரும்­பிய ரம்­யா­வின் கண­வர் குமார், அவ­ளின் குழப்­ப­ம­டைந்த முகத்­தைப் பார்த்­த­வ­னாய், என்ன தீவிர யோசனை என்று கேட்க அவ்­வ­ள­வுதான், அவள் ஆற்­றா­மை­யால் தன் மன­தில் உள்­ளதைக் கொட்ட ஆயத்­த­மா­னாள்.

நம்ப வீட்­டுக்கு கீழே மரி­யம் இருக்­காங்­க­தானே என வருத்­த­மான குர­லில் ஆரம்­பித்த ரம்­யாவை இடை­ம­றித்த குமார், அவளை உற்­சா­கப்­ப­டுத்­து­வ­தாக நினைத்­துக் கொண்டு, ஆமாம், அவுங்­க­ளுக்­கென்ன இன்­னக்கி பிரி­யாணி ஏதும் கொடுத்­தாங்­களா என்று கேட்க, அதைக் கேட்ட ரம்­யா­வின் கூரிய பார்வை அவ­னைத் துளைத்­தது.

பின்­னர் குமார் நிலை­மையை உணர்ந்து அமை­தி­யாக, அவள் திரும்­ப­வும் தன் மனக் குமு­றல்­களைக் கொட்­டத் துவங்­கி­னாள்.

மரி­யம் தன்னை சந்­தே­கப்­ப­டு­வதுபோல் தோன்­று­வ­தாக கூறிய ரம்யா, அதற்­கான கார­ணத்தை வகுப்­பில் ஆசி­ரி­யர் நடத்­து­வ­தைப் போல விரி­வா­கக் கூற, அதை கேட்ட குமாரோ வாய­டைத்து நின்­றான்.

அவுங்க வீட்­டுல காயப்­போ­டுற துணி­யில கொஞ்ச நாளா அடிக்­கடி சாப்­பாட்­டுக் கழிவா விழு­வு­தாம். அதை திரும்ப திரும்ப வந்து என்­கிட்ட சொல்­றாங்க, என்ன சொல்­ற­துன்னே புரி­ய­லைங்க என பெரு­மூச்சு விட்­டாள்.

என்­னது உன்­னையே சந்­தே­கப் படு­றாங்­களா? நீயே துணி அதி­கமா தைக்க கிடக்­கு­துன்னு எனக்கு இரண்டு நாளா ரசத்­தை­தானே வச்­சிக்­கொ­டுத்த? அதுல என்ன கழி­வைக் கண்­டாங்க? என்று குமார் திரும்­ப­வும் அவளை கேட்க, அதற்கு ரம்யா, அட, உங்­க­கிட்ட போய் சொன்­னேன் பாருங்க, இந்­தப் பிரச்­சினை இன்­னக்கி இல்­லீங்க, கடந்த மூன்று வாரமா போய்க்­கிட்டு இருக்கு. நானும் உங்­க­கிட்ட சொல்ல முயற்­சிக்­கும் போதெல்­லாம் ஏதோ கார­ணத்தைச் சொல்லி நழு­வி­டு­றீங்க.

நானும் சரி­யா­யி­டும்னு நினைச்­சேன் என்று கூறிய அவ­ளின் வார்த்­தை­கள் கவ­லை­யாய் வெளி­வந்­தன.

குமா­ருக்­கும் ரம்யா கூறி­யதை ஜீரணிக்­க­மு­டி­ய­வில்லை. ரொம்ப பாச­மாக பேசு­ப­வரா­யிற்றே, அவரா இப்­படி என சிந்­த­னை­யில் ஆழ்ந்­த­வ­னி­டம் இதுகூட பர­வா­யில்­லீங்க என சற்று நிறுத்தி அவ­னைப் பார்த்­த­வள் பிறகு, நேத்து நான் அவுங்­க­ளுக்­காக தைச்சுக் கொடுத்­தேன்ல புது உடை, அதுல கரு­வாட்­டுக் கறி கறை பட்­டு­ருக்கு, அதைக்கொண்டு வந்து என்­கிட்ட காமிச்­சிட்டு, மறை­மு­கமா புகா­ர் கூறிட்டுப் போறாங்க என்று கூறி முடித்­தாள்.

என்­னது கரு­வாட்­டுக் கறியா? நினைக்­கும் போதே எச்­சில் ஊறுதே? ஆமாம் இதெல்­லாம் ஏன் நீ செய்­யு­றதே இல்லை?

