மரபுவழுவில் மலர்ந்த கவிதை!

- மா. அன்பழகன்

எண்ணத்திற்கு வண்ணமிட்டு, இரைச்சலுக்கு விடைகொடு!

உண்மைக்குக் கோட்டையெழுப்பி, ஊழலுக்குக் கல்லறைகட்டு!

சிந்தனையைச் சலவைசெய்து, செயலுக்குப் பட்டைதீட்டு!

நிந்தனையை மூழ்கடித்து, நேர்மையைக் குளிப்பாட்டு!

செலவுக்கு அணையைக்கட்டி, சேமிப்புக்கு ஏரிவெட்டு!

நிலவுக்குப் பாதைபோட்டு, நித்திரையைப் பறக்கவிடு!

எள்ளலை ஆவியாக்கி, ஈதலை மேகமாக்கு!

துள்ளலுக்கு நெய்யூற்றி, தூங்காமைக்கு விளக்குப்போடு!

அறிவுரை தென்றலாய் நுழைந்தபின் ஆற்றலைப் புயலாய் ஆக்கு!

வறியவரை வானிலேற்றி, வாழ்வியலில் இறக்கிவிடு!

காழ்ப்புக்குத் தாழ்ப்பாள்போட்டு, கருணைக்குக் கதவைத்திற!

ஆழ்மனத்துள் அன்புதேக்கி, அனைவருக்கும் மடையைத் திற!

மனமதை ஈரமாக்கி, மனிதநேயத்தை அருவியாக்கு!

சினவெயிலில் நனைந்திடாது, சீற்றத்திற்குத் திரைபோடு!

தீனியைச் சுண்டவிட்டு, தேகநலத்தைப் பொங்கவிடு!

ஏணியைப் பாலமாக்கி, எல்லோர்க்கும் தோணியாகு!

பூசலுக்குக் குழிதோண்டி, பொதுநலனுக்கு ஒளிபாய்ச்சு!

பாசத்திற்கு வாய்க்கால் வெட்டி, பாவத்திற்குச் சமாதிகட்டு!

பொய்க்குப் 'போகி'விழா! பொல்லாங்குக்கு மூடுவிழா!

தூய்மைக்குப் பச்சைவிளக்கு, துரோகத்திற்குச் சிவப்புவிளக்கு!

புண்பட்டாலும் பொன்மனத்தார், பொறுமையை அடைகாப்பார்!

பண்பாட்டைத் தலைமேல்தூக்க, பார்விழித்துத் தேன்பூக்கும்!

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!