வேலி தாண்டி

சிறுகதை

கி. சுப்பிரமணியம்

இரு­பத்து மூன்று வயது

இளை­ஞ­னின் தவிப்பு!

உல­கத்­தையே சுற்றி வர­வேண்­டும் என்ற பேரா­வல்! அப்­படி உல­கம் சுற்­றும் அள­விற்கு, அறவே வச­தியோ பணமோ இல்­லை­யென்ற உண்மை தெரிந்­தும் கற்­ப­னைக்­க­ட­லில் பய­ணித்து மிதப்­பான்.

உல­கம் சுற்­று­வது ஒரு­பு­றம் இருக்­கட்­டும். பக்­கத்­தில் இருக்­கும் மலே­சி­யா­விற்கே சரி­யா­கச் சென்று வந்­த­வ­னில்லை குமார்!

ஏதோ இரு­முறை அரு­கில் இருக்­கும் ஜோகூர் பாரு­விற்கு நண்­பர்­க­ளு­டன் சென்­று­வந்­துள்­ளான். அவ்­வ­ளவுதான்!

அப்­ப­டிப் போக வேண்டி இருந்­த­தால், நீல நிற பாஸ்­போர்ட் ஒன்­றிற்கு விண்­ணப்­பித்­துப் பெற்­றுக்­கொண்­டான்.

1973ஆம் ஆண்டில் பெற்ற அந்­த பாஸ்­போர்ட், மலே­சி­யா­வின் கடைசி வடக்கு மாநி­லம் பெர்­லிஸ் வரை மட்­டும் செல்ல அனு­மதி உண்டு. வெளி­நா­டு­க­ளுக்­குச் செல்ல அது பயன்­படா!

மலே­சி­யா­வின் பினாங்கு வரை சென்று திரும்ப ஆவல் கொண்­டான் குமார். தூரப் பய­ணம் என்­றால் குமா­ரின் தாய் தயக்­கம் காட்­டு­வாள் என்­ப­தால், கோலாலம்­பூர் வரை சென்று திரும்­பு­வ­தாக அவ­ளி­டம் சொல்­லி­வைத்­தான்.

தஞ்­சோங் பகார் ரயில் நிலை­யத்­தில் முன்­கூட்­டியே கோலா­லம்­பூர் பய­ணத்­திற்­கான பதி­னோரு வெள்ளிக் கட்­ட­ணத்­தைக் கட்டி, மூன்­றாம் வகுப்பு பய­ணச் சீட்­டைப் பெற்­றுக்­கொண்­டான்.

மறு­நாள் தாயி­டம் விடை­பெற்­றுக்­கொண்டு ரயில் நிலை­யத்­திற்கு விரைந்­தான் குமார்.

தஞ்­சோங் பகார் ரயில் நிலை­யத்­தில் அவ்­வ­ள­வா­கக் கூட்­டம் இல்லை. மலே­சிய ரிங்­கிட்­டுக்­குப் பணத்தை மாற்­றிக்­கொண்­டான். சிங்­கப்­பூர் தொண்­ணூறு காசிற்கு ஒரு ரிங்­கிட்! அந்த மூன்­றாம் வகுப்புப் பெட்­டி­யில் ஏறி­னான் குமார். அவன் கொண்டு வந்­தி­ருந்த ஒரு நடுத்­தர அளவு கைப்­பெட்டி ஒன்றை இருக்­கைக்கு அருகே வைத்­துக்­கொண்டு, ரயில் புறப்­படும் நேரத்தை எதிர்­பார்த்­த­படி அமர்ந்­தி­ருந்­தான்.

சிறிது நேரத்­தில் ரயில் புறப்­பட்­டது, இரு­பு­ற­மும் தாண்­டிச் செல்­லும் ரயில் பாதை­யோர வீடு­க­ளை­யும், இயற்கை காட்­சி­க­ளை­யும் ரசித்­த­படி அமர்ந்­தி­ருந்­தான். ஒரு முக்­கால் மணி நேரத்­தில், சிங்­கப்­பூர் தீவைத் தாண்டி மலே­சிய தீப­கற்­பத்­திற்­குள் ரயில் சக்­க­ரங்­கள் சுழன்­றன.

தலை­ந­கர் கோலாலம்­பூரை, ஆறு மணி­நே­ரத்­திற்­குப்­பின் சென்­ற­டைந்­தான்.

கைப்­பெட்­டி­யு­டன் ரயிலை விட்டு இறங்கி, அந்­தப் பழங்­கால ரயில் நிலை­யக் கட்­ட­டத்தை ரசித்த வண்­ணம் கடைத் தெருக்­க­ளைக் கடந்து ஒரு ஹோட்­ட­லைக் கண்­டு­பி­டித்­துப் பதிவு செய்­து­கொண்­டான்.

