சன்னல்

சிறுகதை

தமிழ்ச்செல்வி இராஜராஜன்

புதுசா அன்­னைக்­கு­தான் உல­கத்த பார்க்­கி­ற­மா­திரி இருந்­தது. ஆ..ஹா... மஞ்ச வெள்ள சிகப்­புனு வானம் எவ்­வளோ அழகா பெ…ருசா இருக்கு. ஆஹா...இந்த வெளிக்­காத்த சுவா­சிச்சி எத்­தன நாளாச்சு... அது உடம்­புல படு­றதே என்ன சுகமா இருக்கு... எல்­லாத்­தை­யும் என் கைக்­குள்ள அணைச்­சிக்­க­ணும்னு பேரா­சை­யா­யி­ருந்­தது.

ரெண்டு கையை­யும் பக்­க­வாட்­டில எவ்­வ­ளவு தூரம் நீட்ட முடி­யுமோ அவ்­வ­ளவு தூரம் இழுத்து நீட்டி கண்ணை மூடிக்­கிட்டு நெஞ்சை நிமிர்த்தி நெஞ்­சாங்கூடே வெடிச்­சி­டும்­படி மூச்ச இழுத்­தேன். என் வேலை­யி­டத்து மண்ணு மணம் எனக்­கு­ள்ள புகுந்து என்­னமோ செஞ்­சிது. அப்­ப­டியே தொப்­புனு மண்­டி­போட்டு அந்த மண்ணை பச் பச் முத்­தம் கொடுத்­தேன். அழு­கைய அடக்­கல. நிலைமை மாறாம இப்­ப­டி­யேவா இருக்­க­போகுதுங் கிறது நினைப்பு வந்­த­தும் பட்டுன்னு எந்­தி­ரிச்­சேன். மண்ணு ஒட்­டி­கிட்டு வழிஞ்ச எச்­சி­யை­யும் சளி­யை­யும் ரெண்டு கையா­ல­யும் வழிச்சி சட்­டை­யில துடைச்­சி­கிட்டு ஓடிப்­போய் நான் லோட­டிக்­கிற லாரி­யில ஏறி அதோட ஸ்டே­ரிங் வீல ஆசையா தடவிக் கொடுத்­தேன். நூத்தி ஐம்­பத்­தொரு நாள் கழிச்சி அத தொட்­ட­தும் மன­சுக்­குள்ள பீறிட்ட உற்­சா­கத்த சொல்­ற­துக்கு வார்த்­தையே இல்ல. இப்­போ­தைக்கு வேலை இடத்­துக்கு மட்­டு­மா­வது அனு­ம­திச்­சாங்­க­ளேன்னு நிம்­ம­தி­யா­யி­ருந்­தது.

இருந்­தாப்­ல­யி­ருந்து சட­ச­டன்னு மழை பெய்ய ஆரம்­பிக்­கிற மாதிரி வெளி­நாட்டு ஊழி­யர்­கள் தங்­கி­யி­ருந்த விடு­தி­யி­ல­யெல்­லாம் கொரோ­னா­வால நிறைய பேரு பாதிக்­கப்­பட்­ட­வு­டனே நிலைமை சரி­யா­கிற வரை நட­மாட்ட கட்­டுப்­பாடு போட்­டாங்க. அதக் கேட்­ட­வு­ட­னேயே என் ரூமு பய­லுங்க பூரா­வுக்­கும் ஒரே கொண்­டாட்­டம்­தான். "கம்­பெனி வண்டி வந்­து­டு­மேன்னு பயந்து பயந்து தூங்­காம நல்லா தூங்­க­லாம்டா" "கொஞ்ச நாளைக்கு அந்த சப்ப மூக்­கன பாக்க வேணாண்டா. அத சொல்லு" "ஐயோ... சரியா சொன்­னடா மச்­சான்". "wifi கனெக்‌ஷன் ப்ரீயா கொடுக்­கி­றாங்­கப்பா. எனக்கு அது போதும்" "அது மட்­டுமா? சாப்­பா­டும் அவங்­களே கொடுத்­து­ட­றாங்­களே!"" இப்­படி ஆளா­ளுக்கு சொல்­லிக்­கிட்டு அனு­ப­விக்க ஆரம்­பிச்­சுட்­டாங்க. எனக்­கு­தான்...

