மணம்

சிறுகதை

பிரதீபா

சாள­ரம் வழி­யாக வெளியே பெய்­து­கொண்­டி­ருந்த மழை­யைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தாள் பொன்மணி. எவ்­வித ஆர­வா­ர­மு­மின்றி ஒரே சீராக மழைத்­துளி­கள் ஊசி­போல் மண்­ணில் இறங்­கிக்­கொண்­டி­ருந்­தன. முத­லில் சாலை­யில் பட்டுத் தெறித்த மழைத்­து­ளி­கள் பின்­னர், பாம்­பு­போல் வளைந்து நெளிந்து வடி­காலை நோக்கி வேக­மாக ஓடத்­தொ­டங்­கின. எதிரே தெரிந்த மரங்­க­ளி­ட­மும் எவ்­வித சல­ன­மு­மில்லை. எவ்­வித எதிர்ப்­பை­யும் காட்­டாது முழு­மை­யா­கத் தங்­களை மழையிடம் ஒப்படைத்து நின்­றன. அப்­ப­டியே ஓடிச்­சென்று அந்த மரத்­தைக் கட்­டிக்­கொண்டு மர­மோடு மர­மாக நின்­று­கொள்ள அவ­ளின் மனம் விழைந்­தது.

கொட்­டும் மழை­யில் உட­லில் ஓட்­டி­யி­ருக்­கும் கறை­யைக் கரைத்­து­விட வேண்­டு­மென்று அவ­ளின் உள்­ளம் துடித்­தது. ஆனால், உணர்­வு­களை எல்­லாம் கட்­டுப்­ப­டுத்­திக்­கொண்டு மழையை வெறித்­துப் பார்த்­துக்­கொண்டு நின்­றாள். அப்­போது, காற்­றில் பர­வி­யி­ருந்த மண்­ணின் மணம் அவ­ளு­டைய பழைய நினை­வு­க­ளைக் கிள­றி­விட்­டது.

"சுடு­சோ­று­ல­யி­ருந்து வர்ற மணம் இருக்கே அது அரி­சி­யோட வாச­மில்ல பொன்னுத்தாயி.. இந்த மண்­ணோட வாசனை. கலப்­பை­யால நிலத்தை உழும்­போது வருமே அந்த மண்­ணோட வாசனை. அதை முகர்ந்­து­கிட்டே சோத்­தைப் பெசஞ்சு வாயில வைக்­கும்­போது கிடைக்­கிற ருசி­யி­ருக்கே அதை அனு­ப­விச்­சுப் பார்த்­தா­தான் தெரி­யும்," என்று சொல்­லிக்­கொண்டே சூடான சோற்றை அவ­ளுக்கு ஊட்­டு­வார். அப்பா ஊட்­டு­வ­தாலோ அல்­லது அவ­ரின் உணர்­வு­க­ளின் வெளிப்­பாட்­டி­னாலோ என்­னவோ அந்­தச் சோற்று உருண்டை அவ­ளு­டைய தொண்­டைக்­குள் ருசி­யாக இறங்­கும்.

வாரத்­தில் இரண்டு நாட்­கள் இர­வில் மட்­டுமே அவர்­கள் வீட்­டில் அரிசி சோறு சமைப்­பார்­கள். மற்ற நாட்­களில் பெரும்­பா­லும் கேப்பை ரொட்­டி­யும், கம்­பங்­கூ­ழும்­தான்.

இவ­ளுக்­குச் சில சம­யங்­களில் கம்­பங்­கூழ் இறங்­காது. கடை­யில் இட்லி வாங்­கித் தரச் சொல்­லிக் கேட்டு நச்­ச­ரிப்­பாள்.

"வய­சுப்­புள்ள கம்­பங்­கூழு குடிச்­சா­தான் உடம்பு வலுவா இருக்­கும். நாக்கு ருசிக்கு ஆசப்­பட்­டுக் கெடந்தா நாளைக்­குப் புரு­ஷன் வீட்­டுக்­குப்­போய் இப்­படி இருக்க முடி­யுமா?" என்று மனத்­திற்­குள் ஒலித்த அம்­மா­வின் குர­லை­யும் தாண்டி தொலை­பே­சி­யின் ஒலி அவளை நன­வு­ல­கிற்கு அழைத்து வந்­தது. வேக­மா­கச் சென்று எடுத்­தாள்.