ஏக்­கத்­து­டன் கேட்ட குமாரை, ரம்யா மறு­படி­யும் கோபத்­து­டன் நோக்க, உங்­க­ளுக்கு என் வேதனை எங்க புரி­யப்­போ­குது, என்ன சொன்­னா­லும் விளை­யாட்­டுத்­த­ன­மா­கவே பேசு­றீங்­களே என்று கூற அவன் மௌன­மா­னான்.

சற்று நேர மௌனத்­திற்­குப் பிறகு, சும்மா கவ­லைப்­ப­டு­றி­யேன்னு அப்­ப­டிப் பேசி­னேம்மா, சரி என்ன சொல்லி அவுங்­களை சமா­ளிச்ச என்று குமார் கேட்க, எனக்கு வேற வழி தெரி­ய­லேங்க. அவுங்­கள சம­ய­ல­றைக்­குள்ள கூப்­பிட்­டேன், நான் வச்­சி­ருந்த ரசத்­தைக் காமிச்சு, நான் அவள் இல்­லைன்னு சூச­க­மா­கச் சொல்­லிட்­டேன்.

ஆனா அவுங்க பொதுவா குறை சொன்ன மாதிரி பேசிட்­டுப் போயிட்­டாங்க. மேலேர்ந்து யார் கொட்­டி­னா­லும் கீழ­தானே வரும்? அது அவுங்­க­ளுக்குப் புரி­யா­மலா இருக்­கும்? இப்­படி என்­னி­டம் மட்­டுமே குறை­பட்­டுக்­கி­றாங்­களே? என்­றாள் வருத்­தத்­து­டன் ரம்யா.

அது சரிம்மா, நம்ப வீட்­டுத் துணி வெளி­யில காயப் போடு­றப்ப ஏதும் விழு­ற­தில்­லையா? என்ற குமா­ரி­டம், என்­னங்க மறந்­துட்டு கேட்­கு­றீங்க?

நாம­தான் குழந்­தைக்­கா­கச் சிகிச்சை எடுத்­து­கிட்டு இருக்­கி­ற­தால இதுபோன்ற சிர­ம­மான வேலையை நான் செய்­ற­தில்­லையே.

அத­னால இந்­தப் பிரச்­சி­னையை நான் சந்­திக்­கல என்று ரம்யா பதி­ல­ளிக்க, ஆமாம்ல, ஏதோ ஞாப­கத்­துல கேட்­டுட்­டேன்.

சரி விடு, இந்த வாரம் மட்­டும் பார்ப்­போம். இதுவே தொடர்ந்தா நாமளே புகார் கொடுத்­தி­டு­வோம் என்­ற­வாறே அவளை சமா­தா­னப்­ப­டுத்­தி­விட்டு நகர்ந்­தான்.

*

அன்று இரவு ஏழு மணி­ய­ள­வில், அதே குடி­யி­ருப்­பில் வசிக்­கும் குழலி, ரம்­யா­வி­டம் தைக்­கக் கொடுத்­தி­ருந்த அவ­ளின் துணி­களை வாங்­கு­வ­தற்­காக வந்­தாள்.

கிட்­டத்­தட்ட ஒருமாத இடை­வெளிக்­குப் பின் குழ­லி­யைக் கண்ட ரம்­யா­வின் முகம் முழு மின்­னோட்­டம் ஏறிய திறன்­பே­சி­யைப் போல பிர­கா­ச­மா­னது. அவளை வர­வேற்று துணி­களை எடுத்­துக்கொடுத்த ரம்­யா­வி­டம், வேலை­யெல்­லாம் எப்­ப­டிப் போய்க்­கிட்டு இருக்கு? வாடிக்­கை­யா­ளர்­கள் நிறைய சேந்­துட்­டாங்க போல­ருக்கே? ரொம்ப மகிழ்ச்­சியா இருக்கு ரம்யா. பிடிச்ச தொழிலை செய்­யும் போது கிடைக்­கிற மன­நி­றைவே தனி­தான் என அவ­ளைப் பற்­றிச் சிலா­கித்­துப் பேசி­னாள்.

குழலி கூறி­ய­தற்­குப் புன்­சி­ரிப்பை உதிர்த்த ரம்யா, அவள் குடும்ப நல­னைப் பற்றி விசா­ரித்­தாள். அதற்கு குழலி இன்­னும் வீட்­டி­லி­ருந்தே பணி­பு­ரி­வ­தா­க­வும், இப்­போது பணிப்­பெண் இல்லை எனக் கூற­வும் அதைக் கேட்ட ரம்­யா­விற்கு ஆச்­ச­ரி­யத்­தில் விழி­கள் விரிந்­தன. பர­வா­யில்­லையே, பணிப்­பெண் இல்­லா­மலே எல்லா வேலை­க­ளை­யும் சமா­ளிக்­கி­றீங்­களே எனக் குழ­லி­யி­டம் வினவ, அதற்கு அவளோ காலை­யி­லேயே சமை­யல் வேலை­களை முடித்து விடு­வ­தா­க­வும், பிறகு அலு­வ­லக வேலை­யில் ஈடு­படு­வ­தா­க­வும் கூறி­னாள். அதி­லும் முக்­கி­ய­மா­கப் பிள்­ளை­க­ளைப் பற்றி கூறும்­போது, மூத்­த­வன் அவன் வேலை­களைப் பொறுப்­பு­டன் சொந்­த­மாக செய்துகொள்­வ­தா­கக் கூறிப் பெரு­மைப்­பட்­டுக்கொண்­டாள்.