அடுத்த மூன்று நாள் தலை­நகரைச் சுற்­றி­விட்டு, ஈப்போ நக­ரத்­துக்கு டாக்­சி­யில் சென்று, அங்­கும் இரண்டு நாள் தங்­கி­விட்டு, அவன் ஆவ­லு­டன் பார்க்க விரும்­பிய பினாங்­கிற்கு விரைந்­தான்

ஒரு மூன்று மணி நேரப் பய­ணம், புரோ­வின்ஸ் வெலஸ்லி மாநி­லத்­தின் தலை­ந­கர் பட்­டர்­வொர்த்­தில் டாக்சி நின்­றது. இங்­கி­ருந்து பினாங்கு தீவிற்­குச் செல்­லக் கப்­பல் சவாரி செயல்­பட்­டது. அதில் ஏறிப் பினாங்கு தீவின் ஜார்ஜ் டவுன் அடைந்­தான் குமார்.

பல இந்­திய வணி­கர்­கள் இங்கு மிக­வும் சுறு­சு­றுப்­பாக வாணி­பத்­தில் ஈடு­ப­டு­வ­தைக் கண்­டான். மிக­வும் மகிழ்ச்­சி­யு­டன் தெருக்­க­ளைப் பார்த்­த­படி ஒரு சிறிய ஹோட்­ட­லில் பதிவு செய்­து­கொண்­ட­பின் பினாங்கை இரண்டு நாள் நன்­றா­கச் சுற்­றிப் பார்த்­தான். அடுத்த நாள், மதிய உணவை முடித்­துக் கொண்டு மீண்­டும் தெரு­வில் நடக்க ஆரம்­பித்தபோது ஒரு முப்பது வயது மதிக்­கத்­தக்க, சற்று உய­ர­மான, சிவந்த மேனி­யும், மெல்­லிய தோற்­ற­மும் கொண்ட ஒரு­வன் நின்று கொண்­டி­ருப்­ப­தைக் கண்­டான் குமார்.

வடஇந்­தி­ய­ரைப் போல் தோற்­றத்­தில் இருந்­தான் அவன். சற்று உற்­றுப் பார்த்­து­விட்டு, குமாரை நெருங்­கி­னான்.

"ஹலோ, நான் பாபு. உன்­னைப் பார்த்­தால் வெளி­யூர் போலத் தெரி­கிறது," என்று புன்­ன­கை­யு­டன் குமா­ரி­டம் அறி­மு­கக் கைகு­லுக்­க­லுக்­குக் கையை நீட்­டி­னான்

"ஆம் நான் சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து வரு­கி­றேன்," என்று குமார் பதில் சொல்­லிப் பாபு­வின் கைக­ளைக் குலுக்­கி­னான்.

மிக­வும் குதூ­க­லம் அடைந்­தான் பாபு.

"இன்­னும் சில மாதங்­களில் நானும் சிங்­கப்­பூர் வரப்­போ­கி­றேன் வியா­பா­ரத்­திற்­காக," என்­றான். ஆரம்­பத்­தில் பாபு­வின் பேச்­சும் போக்­கும் குமா­ருக்­குச் சற்­றுத் தயக்­கத்­தை­யும் நம்­பிக்­கை­யின்­மை­யை­யும் தந்­தது. ஆயி­னும் போகப் போக அந்­தச் சந்­தே­கம் தணிந்­தது. அவன் பேச்­சில் நட்­பின் சாய­லைக் கண்­டான் குமார்.

அங்கு, சூலியா ஸ்தி­ரீட் என்­னும் தெரு­வில், ஒரு வய­தான வட நாட்­ட­வர் தள்­ளு­வண்டி ஒன்­றைச் சாலை­யோ­ரம் நிறுத்தி டீ வியா­பா­ரம் செய்து கொண்­டி­ருக்க, அங்­கு சென்று இரு­வ­ரும் சுவை­யான தேநீர் அருந்­தி­ய­படி மீண்­டும் பேசிக்­கொண்­டி­ருந்­த­னர். தான் மராத்­திய வம்­சா­வ­ளி­யைச் சேர்ந்­த­வன் என்­றும் நன்கு தமிழ் பேசக் கற்­றுக் கொண்­ட­தா­க­வும் சொன்­னான் பாபு. அங்கு அவன் செய்­யும் சில்­லறை வியா­பா­ரம் பற்­றிப் பேசி­னான். எத்­தனை நாள் இங்­கு தங்­கப் போகி­றாய் எனப் பாபு கேட்க, இன்­னும் மூன்று நாள் தங்­கி­விட்­டுச் சிங்­கப்­பூர் திரும்­பப்­போ­வ­தா­கச் சொன்­னான் குமார்.

நாளைக்­குத் தாய்­லாந்துப் பகுதி, பாடாங் புசார் போகி­றேன். அங்கு வியா­பா­ரத்­திற்­கா­கக் கொஞ்­சம் பொருட்­கள் வாங்க வேண்­டும் நீயும் என்­னோடு வரு­கி­றாயா என கேட்­டான் பாபு.