"பொன்­மணி என்ன பண்­ணுற? எவ்வளவு நேரமா கூப்­பி­டு­றேன்"

"மழை பெய்­யு­தேன்னு சாள­ரத்தை மூடப் போனேம்மா. அப்­ப­டியே மழை­யைப் பார்த்­துக்­கிட்டு நின்­ன­துல சத்­தம் கேக்­கல"

"ஊர் நெனப்பு வந்தா நீ உல­கத்­தையே மறந்­து­டுற. ஆமா பிங்கி எப்­ப­டி­யி­ருக்கா? சாப்­பிட்­டாளா?"

"அப்­ப­டி­யே­தாம்மா இருக்­கா. எந்த மாற்­ற­முமில்ல. மத்­தி­யா­னம் சாப்­பாடு கொடுத்­தேன். அப்­ப­வும் சாப்­பி­டாம தலையை மட்­டும் தூக்­கிப் பார்த்­துட்டு மறு­ப­டி­யும் கண்ணை மூடி­கிட்டா. அவ சரியா சாப்­பிட்டு இரண்டு நாளாச்சு. அவளை மருத்­து­வர்­கிட்ட கூட்­டிட்­டுப் போய் காண்­பிக்­க­னும்."

"இன்­னைக்­கும் அவ சரியா சாப்­பி­ட­லையா? அப்­ப­டின்னா சாயந்­த­ரம் நான் வந்­த­தும் அவளை மருத்­து­வர்­கிட்ட அழைச்­சுக்­கிட்டு போறேன். அப்­பு­றம் நீ சாப்­பிட்­டியா?"

"இன்­னும் இல்­லம்மா"

"மணி நாலா­கப் போகுது. இன்­னும் சாப்­பி­டாம இருந்தா உடம்பு என்­னத்­துக்கு ஆகும். முதல்ல நீ போயி சாப்­பிடு. அப்­பு­றம் ஐயா என்ன பண்­ணு­றாரு?"

"தியாகு ஐயா வந்­தி­ருக்­கா­ரும்மா. அவ­ரு­கூ­டச் செஸ் விளை­யா­டி­கிட்டு இருக்­காரு"

"ஓ.. அப்­ப­டியா? சரி நாலு மணிக்கு ஐயா­வுக்கு மருந்து தேய்ச்சு­விட்­டுக் கையை­யும், காலை­யை­யும் மறந்­து­டாம நீவி விட்று. விளை­யா­டுற சுவா­ர­சி­யத்­துல அவர் மறந்­தி­டப் போறாரு," என்று அவர் சொல்­லும்­போதே அவ­ளுக்கு உட­லெங்­கும் பூரான்­கள் ஊர்­வது போன்று இருந்­தது

"சரிம்மா" எனும்­போது அவள் குரலே அவ­ளுக்­குக் கேட்­க­வில்லை.

அதன் பின் அவ­ளுக்கு எந்த வேலை­யும் ஓட­வில்லை. வாழ்க்­கை­யோட்­டத்­தில் மாறிப்­போன தன் விதியை நினைத்து அவ­ளுக்­குத் துக்­கம் பீறிட்­டது. ஆனால் அந்­தத் துக்­கத்தை வெளிப்­ப­டுத்­தும் கண்­களி­ல் கண்­ணீர் வற்­றி­ப்போய் நாட்­கள் கடந்­து­விட்­டன.

இப்­போது வறண்­டு­போன அவள் வாழ்க்­கை­யில் எஞ்சி நிற்­பது நினை­வு­கள் மட்­டுமே. அந்த நினை­வு­கள் தரும் நிம்­ம­தி­யில் மட்­டுமே அவள் வாழ்க்கை கடந்துபோகிறது.

*

பட்­டாம்­பூச்­சி­யாய் பறந்து திரிந்த பள்­ளிக்­கா­லங்­கள் அவள் மனத்­தில் இன்­றும் பசு­மை­யாய் படர்ந்து நிற்­கின்­றது. எந்­த­வொரு கவ­லை­யு­மின்றி நண்­பர்­க­ளோடு ஆடிப் பாடி மகிழ்ந்த தரு­ணங்­கள் அவை. அதி­லும் மழை­யில் நனை­வது என்­பது சிறு வய­தி­லி­ருந்தே அவ­ளுக்கு மிக­வும் பிடித்­தமான ஒன்று.