இளை­ய­வ­னைப் பற்றி கேட்ட ரம்­யா­வி­டம், அவன்­தான் கொஞ்­சம் 'துரு துரு'வென அதி­க­மா­கச் சுட்­டித்­த­னம் செய்­வ­தா­க­வும், பள்­ளிக்­குச் சென்­றால் அவ­னும் ஒழுக்­கத்­தைக் கற்­றுக்­கொண்டு சரி­யாகி­வி­டு­வான் என நம்­பு­வ­தா­க­வும் கூறி பெரு­மூச்சு விட்­டாள்.

மேலும் போன­மா­தம் தன் பிறந்­த­நாள் பரி­சாக ஒரு பூனையை அவன் அடம் பிடித்து வாங்கி வளர்த்­துக் கொண்­டி­ருப்­ப­தா­க­வும், அது­வும் அவ­னைப் போலவே அங்­கு­மிங்­கும் ஏறித்­தாவி சேட்டை செய்­வ­தா­க­வும் கூறி­னாள்.

மேலும் உணவு நேரத்­தில், பிள்­ளை­க­ளுக்கு உண­வைப் பரி­மா­று­வ­தோடு சரி, அவர்­களே சொந்­த­மாக உணவை வீணாக்­கா­மல் சாப்­பிட்டு­விட்­டு காலித் தட்­டைத் தன்­னி­டம் காண்­பித்­து­விட்டு அவர்­களே கழுவி விடு­வ­தாகக் கூறி­னாள். அதைக் கேட்ட ரம்யா மெய்சிலிர்த்­துக் குழந்­தை­க­ளைப் பாராட்­டி­னாள்.

பிறகு மெது­வா­கக் குழ­லி­யி­டம் தன் பிரச்­சி­னை­யைப் பகிர்ந்­து கொள்ள ஆரம்­பித்­தாள்.

"குழலி, மேல நம்ப தோழி மரி­யம் இருக்­காங்­கள்ள.. அவுங்க ஒரு மாதமா அப்­பப்ப என்­கிட்ட வந்து அவுங்க வீட்ல காயப்­போ­டுற துணி­யில ஒரே சாப்­பாட்­டுக் கழிவா விழு­துன்னு குறை­பட்­டுக்­கி­றாங்க. நான்­தான் செஞ்­சேன்னு அவுங்க சொல்­லலை, இருந்­தா­லும் என்­னைச் சந்­தே­கப்­ப­டு­றாங்­க­ளோன்னு மன உளைச்­சலா இருக்கு.

இன்­னைக்­குக் கூட துணி­யில கோழி எலும்­புத் துண்டு விழுந்­தி­ருக்­குன்னு வந்து சொல்­லிட்­டுப் போனாங்க.

நேத்து இதை­விட மோசம், அவர்­க­ளு­டைய புது உடை­யில் கரு­வாட்­டுக் கறி பட்டு உடை கறை­யா­கி­விட்­டது, அது அவ­ரின் பண்­டிகை உடை­வேறு, எனக்கு என்ன சொல்­ற­துன்­னே தெரி­யலை," எனக் கூறி அங்­க­லாய்த்­தாள் ரம்யா.

இதைக் கேட்ட குழ­லி­யின் கண்­கள் இருண்­டன. அதற்­குப் பிறகு ரம்யா பேசிய எது­வும் குழ­லி­யின் காதில் ஏற­வில்லை.

மெது­வாக எழுந்­த­வள், கவ­லைப்­ப­டா­தீங்க ரம்யா, இது சின்ன பிரச்­சி­னை­தான்.

யாரா­வது விளை­யாட்­டுத்­த­ன­மாக் கூடச் செய்­தி­ருக்­க­லாம். சீக்­கி­ரம் சரி­யாகிவிடும் எனக் கூறி ரம்­யா­வின் வீட்­டிற்கு நேர் மேலே ஒன்­ப­தா­வது தளத்­தில் இருக்­கும் தனது வீட்டை நோக்கி விரைந்­தாள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!