சின்ன வய­சி­லேர்ந்தே எனக்கு வீட்­டுல இருக்­கி­ற­துன்னா கட்டி வச்சி அடிக்­கி­ற­மா­திரி இருக்­கும். "தெரு­வுல உள்ள புழுதி பூ..ரா ஒஞ் சட்­டை­யி­ல­தாண்டா இருக்கு"னு சொல்லி என் அம்மா முதல்ல என்­னைய துவைச்­சிட்­டு­தான் பிறவு என் சட்­டையை துவைக்­கும். கிரா­மத்­தில மாமா மச்­சான் வீடு ஃப்ரெண்ட்ஸ்ங்­கனு சுத்­திட்­டுப் போனா­போ­வு­துன்னு கூட­டை­ய­தான் வூட்­டுக்கு வரு­வேன். நான் சிங்­கப்­பூ­ருக்கு கிளம்­பும்­போது "ஓடி­கிட்­டே­யி­ருந்த காலு இப்போ ஒரு இடத்­துல இருக்­கு­மாடா"னு அத்தை அணைச்­சி­கிட்டே கேட்­டுச்சு. "ஏன் ராசா, சிங்­கப்­பூ­ருக்கு போற­துக்கு முந்தி கொஞ்ச ஆத்­தா­கூட இருக்­க­ணும்ன்னு தோண­லையா"-ன்னு ஆதங்­கமா கேட்­டுச்சு". இங்க வந்த பிற­கும் எப்­படா ஞாயித்­துக்­கி­ழமை வரும்னு கிடப்­பேன். கம்­பெனி பஸ் தேக்­கா­வுக்கு கூட்­டிட்­டுப் போக வர்­றது வரைக்­கும் பொறு­மையா இருக்க முடி­யாது. வெள்­ள­னையா எந்­தி­ரிச்சு குளிச்சி முடிச்சு கிளம்­பி­டு­வேன். நிச்­ச­யமா ஏதா­வது ஒரு தமிழ் நிகழ்ச்சி நடக்­கும். அங்க போயி­டு­வேன். மத்­தி­யா­னம் ஊரு­கார ஆளுங்­க­ளை­யெல்­லாம் பாத்து கதை பேசிட்டு சுத்­திட்டு காய்­கறி மளிகை சாமா­னெல்­லாம் வாங்­கிட்டு, போன டாப்­அப் பண்­ணிட்டு எனக்­கும் சார்ஜ் ஏத்­தி­கிட்­டு­தான் திரும்­பு­வேன்.

எட்­டா­வது மாடி­யில எங்­க­ளோட அறை. "L" லெட்­டர இடப்­பக்­கம் திருப்பி போட்ட மாதிரி இருக்­கும். அதோட நேர்­கோடு போய் முட்­டுற இடத்­துல ஏழ­ரைக்கு நாலு அள­வுல ஒரு சன்­னல். அதோட இடக்­கைப்­பக்­கம் டாய்­லெட். இந்த பக்­கம் மேல கீழனு ரெண்டு அந்­தப் பக்­கம் ரெண்­டுன்னு எட்டு படுக்­கைங்க. மெயின் கதவ திறந்­துட்டு உள்ள நுழைஞ்சா வலப்­பக்­கம் சுவத்­தோட அடிச்ச ஒரு கண்­ணாடி. அதுல நின்னு பாத்தா கைலி பனி­யன் சட்டை ஜட்­டினு தோர­ணங்­க­ளோட அலங்­க­ரிப்­பல நாங்க அழ...கா தெரி­வோம். அதுக்­கு­கீழ இருக்­கிற இடம்­தான் எங்­க­ளுக்கு கலை­நி­கழ்ச்சி நடக்­கிற மேடை­யா­யி­டுச்சி. மத்­தி­யான சாப்­பாட்­டுக்கு பிறகு சூப்­பர் சிங்­கர், தலை­வர் படம், இந்தி படம்னு ஏதா­வது ஓடிக்­கிட்­டு­ருக்­கும். பக்­கத்­துல சீட்டு கச்­சேரி நடக்­கும். "யாரும் காசு வச்சு விளை­யா­டக்­கூ­டாது அர­சி­யல் பேசக்­கூ­டா­துன்னு" ராம­சாமி அண்ண கண்­டி­சனா சொல்­லிட்­டாரு. பாட்டு மிமிக்ரி மோனாக்­டிங் இப்­படி ஏதா­வது ஒண்ணு ஓட ஆரம்­பிச்­சி­டும். மத்­த­தெல்­லாம் எனக்கு ரொம்ப தூரம்ங்­கி­ற­தால சீட்டு மட்­டும் விளை­யா­டு­வேன். முகி­லன் எதுக்­குமே வரமாட்­டான். எங்க ரூம்­லேயே அவ­னுக்கு மட்­டும்­தான் கல்­யா­ணம் ஆகல. அக்கா மாத்­தி­ரம்­தான். அவங்­க­ளுக்­கும் போன வரு­ஷம் கல்­யா­ணம் முடிஞ்­சிட்டுது. அவன் படுக்­கைக்கு பக்­கத்­துல விஜ­யோட போஸ்­டர் ஒட்­டி­யி­ருப்­பான். அது­மேல சாஞ்­சி­கிட்டு இருக்­கிற படம் எல்­லாத்­தை­யும் டவுன்­லோட் பண்ணி பாத்­து­கிட்டு கிடப்­பான். பய போனை­யும் குளிப்­பாட்­டு­வா­னான்னு தெரி­யாது பாத்­ரூ­முக்கு கூட அது இல்­லாம போமாட்­டான்.