இடி, மின்­னல், காற்­று­டன் ஆர்ப்­பாட்­ட­மாக வரு­கின்ற மழையை விட எந்தவித சத்­த­மும் இல்­லா­மல் நின்று நிதா­ன­மா­கப் பெய்­கின்ற மழையை மட்­டுமே அவள் விரும்­பு­வாள்.

அப்­படி மழை பெய்ய ஆரம்­பித்­தால் வெளியே ஓடிப்போய் நின்று கொள்­வாள். இரண்டு கைக­ளை­யும் அகல விரித்­துத் தலை­யைத் தூக்கி அண்­ணாந்து பார்த்­து, கண்­களை மூடிக்­கொண்டு தெறிக்­கும் மழைத்­து­ளி­களை முகத்­தில் ஏந்தி நிற்­பாள்.

வாழ்க்கை முழு­மைக்­கு­மான மகிழ்வை அந்த ஒரு கணத்­தில் அடைந்­து­விட்­டாற் போன்ற உணர்வு அவ­ளுக்­குள் மேலி­டும். அது­மட்­டு­மில்­லாமல் அந்த நேரத்­தில் கட­வுளே அவளை ஆசீர்­வ­திப்­ப­து­போல் உணர்­வாள். அப்­போது யார் கத்­தி­னா­லும் அவள் காதில் விழாது. எதை­யும் பொருட்­ப­டுத்­தாது 'கர­கர'வென்று சுற்­றிக்­கொண்டே மழை­யில் ஆனந்­த­மாக நனை­வாள்.

"ஏலே பொன்­னம்மா! போதும் தாயி. மழை­யில நனைஞ்சு சளி பிடிச்சுச்சுனா அப்­பு­றம் பள்­ளிக்­கூடம் போகமுடி­யாது," என்று அப்­பா­வின் குர­லைக் கேட்ட பிறகு­தான் தலை­யைத் திருப்­பிப் பார்ப்­பாள். முத­லில் அப்பா. பிறகு பள்­ளிக்­கூடம். இந்த இரண்டு வார்த்­தை­களும் அவளை அசைத்­துப் பார்க்­கும்.

போக­லாமா? வேண்­டாமா? என்று யோச­னை­யோடு நிற்­ப­வளை

"நீ வர­லைன்னா நான் வந்­து­டு­வேன்," என்ற வரி­களில் அடங்கிப்­போய் வீட்டிற்குள் திரும்­பு­வாள். அவள் அப்­பா­விற்கு ஆஸ்­துமா இருப்­ப­தால் குளிர்க்காற்றே ஆகாது. இதில் மழை­யில் நனைந்­தால் என்ன ஆகும் என்று அவ­ளுக்­குத் தெரி­யும். அத­னால் அப்­பாவை எதிர்க்­க­மு­டி­யா­மல் வீட்­டிற்கு வந்­து­வி­டு­வாள். வந்­த­வ­ளைத் தாவிப் பிடித்து முத­லில் தலை­யைத் துவட்டி விடு­வார். பின்­னர், தலையை உலர்த்­திச் சாம்­பி­ரா­ணி­போட்டு காய வைத்த பிற­கு­தான் அவளை விடு­வார். அப்­போது அவ­ளின் அம்மா, "பொண்­ணுக்கு இத்­தனை செல்­லம் கொடுத்து வளர்க்­கு­றது நல்­ல­துக்­கில்ல. கொஞ்­ச­மா­வது அடங்­கு­றாளா? மழை­யில ஆடு­றது, ஆத்­துல போயி குதிக்­கி­ற­துன்னு ஆம்­பள புள்ள மாதிரி திரி­யுறா. கொஞ்­ச­மா­வது பொட்ட புள்­ளன்னு அடக்க ஒடுக்­கமா இருக்­காளா? எல்­லாம் நீங்க கொடுக்­குற செல்­லம்­தான்," என்று இரை­வார்.

ஆனால், அவளோ அவர் சொல்­வது எது­வும் கேட்­கா­த­து­போல் புத்­த­கத்தை எடுத்துப் படிக்க ஆரம்­பித்­து­வி­டு­வாள்.

அவள் படிக்க ஆரம்­பித்­தால்­போ­தும் அம்­மா­வும் கத்­து­வதை நிறுத்­தி­வி­டு­வார்.