"அது தாய்­லாந்து எல்­லைக்கு உள்ளே இருக்­கிறது. என்­னு­டைய பாஸ்­போர்ட்­டால் அங்­கு செல்ல அனு­மதி இல்லை," என்­றான் குமார்.

"கொஞ்­சம் அரு­கில் இருக்­கும் சுங்கைப் பட்­டாணி என்ற ஊரி­லுள்ள இமி­கி­ரே­ஷன் ஆபீ­சில் தாய்­லாந்­திற்­குச்செல்ல நாற்­பத்­தெட்டு மணி நேர விசா தரு­வார்­கள். வேண்­டு­மென்­றால் அங்­கு சென்று பெற்­றுக்­கொள்­ள­லாம்," என்­றான் பாபு. இது வீண் அலைச்­சல் போல் தோன்­றி­யது குமா­ருக்கு.

"வேண்­டாம் பாபு. நான் இங்­கு தங்கிவிடு­கி­றேன். நீ போய்ட்டு வா," என்­றான் குமார்.

கொஞ்ச நேரச் சிந்­த­னைக்­குப்­பின், "எனக்கு மலே­சி­யப் பகுதி, பாடாங் புசார் சுங்­கச்­சா­வ­டி­யின் அருகே ஒரு நண்­பர் மூலம் இரண்டு நாள் விசா எடுத்­துக்­கொள்ள வழி­யுண்டு," என்று குமாரை வற்­பு­றுத்­தவே குமா­ரும் கொஞ்­சம் தயக்­கத்­து­டன் சரி என்று ஒப்­புக்­கொண்­டான்.

நாளைக் காலை சந்­திப்­ப­தா­கச் சொல்­லி­விட்­டுப் பாபு அகன்­றான்.

பாபுவை நம்பி மலே­சி­யா­வின் எல்­லை­யைத் தாண்­டித் தாய்­லாந்­துக்­குள் போவ­தைப் பற்றி சிந்­தித்த­ப­டியே சற்று குழப்­பத்­து­டன் ஹோட்­டலை அடைந்­தான் குமார்.

மறு­நாள் காலை, தான் கொண்டு­வந்த பய­ணப் பெட்­டியை ஹோட்­ட­லின் அனு­ம­தி­யோடு அங்­கு பாது­காப்­பாக வைத்­து­விட்டு, ஒரு சிறிய தோல்­ பை­யில் இரண்டு நாளுக்கு வேண்­டிய துணி­க­ளு­டன் பாபு­வைச் சந்­தித்­தான் குமார். இரு­வ­ரும் பட்­டர்­வர்த் சென்று அங்­கி­ருந்து ரயி­லில் ஏறி­னர்.

"இந்த ரயில் இரண்­டரை மணி நேரத்­தில் மலே­சி­யப் பகுதி பாடாங் புசா­ரில் நின்­று­வி­டும்.

உன்னை ஓரி­டத்­தில் நிற்­க­வைத்து­விட்டு நான் இமி­கி­ரே­ஷன் சென்று எனது பாஸ்­போர்ட்­டைக் காட்­டி­விட்­டுப் பின்பு உன்­னைப் பக்­கத்­தில் உள்ள வேறு ஒரு ஆபீ­சுக்கு அழைத்­துச்­சென்று விசா வாங்­கித் தரு­கி­றேன்," என்று சொல்­லி­வைத்­தான் பாபு.

"கவலைப் படாதே எல்­லாம் சரி­யா­கி­வி­டும்," என்று சொல்லி, தாய்­லாந்து பகுதி, பாடாங் புசா­ரில் உள்ள குதூ­க­லங்­க­ளைப் பற்­றிப் பேசிக்­கொண்டே வந்­தான். ரயில் மலே­சியப் பகுதி பாடாங் புசார் ரயில் நிலை­யத்­தில் நின்­றது.

வெளி­யில் வந்­த­வு­டன் ஒரு இடத்­தில் குமாரை உட்­கார வைத்து­விட்டு அவன் மட்­டும் இமி­கி­ரே­ஷனை நோக்கி நடந்­தான். ஒரு இரு­பது நிமி­டத்­திற்­குப் பிறகு அங்­கி­ருந்து நடந்து வந்­தான்.

"சரி புறப்­படு. உன் விசா விஷ­ய­மாக இன்­னோர் இடத்­திற்கு நடந்து செல்­ல­வேண்­டும்," என்­றான் பாபு. குமார் ஒன்­றும் பேசாது பாபு­வைப் பின்­தொ­டர, பாபு ஒரு மண் பாதை வழி­யாக ஏதும் பேசாது ஒரு பத்து நிமி­டம் கிரா­மப்­பு­றம் போன்ற பகு­தி­யைக் கடந்து, ஒரு ரயில் தண்­ட­வா­ளம் ஓர­மாக நடக்­கத்­தொ­டங்­கி­னான்.