படிப்பு என்­றால் அவ­ளுக்கு உயிர் என்­பது மட்­டு­மல்ல படிப்­பில் கெட்­டிக்­கா­ரி­யா­க­வும் இருந்­தாள். தன்­னால் முடி­யா­த­தைத் தன் மக­ளா­வது செய்­கி­றாளே என்ற பூரிப்பு அவ­ருக்­குள் எப்­போ­தும் உண்டு.

ஆகை­யால், அவள் படிக்­கத் தொடங்­கி­னால் அவர் திட்­டு­வதை நிறுத்­தி­வி­டு­வார்.

அவர்­கள் ஊரில் பத்­தாம் வகுப்பு வரை­தான் பள்­ளிக்­கூ­டம் இருந்­தது. மேல் வகுப்பு படிக்கவேண்­டும் என்­றால் அதற்கு ஐந்து கிலோ­மீட்­டர் நடந்து பக்­கத்து ஊருக்­குச் சென்று படிக்க வேண்­டும். அவள் அதைப்­பற்றி எல்­லாம் கவ­லைப்­ப­ட­வில்லை.

காலை­யில் சீக்­கி­ர­மாக எழுந்து அப்­பா­வு­டன் வய­லுக்­குச் சென்­று­விட்டு பள்­ளிக்­குச் சென்று விடு­வாள். அது­போல் மாலை வீட்­டிற்கு வந்­த­தும் பள்­ளிப்­பா­டத்தை முடித்­து­விட்­டு­தான் அடுத்த வேலை பார்ப்­பாள்.

படித்து ஒரு மருத்­து­வ­ராக வர­வேண்­டும் என்­பது அவள் விருப்­ப­மாக இருந்­தது. கார­ணம் அவ­ளு­டைய அப்பா ஆஸ்­துமா கோளா­றி­னால் பல ஆண்டுகளாக அவ­திப்­பட்டு வந்­தார்.

அவர்­கள் கிரா­மத்­தில் மருத்­து­வ­மனை இல்­லா­த­தால் பக்­கத்து ஊருக்­குச் சென்று வைத்­தி­யம் பார்த்து வந்­தார். ஆகை­யால் மருத்­து­வ­ரா­கித் தன் கிரா­மத்­தி­லேயே ஒரு மருத்­து­வ­ம­னையை அமைக்க வேண்­டும் என்­பது அவள் கன­வாக இருந்­தது.

அந்­தக் கனவு தண்­ணீ­ரில் எழு­திய கோலம்­போல் கலைந்து போகும் என்று அவள் எதிர்­பார்க்­க­வில்லை.

இப்­பொ­ழு­தெல்­லாம் வரு­கின்ற நோய் ஏழை பணக்­கா­ரன் என்று பார்த்தா வரு­கிறது?

அடிக்­கடி உடல்­ந­லக்­கு­றை­வி­னால் அப்­பா­தான் அவ­திப்­பட்டு வந்­தார். ஆனால், நன்­றாக இருந்த அம்மா திடீ­ரென்று இரத்த வாந்தி எடுத்­த­போது அவர்­க­ளுக்கு ஒன்­றும் புரி­ய­வில்லை. உடனே, மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­போது இரத்த புற்­று­நோய் என்று தெரிந்­தது. அது­வரை ஒழுங்­கா­கச் சென்­று­கொண்­டி­ருந்த அவ­ளின் வாழ்க்கை வண்டி தடம் புரண்­டது.

அம்­மா­வால் முன்­பு­போல் ஓடி­யாடி வேலை செய்ய முடி­ய­வில்லை. அம்­மா­வைப் பார்த்­துக்­கொண்டு தம்பி, தங்­கை­க­ளுக்­குச் செய்ய வேண்­டிய நிலை வந்­த­தால் அவள் படிப்­புக்கு முற்­றுப்­புள்ளி வைத்­தாள். தன்­னால் தன் மக­ளின் படிப்பு பாழா­னதை எண்ணி அவள் தாயார் கண்­ணீரை உகுக்­காத நாளில்லை.