"என்ன நீ பாட்­டுக்கு நடந்து கொண்டே போறியே, எங்கே போகி­றோம்?" எனக் கொஞ்­சம் பதற்றத்­து­டன் கேட்­டான் குமார்.

முன்­னுக்கு நடந்து போய்க்­கொண்­டி­ருந்த பாபு நின்று, குமா­ரைத் திரும்­பிப்பாரத்­துக் கட­க­ட­வெனச் சிரித்­தான்.

"ஏன் சிரிக்­கி­றாய்" எனச் சற்­றுப் பயத்­து­டன் கேட்­டான் குமார்.

"வெல்­கம் டு தாய்­லாந்து," என மேலும் வேக­மாய்ச் சிரித்­தான் பாபு.

அதிர்ந்து போனான் குமார்.

"விசா இல்­லா­மல் என்­னி­டம் பொய் சொல்லி, திருட்­டுத்­த­ன­மாக அழைத்து வந்துவிட்­டாயே," என்று ஆத்­தி­ரத்­து­டன் பேசி­னான் குமார்.

"பயப்­ப­டாதே இந்­தக் குறுக்­குப்­பாதை, பாஸ்­போர்ட், மற்­றும் விசா இல்­லா­த­வர்­கள் செல்­லும் பாதை. திரும்­பும்போதும் இதே வழி­யில் சென்­று­வி­ட­லாம். நான் பலரை இப்­படி அழைத்து வந்­துள்­ளேன்," என்று சொல்­லிக் குமா­ரின் தோளைத் தட்­டிக் கொடுக்க, அதைக் குமார் ஆத்­தி­ரத்­து­டன் வேக­மாய் விலக்­கி­விட்­டான்.

"ஆத்­தி­ரப்­ப­டாதே குமார். உன்னை எனக்கு ரொம்­ப­வும் பிடித்­தி­ருக்­கிறது. நீ வீடு திரும்­பும்­முன் இங்கு அழைத்­து­வந்து மகிழ்ச்­சிப்­படுத்­த­லாம் என்று நினைத்­துத்­தான் இதைச் செய்­தேன்," என்று சமா­தா­னப்படுத்தினான். ஆயி­னும் குமா­ருக்­குப் பாபு செய்­தது பெரிய ஏமாற்­றத்­தை­யும் பயத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­யது. நன்­றாக மாட்­டிக்­கொண்­டோம். இவ­னைப் பகைத்­துக்­கொள்­வ­தில் பய­னில்லை.

எப்­ப­டி­யும் நாளையே இவன் வகுத்த வழி­யி­லேயே மீண்­டும் பிடி­ப­டா­மல் வெளி­யேற வேண்­டும் என்று மன­தில் நினைத்­துக்­கொண்­டான் குமார்.

அதற்­குப்­பின் பாபு­விற்­குக் கொஞ்­சம் முகம் கொடுத்­துப் பேசத் துவங்­கி­னான் குமார்.

ரயில் தண்­ட­வா­ளத்­தைத் தாண்டி ஒரு சிமென்ட் சாலை­யில் நடந்து சென்­ற­போ­து­தான் மக்­கள் கூட்­டம் அதி­க­மா­க­வும் தெருக்­க­ளின் கடை விளம்­ப­ரங்­கள் தாய்­லாந்து மொழி­யில் எழு­தப்­பட்­டி­ருப்­ப­தை­யும் கண்­ணுற்­றான் குமார்.

அடிக்­கடி குமாரை உற்­சா­கப்­படுத்­து­வ­தில் தீவி­ரம் காட்­டி­னான் பாபு.

பாடாங் புசார் நக­ரத்­திற்­குள் நுழைந்து ஒரு நவீன ஹோட்­ட­லில் பதிவு செய்­து­கொண்­ட­னர். பின்பு குளித்­து­விட்டு நக­ரத்­தைச் சுற்றி வந்­த­னர்.

பல ஆடம்­பர மது­பா­னப் பார்­களும் பல கேளிக்கை நிரம்­பிய நக­ர­மா­க­வும் இருந்­தது தாய்­லாந்துப் பகுதி பாடாங் புசார்.

பாபு­வும் கொஞ்­சம் பொருட்­களை விற்­ப­னைக்­காக வாங்­கி­னான். பாபுவை விட்டு அக­லக்­கூடா­தென்ற பயத்­து­டன் அவ­னு­டன் தொடர்ந்­தான் குமார்.

தெரு­விலோ அல்­லது ஹோட்­ட­லிலோ போலிஸ் சோத­னை­யிட்­டால் அவன் கதி என்­ன­வா­கும் என்ற பயத்­து­டன் இருந்­தான்.