இந்­நி­லை­யில் அம்­மா­வின் சிகிச்­சைக்­காக அவர்­க­ளி­ட­மி­ருந்த விவ­சாய நிலம் அட­மா­னத்­துக்­குப் போனது. மண்ணை மறக்க இய­லாது சில வரு­டங்­களில் அப்­பா­வும் கண்ணை மூடி­விட நொறுங்கிப் போனாள். அஸ்­தி­வா­ர­மாய் நின்ற அப்­பா­வின் இழப்பு அவளை மட்­டு­மல்ல அவ­ளு­டைய குடும்­பத்­தை­யும் ஆட்­டம் காணச் செய்­தது. வயல் வேலைக்­குச் சென்­றாள். கிடைத்த சொற்ப வரு­மா­னம் குடும்­பத்தை நடத்­து­வ­தற்­குப் போது­மா­ன­தாக இல்­லா­த­போது அம்­மா­வின் வைத்­திய செலவை அவ­ளால் சமா­ளிக்க முடி­ய­வில்லை. அரை வயி­றும் கால் வயி­று­மா­கக் காலத்­தைக் கடத்­திக்­கொண்­டி­ருந்த காலத்­தில்­தான் எழி­ல­ர­சி­யைச் சந்­தித்­தாள்.

வாத நோயால் இடது கை செய­லி­ழந்த நிலை­யி­லி­ருந்த முத்­த­ர­ச­னுக்கு நாட்டு வைத்­தி­யம் பார்க்க சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து அவ­ளின் ஊருக்கு வந்­தி­ருந்­தார்.

முத்­த­ர­ச­னைப் பார்த்­துக்­கெள்­வ­தற்­கும் வீட்டு வேலைக்­கும் ஆள் தேடி­ய­போது பொன்­மணி அந்த வேலையை ஒப்­புக்­கொண்­டாள்.

தன் தந்­தைக்­குச் செய்­வ­து­போல் அவ­ருக்­குத் தேவை­யான வேலை­களைச் சிரத்­தை­யு­டன் செய்­தாள். மூன்று மாதம் சிகிச்சை முடிந்த பிறகு பொன்­ம­ணி­யின் வேலை நேர்த்தி அவ­ருக்­குப் பிடித்­து­ப்போக அவ­ளை சிங்­கப்­பூ­ருக்கு அழைத்­தார்.

அவ­ளுக்கு விருப்­பம் இல்­லா­விட்­டா­லும் குடும்­பச்­சூ­ழல் அவளை ஒப்­புக்­கொள்­ளச் செய்­தது. எழி­ல­ர­சி­யும் அவ­ளின் குடும்­பச்­சூ­ழல் தெரிந்து அவ­ளுக்­குத் தேவை­யான பண உத­வி­க­ளைத் தயங்­கா­மல் செய்து வந்­தார்.

தன்­னு­டைய ஆசை­களை எல்­லாம் பொட்­ட­ல­மா­கக் கட்டி ஊரில் வைத்­து­விட்­டுக் குடும்­பப் பாரத்­தைப் பெட்­டி­யில் சுமந்­து­கொண்டு சிங்­கப்­பூ­ருக்­குக் கிளம்­பி­னாள்.

எல்­லா­வற்­றை­யும் சுருட்டி வைத்­து­விட்டு கிளம்­பி­ய­வளை மழை மட்­டும் ஒதுக்­க­வில்லை.

அவ­ளு­டைய எல்லா நிகழ்­வு­க­ளி­லும் அவ­ளோடு தொடர்ந்­து பய­ணித்­தது.

அவ­ளு­டைய அம்­மா­விற்கு உடல் நிலை குன்றி மருத்­து­வ­ம­னைக்கு அழைத்­துச் சென்­ற­போ­தும், அப்­பா­வின் இறுதிப் பய­ணத்­தின்­போதும் என்று மழைக்­கும் அவ­ளுக்­கு­மான பந்­த­மா­னது நிழல்­போல் தொடர்ந்­து­கொண்டே இருந்­தது. ஆனால், அவளோ அதன் பிறகு தாமரை இலைத் தண்­ணீர்­போல் மழை­யோடு ஒட்­டா­மல் ஒதுங்கி நின்­றாள்.

எழி­ல­ர­சி­யின் மகன் ஆஸ்­தி­ரே­லி­யா­வில் படித்­துக்­கொண்டு இருந்­த­தால் அவர்­கள் நடத்தி வந்த சிறிய நிறு­வ­னத்­தின் முழுப் பொறுப்­பை­யும் எழி­ல­ரசி கவ­னித்து வந்­தார். ஆகை­யால், சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வு­டன் ஊர் புதிது என்­றா­லும் பழ­கி­ய­வர்­க­ளு­டன் இருந்­த­தால் அவ­ளால் எளி­தில் சமா­ளிக்க முடிந்­தது.