"இறைவா, எப்­ப­டியாவது இந்­தப் பேரா­பத்­தில் இருந்து காப்­பாற்று" என இறை­வனை வேண்­டிக்­கொண்­டான் குமார்.

பாபு­வுக்­கு குமா­ரின் பதற்ற மனநிலை புரிய ஆரம்­பித்­தது. ஒரு­வேளை தான் செய்த இந்­தக் குறும்­புத்­த­னம் தவ­றென்று அவ­னுக்­குத் தோன்­றி­யதோ என்­னவோ, குமா­ரின் வாடிய முகத்­தைப் பார்த்­த­படி, நாளைக் காலை பினாங்கு திரும்­ப­லாம் என்­றான்.

இந்த உத்­த­ர­வா­தம், குமா­ரின் மன­திற்­குக் கொஞ்­சம் சாந்­தத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

மறு­நாள் காலை பசி­யா­றி­விட்டு ஹோட்­டலை விட்டு இரு­வ­ரும் கிளம்­பி­னர். பாபு, இங்கு வந்த அதே பாதை­யில் திரும்­ப­வும் போய்க்­கொண்­டி­ருக்க, குமார் அவ­னைப் பின்தொடர்ந்­தான். பாபு எது­வும் அதி­கம் பேசா­மலே நடந்­தான்.

நகரை விட்டு முன்பு வந்த கிரா­மம் போன்ற பகு­தி­யில் சிறிது நேரம், நடந்து மீண்­டும் அதே ரயில் தண்­ட­வா­ளத்­தில் நடக்க ஆரம்­பித்­த­னர்.

"நாம் மலே­சிய எல்­லைக்­குள் வந்­து­விட்­டோம். இன்­னும் கொஞ்­சம் நடந்­தால் மலே­சிய இமி­கி­ரே­ஷன் பக்­கம் வந்துவிட­லாம்," என்று மெது­வா­கப் பாபு சொல்லி முடிக்­கு­முன்...

"நில்­லுங்­கள்!" என்ற பலத்த குர­லொலி கேட்­டது. அவ்­வ­ள­வு­தான். குமா­ருக்கு உடல் வியர்த்து, இத­யம் பட­ப­ட­வென அடித்­தது. குமார் திரும்­பிப் பார்த்­த­போது, ஒரு கறுத்த இந்­தி­யர், இமி­கி­ரே­ஷன் சீரு­டை­யில் நின்­று­கொண்­டி­ருந்­தார்.

உடனே பாபு அவ­ரி­டம் சென்று மலா­யும் கொஞ்­சம் தமி­ழும் கலந்து பேச முற்­பட்­டான். அந்த மனி­தர் அவன் பேச்­சுக்­குச் செவி சாய்க்­காது இரு­வ­ரை­யும் சற்­றுத் தொலை­வில் இருந்த மலே­சிய இமி­கி­ரே­ஷன் ஆபீ­சுக்கு அழைத்­துச் சென்­றார்.

முடிந்­தது! எல்­லாம் முடிந்­தது! என்று மன­திற்­குள் அழு­தான் குமார். இந்­தப் பாவி பாபு­வின் பேச்­சைக் கேட்டு மாட்­டிக்­கொண்­டோமே என்று நொந்­து­கொண்­டான். அந்த அதி­காரி குமா­ரைத் தனி அறை­யொன்­றில் அம­ரச் சொல்­லி­விட்டு வெளி­யில் பாபு­வின் பாஸ்­போர்ட்­டைப் பார்த்­த­வண்­ணம் ஏதோ கடு­மை­யா­கப் பேச, பாபு­வும் நய­மாக ஏதோ பதில் கூறி­னான். இடை­யில் ராஜூ என்றே அந்த அதி­கா­ரி­யைப் பெயர் சொல்லி நயந்­தும், குழைந்­தும் பேசி­னான் பாபு. சிறிது நேரம் சென்­ற­பின், அந்த அதி­காரி, குமார் அமர்ந்­தி­ருந்த அறைக்கு வந்து, அவன் முன் ஒரு நாற்­கா­லியை இழுத்­துப்­போட்டு, குமா­ரின் முகத்­திற்கு நேரா­கப் பேச ஆரம்­பித்­தார்.

"உனது பாஸ்­போர்ட்­டைக் காட்டு," என்­றார். குமார், பையி­லி­ருந்து எடுத்­துக் காட்­டி­னான்.

"இந்­தப் பாஸ்­போர்ட்­டைக் கொண்டு தாய்­லாந்­திற்­குள் செல்ல முடி­யாது எனத் தெரி­யும் அல்­லவா," என்று சற்­றுக் கடு­மை­யான குர­லில் கேட்­டார். 'ஆம்' என்று பதில் சொன்­னான் குமார்.

"விசா இருக்­கி­றதா" என்று கேட்க "இல்லை" என்று அதற்­கும் பதில் சொன்­னான் குமார்.

"ஆயி­னும் இது எல்­லாம் இல்­லாத நிலை­யில், சட்­டத்தை மீறி தாய்­லாந்­திற்­குள் சென்று இருக்­கி­றாய். இது எவ்­வ­ளவு பெரிய குற்­றம் தெரி­யுமா?" என்று சுட்டு விர­லைக் குமா­ரின் முகத்­திற்­கு­முன் நீட்­டிக் கேட்­டார். குமார் கலங்­கிப்­போனான். ஆயி­னும் மன­தைக் கட்­டுப்­ப­டுத்­திக்­கொண்டு, பாபு­வின் வலை­யில் விழுந்து ஏமாந்த கதையை முழுக்க அவ­ரி­டம் சொல்லி முடித்­தான்.

சற்று நேரம் மௌன­மாக வாக்கு­மூ­லத்­தைக் கேட்ட அந்த அதி­காரி, குமா­ரின் முகத்­தைக் கூர்ந்து கவ­னித்­து­விட்டு, மீண்­டும் வெளி­யில் சென்று பாபு­வி­டம் ஏதோ திட்­டு­வது­போல் பேசும் பாவனை தெரிந்­தது.

ஒரு பத்து நிமி­டம் கழித்து மீண்­டும் குமா­ரின் அறைக்கு வந்­தார் அந்த ராஜூ என்ற பெயர் கொண்ட அதி­காரி. குமா­ரின் முன் அமர்ந்து சற்று நிதா­ன­மா­கப் பேசி­னார்.

"இந்­தப் பாபு ஒரு கடத்­தல் பேர்­வழி. பல­முறை பொருட்­க­ளைத் தாய்­லாந்­தின் பாடாங் புசா­ரில் வாங்கி, மலே­சி­யா­விற்கு வரி ஏதும் கட்­டாது குறுக்கு வழி­யில் எங்­க­ளைத் தாண்­டித் தப்­பித்­துப் போய்­வி­டு­வான். எங்­க­ளால் பிடி­பட்டு தண்­டிக்­கப்­பட்­டும் உள்­ளான். இப்­பொ­ழுது உன்­னை­யும் ஏமாற்றி தாய்­லாந்­துக்கு அழைத்­துச் சென்­றி­ருக்­கி­றான். சரி, நிலை­மையை அனு­ச­ரித்து உன்னை விடு­தலை செய்­கி­றேன். இது மலே­சி­யப் பகுதி இமி­கி­ரே­ஷன் என்­ப­தால் உன் உண்மை நில­வ­ரம் தெரிந்து உன்­னைத் தண்­டிக்­காது விடு­கி­றேன்.

"நீ தாய்­லாந்துப் பகு­தி­யில் பிடி­பட்­டி­ருந்­தால் உன் நிலைமை என்ன ஆகி­யி­ருக்­கும் என்று நினைத்­துப்­பார். ஒழுங்­காக இவ­னி­டம் மீண்­டும் மாட்­டிக்­கொள்­ளா­மல், சிங்­கப்­பூர் சென்று சேரு," என்று புத்­தி­மதி கூறி வெளி வாயில் வரை வந்து விட்­டார் அந்த நல்ல உள்­ளம் படைத்­த­வர்.

குமார் மிக­வும் உணர்ச்சி வசப்­பட்டு அந்த அதி­கா­ரிக்கு நன்றி கூறி நடந்­தான். பாதை­யோ­ரம் பாபு நின்­று­கொண்­டி­ருந்­தது குமா­ருக்­குத் தெரிந்­தும் எது­வும் பேசா­மல் ரயில் நிலை­யம் நோக்கி நடந்­தான். பாபு குமா­ரைப் பின்­தொ­டர்ந்து பேசிக்­கொண்டே வந்­தான்.

"எனக்கு அந்த அதி­கா­ரியை நன்கு தெரி­யும் குமார். நடந்­தது என்­னு­டைய தவறு. உன்னை நான் தான் எல்லை தாண்டி அழைத்­துச் சென்­றேன். என்று அவ­ரி­டம் வாக்கு­மூ­லம் கொடுத்­தேன். அதன்­பின் தான் உன்னை விடு­வித்­தார். என்னை நம்பு," என்­றான் பாபு.

எப்­ப­டியோ அதி­கா­ரி­யி­ட­மி­ருந்து தப்­பித்த மனத்­தி­ருப்­தி­யில் பாபு­வின் இந்­தச் செய்­கையை மன்­னிப்­ப­தா­கச் சொல்­லிக்­கொண்டே நடந்­தான் குமார்.

"நான் பினாங்கு சென்­ற­தும் இன்று மாலையே சிங்­கப்­பூர் திரும்ப வேண்­டும்," என்­றான் குமார். குமா­ரின் மன­நி­லை­யைத் தெரிந்­து­கொண்ட பாபு­வும் சரி என்­னும் பாணி­யில் தலை­ய­சைத்­தான்.