மூன்று பேருக்­குச் சமைப்­பது என்­பது அவ­ளுக்­குப் பெரும் சுமை­யாக இல்லை.

எனவே, முத்­த­ர­ச­னுக்­குத் தேவை­யா­ன­தைச் செய்­வ­தில் மட்­டுமே பெரும்­பான்­மை­யான நேரத்தை அவள் செல­விட்­டாள்.

அவ­ளு­டைய தொடர் கண்­காணிப்­பில் அவ­ரு­டைய உடல்­நிலை­யில் நல்ல முன்­னேற்­றம் ஏற்­பட்­டது. அவ­ரு­டைய சொந்த வேலை­களை அவ­ரா­கப் பார்த்­துக்­கொள்­ளக்­கூடிய வகை­யில் அவ­ரு­டைய கையின் இயக்­கம் முன்­னேற்­றம் அடைந்­தது.

ஆரம்­பத்­தில் அவ­ளி­டம் மரி­யா­தை­யாக நடந்­து­கொண்­ட­வ­ரின் போக்­கில் சில நாட்­க­ளா­கச் சிறு மாற்­றம் தென்­பட தொடங்கி இருக்­கிறது. அவ­ருக்கு உடல்­நிலை சரி­யில்­லாத சம­யத்­தில் அவ­ரைப் பார்க்க அவ­ரின் நண்­பர் தியாகு எப்­போ­தா­வது வரு­வார். ஆனால், சில வாரங்­க­ளாக அவர் தின­மும் வரு­வது தொடர்­க­தை­யா­கி­விட்­டது. அதற்­குப் பின்பு முத்­த­ர­ச­னின் பார்­வை­யும் அவர் நடந்­து­கொள்­ளும் போக்­கும் மாறி­விட்­டது. இரு­வ­ரும் விளை­யா­டு­வது செஸ் என்­றா­லும் பேச்சு முழுக்க இரட்டை அர்த்­தத்­தில் இருக்­கும். மருந்து தேய்த்து விடும்­போது அவ­ரின் கை ஆங்­காங்கே அவள் மீது படும். தியா­குவோ அவ­ளி­ட­மி­ருந்து பார்­வையை நகர்த்­த­மாட்­டார். அப்­பொ­ழு­தெல்­லாம் கூரை­யில் பட்ட நெருப்­பு­போல அவள் உடம்பு திகு­தி­கு­வென்று எரி­யும். அப்­பா­விற்­குச் செய்­வ­து­போல் எந்­த­வொரு அசிங்­க­மும்­ படா­மல் இது­வரை பார்த்­துக்­கொண்­ட­வ­ளுக்கு இப்­போது அவர் அரு­கில் செல்­வ­தற்­குக்கூட அருவருப்­பாக இருக்­கிறது.

அனு­தி­ன­மும் அனு­ப­விக்­கும் இந்த வேத­னையை யாரி­ட­மும் சொல்ல முடி­யாது மனத்­திற்­குள் மரு­கு­வாள்.

அந்­தச் சம­யத்­தில் அவ­ளுக்கு வடி­கா­லாய் இருப்­பது பிங்கி மட்­டுமே.

அவ­ளு­டைய ஆதங்­கத்தை எல்­லாம் பிங்­கி­யி­டம்­தான் கொட்­டு­வாள். அது­வும் காதை விறைப்­பாக வைத்­துக்­கொண்டு கேட்­கும். சில வேளை­களில் அவள் சொன்­னது புரிந்­தது­போல லேசா­கக் குரைத்­துக் காட்­டும்.

மாறிப்­போன தன் வாழ்க்கை நிலையை எண்­ணிக்­கொண்டு அவள் உண்ண அமர்ந்­த­போது கடி­கா­ரத்­தில் இருக்­கும் குயில் தலையை நீட்டி 'குக்கூ.. குக்கூ' என்று நான்கு முறை கூவ ஏனோ பிரி­யா­ணி­யின் மணம் அவ­ளுக்­குக் குமட்­டிக்­கொண்டு வந்­தது.

வெளியே மழை­யும் வலுக்­கத் தொடங்­கி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!