நீ பழை­ய­படி கோலாலம்­பூர் போய் அங்கே இரவு தங்­கி­விட்டு மறு­நாள் சிங்­கப்­பூர் செல்­லும் அள­விற்கு உனக்­குப் பணம் இருக்­கி­றதா என்­றான் பாபு.

குமா­ரின் கையி­ருப்­பும் மிகக் குறை­வாக இருப்­பதை உணர்ந்­தும், "சமா­ளிக்­கி­றேன்" என்று சுருக்­க­மா­கப் பதில் சொன்­னான்.

சிறிது நேரச் சிந்­த­னைக்­குப்­பின், "நீ நேராக ஜோகூர் பாரு வரை குறை­வான செல­வில் செல்ல ஒரு வழி இருக்­கிறது. ஆனால் அது மிக­வும் களைப்­பைத் தரக்­கூடிய பய­ணம்," என்று கொஞ்­சம் தயக்­கத்­து­டன் கூறி­னான் பாபு.

"என்ன அது" என்று ஆவ­லு­டன் கேட்­டான் குமார்

'இங்கு ஸ்டார் தின­ச­ரிப் பத்­தி­ரிகை கம்­பெனி, மாலை­யில், பத்­தி­ரிகை கட்­டு­க­ளு­டன், ஈப்போ, கோலாலம்­பூர் வழி­யாக இரவு முழு­தும் பய­ணித்து மறு­நாள் காலை ஜோகூர் பாரு சேரும்.

போகும் இடத்­தில், பத்­தி­ரிகைக் கட்­டு­களை இறக்­கு­வ­தும், அங்­குள்ள பத்­தி­ரிகைக் கட்­டு­களை ஏற்­று­வ­து­மாக அந்த வண்டி செல்­லும். பத்­தி­ரிகைக் கட்­டு­க­ளுக்கு இடையே இருக்­கும் சின்ன இடத்­தில் நீ அமர்ந்து செல்­ல­வேண்­டும். கொஞ்­சம் சிர­மமான பய­ணம். ஒரு ஐம்­பது ரிங்­கிட் கொடுத்­தால் போதும்'. என்று சொல்லி முடித்­தான் பாபு.

தனக்­கி­ருக்­கும் நிதி நிலைக்கு இந்த ஏற்­பாடு சரி­யா­கப்பட்­டது. ஆகவே அதற்கு ஒப்­புக்­கொண்­டான் குமார்.

மதி­யம் அவர்­கள் பினாங்கு அடைந்­த­னர். பாபு பயண ஏற்­பாடு செய்துவிட்டு மாலை­யில் சந்­திப்­ப­தா­கச் சொல்­லி­விட்­டுக் கிளம்­பி­னான். பாபு­வின் முகத்­தி­லும் பழைய கல­க­லப்பு காணப்­ப­ட­வில்லை. மாலை­யில் சொன்ன இடத்­தில் குமார் பாபு­வைச் சந்­தித்­தான்.

பேசிக்­கொண்டே இரு­வ­ரும் பய­ணம் செய்­ய­வேண்­டிய அந்­தக் கம்­பெ­னிக்கு வந்­து­விட்­ட­னர். அங்கு ஒரு மோரிஸ் வகை சரக்கு வாக­னம் நின்றுகொண்­டி­ருக்க, நாளி­தழ் கட்­டு­களை வண்­டிக்கு உள்ளே அடுக்­கிக்­கொண்­டி­ருந்­த­னர். அந்த ஓட்­டு­நரி­டம் பேசி­விட்டு, அவ­னி­டம் ஐம்­பது ரிங்­கிட் பணத்­தைக் கொடுத்­தான் குமார். சிறிது நேரத்­திற்­குப்­பின் அந்த வண்டி ஓட்­டு­நரும் இன்­னொ­ரு­வ­ரும் முன் பகு­தி­யில் அமர, தடுப்­புக்­குப் பின் அடுக்­கப்­பட்ட நாளி­தழ்­க­ளின் இடை­யில் உள்ள சிறிய இடத்­தில் குமாரை அமர்ந்­து­கொள்­ளச் சொன்­னான் அந்­தச் சீன ஓட்­டு­நர்.

ஓட்­டு­நர் அவ­ச­ரப்­ப­டுத்­தவே வண்­டிக்­குள் ஏறி அந்­தக் காகி­தக் கட்­டு­க­ளின் நெருக்­கத்­திற்கு இடையே எப்­ப­டியோ ஒரு சிறிய இடத்­தைப் பிடித்து கைப்­பெட்­டியை அணைத்­த­படி உட்­கார்ந்து கொண்­டான் குமார். வெளிக் கதவை அடைத்­து­விட்டு ஓட்­டு­நரு­டன் வந்­த­வன் முன்­னுக்­குச் சென்று அமர்ந்­தான்.

வெளி­யில் நின்றுகொண்­டி­ருந்த பாபு­விற்­குச் சென்று வரு­கி­றேன் என்ற தோர­ணை­யில் குமார் கை அசைக்­க­வும் வண்டி புறப்­ப­ட­வும் சரி­யாக இருந்­தது. நின்று கொண்டு கைய­சைத்த பாபு­வின் உரு­வ­மும் மெல்ல மறைந்­தது. பாபு­வின் செய்­கை­யால் ஏற்­பட்ட வருத்­தம் மன­தில் இருந்­தும், அவன் பிரிவு, குமா­ரைக் கொஞ்­சம் பாதிக்­கத்­தான் செய்­தது.

வண்டி அந்த மாலை நேரத்­தைக் கடந்து வேக­மாய் ஈப்போ நோக்­கிச் சென்று கொண்­டி­ருந்­தது. குமா­ரும் நடந்த நிகழ்­வு­களை வெகு­நே­ரம் நினைத்­த­ப­டியே தூங்­கி­விட்­டான். எவ்­வ­ளவு நேரம் தூங்­கி­னான் என்று அவ­னுக்­குத் தெரி­ய­வில்லை. வண்டி எங்கோ நிற்­பதை உணர்ந்து கண்­வி­ழிக்க அது ஈப்போ எனத் தெரிந்துகொண்­டான். அங்­கு சில நாளி­தழ் கட்­டு­களை இறக்­கி­விட்டு மேலும் சில புதிய கட்­டு­களை ஏற்­றிக்கொண்டு, வண்டி மீண்­டும் புறப்­பட்டு கோலா லம்­பூர் நோக்­கிக் காற்­றைக் கிழித்­துக்­கொண்டு சென்றது. குமாருக்கு அந்­தக் காகிதக் கட்­டு­க­ளுக்­குள் உட்­கார்ந்து வந்த அசதி கூடிக்­கொண்டே போனது. காலை நீட்ட முடி­யா­மல் சிர­மப்­பட்­டான். அந்­தச் சிர­மத்­தி­லும் களைப்­பில் தூங்­கி­விட்­டான். கிட்­டத்­தட்ட இரவு ஒரு மணி­யைத் தாண்டி வண்டி கோலாலம்­பூர் அடைந்­தது. மீண்­டும் காகிதக் கட்­டு­க­ளின் பரி­மாற்­றம் தொடங்­கி­யது. இப்­பொ­ழுது பழைய ஓட்­டு­நர் கூட்­ட­ணிக்­குப் பதி­லா­கப் புதி­தாக இரு­வர் மாற்­றிக்­கொள்ள, வேக­மாக ஜோகூர் பாருவை நோக்­கிக் கிளம்­பி­யது வண்டி. இப்­பொ­ழுது பய­ணத்­தின் சிர­மத்தை நன்கு உணர்ந்­தான் குமார். கால்­களை நீட்ட முடி­யாத கார­ணத்­தால் நன்­றாக மரத்துவிட்­டது அவ­னுக்கு. எப்­ப­டியோ போகப்­போக, உடல் சோர்­வி­னால், மீண்­டும் நன்­றா­கத் தூங்­கி­னான்.

ஓட்­டு­நரின் சத்­த­மான பேச்­சால் கண்­வி­ழித்­தான் குமார். வெளி­யில் வானத்­தில் விடி­வெள்ளி முளைத்­தி­ருந்­தது. "ஜோகூர் பாரு வந்­து­விட்­டோம்," என்று ஓட்­டு­நர் மலாய் மொழி­யில் சொன்­ன­வு­டன் ஒரு பெரு­மூச்சு விட்­டான் குமார். ஒரு பத்து நிமி­டத்­தில் சிங்­கப்­பூர் செல்­லும் பஸ் நிற்­கும் இடத்­தில் கொஞ்­சம் வண்­டியை நிறுத்­தி­னார் ஓட்­டு­னர். அவர்­க­ளுக்கு நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொண்டு கீழே இறங்­கி­னான் குமார். அவனை இவ்­வ­ளவு தூரம் ஏற்­றி­வந்த வண்டி அவ­னுக்கு மவு­ன­மா­கப் பிரி­யா­விடை சொல்­லி­விட்­டுக் கிளம்­பிற்று.

சிங்­கப்­பூர் செல்­லும் பஸ்­ஸைப் பிடிக்க, களைத்து, கால் வலி­யு­டன் நடந்­தான் குமார். வீடு நோக்கி ஓடி­யது அவன் மனம்.

வேலி தாண்டி ஓடித் திரிந்து, பல அனு­ப­வங்­க­ளைக் கண்ட ஆடு ஒன்று மீண்­டும் தாயைத் தேடித் தொழு­வம் நோக்கி ஆவ­லு­டன் ஓடு­வ­து­போல்!

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!