ரவைக்கு எத்­தன மணிக்கு தூங்­கி­னா­லும் மன­சும் உடம்­பும் எப்­பொ­ழு­தும்­போல காலை­யில கிளம்­பி­டும். என்­ன­தான் இழுத்து இழுத்து காலை கட­னை­யெல்­லாம் செஞ்­சா­லும் எட்டு மணிக்­கெல்­லாம் முடிஞ்­சி­டும். சில பேர் எழுந்­தி­ரி­சி­ருந்­தா­லும் படுத்த மேனிக்கே ஃபேஸ்புக், வாட்ஸ்­அப், யூடி­யூப்னு மூழ்­கிக் கிடப்­பாங்க. சில பய­லுங்­க­ளோட கைலி அவங்­க­ளுக்கு பக்­கத்­துல தனியா படுத்து தூங்­கி­கிட்­டி­ருக்­கும்.

விடி­யகா­லம்­பற நேரம்ங்­கி­ற­தால ஊருக்­குப் போன் அடிக்­க­வும் முடி­யாது. அப்­ப­டி­யும் ரூமு அமை­தியா இருக்­கேன்னு பொண்­டாட்­டிக்கு போன­டிச்சி பேசத்­தான் செய்­வேன். ஆனா­லும் அதுக்கு வேல இருக்­கும்ல ரொம்ப பேசாது. பொழுது போக­ணுமே என்­னத்த செய்­யி­றது?

நான் ஒன்­ப­தாம் வகுப்பு படிக்­கும்­போது சேது­ரா­மன்னு தமிழ் வாத்­தி­யார். மத்­தி­யான நேரத்­துல பள்­ளி­கூ­டத்­து­லி­ருந்த பெரிய வேப்­ப­ ம­ரத்­துக்கு கீழ வட்­டமா உக்­கார வச்சி தலை­வர்­க­ளின் வாழ்க்கை வர­லாறு, பார­தி­தா­சன் கவி­தை­கள், நாவல்­கள் இப்­படி ஏதா­வது ஒரு புத்­த­கத்த கொண்டு வந்­துட்டு யாரை­யா­வது குருட்­டாம்­போக்­கில எழுப்­பி­விட்­டுச் சத்­தமா வாசிக்க வைப்­பாரு. மூக்குமுட்ட தின்­ன­துக்­கும் வேப்­பங்­காத்­துக்­கும் தூக்க மாத்­திர போட்ட கணக்கா சொக்­கும். ஆனா நம்­மள எப்ப எழுப்­பு­வாரோ விட்ட இடத்­தி­லேர்ந்து படிக்­க­லைன்னா நடு­வுல நின்னு நாலு பக்­கத்த படிக்க வைப்­பா­ரேங்­கிற பயத்­துல கொட்ட கொட்ட பாத்­து­கிட்டு இருப்­போம். சிரிப்­பா­வும் கடுப்­பா­வும் இருந்­தது. போகப் போக "பொன்­னி­யின்­செல்­வன்" நாவலை வீட்­டுக்கு வாங்­கிட்­டு­போய் படிக்­கிற அள­வுக்கு மாறிட்டு.. என்­னோட ஆர்­வத்த தெரிஞ்­சி­கிட்டு லைப்­ர­ரிக்கு போற பழக்­கத்த ஏற்­படுத்தி நல்­லாவே தீனி போட்­டாரு. சிங்­கப்­பூ­ருல லைப்­ர­ரிக்கு பஞ்­ச­மே­யில்ல. ஆனா­லும் படிக்­கிற பழக்­கம் எப்­ப­டியோ குறைஞ்­சிட்டு. என்­கிட்ட கொஞ்­சம் புத்­த­கம் இருந்­துச்சு. தொண்­டூ­ழிய அமைப்­பு­க­ளி­லி­ருந்­தும் கிடைச்­சது. அது­தான் எனக்கு பெருந்­து­ணையா இருந்­துச்சு.

புஸ்­வா­ணம் கம்பி மத்­தாப்­பெல்­லாம் பத்த வச்­ச­தும் பர­ப­ரன்னு புடிச்­சி­கிட்டு எரிய ஆரம்­பிச்சு அப்­ப­டியே குறைஞ்­சி­கிட்டே வந்து அணை­யற மாதிரி மாசக்­க­ணக்­குல அடைஞ்சே கிடந்­த­தும் கூத்­தெல்....லாம் குறைஞ்­சிட்டு. ஊரா இருந்தா இந்த நேரத்­துல ஒரு போக சாகு­ப­டியே முடிஞ்­சி­ருக்­கும். எங்க மூச்­சுக் காத்து எப்­படி இருக்­கும், யாருக்கு எங்க மச்­ச­மி­ருக்கு. எங்க வெட்­டுக்­கா­ய­மி­ருக்கு, எங்க கடி வாங்­கி­ருக்­கோம் அடி வாங்­கி­ருக்­கோம்னு ரூமு சுவத்­துக்­குக்­கூட தெரி­யி­ற­ள­வுக்கு அத்­து­ப­டி­யா­யிட்டு. சன்­னல்­தான் எங்­க­ளுக்­கும் வெளி­யு­ல­குக்­கு­மான பாலம் என்­கி­றத புரிஞ்­சி­கிட்­டோம். அந்த சன்­ன­லேர்ந்து நேராப் பார்த்­தா­லும் பக்­கத்து கட்­டி­டம்­தான் தெரி­யும். "நாங்க தட்­டும்­போ­து­தான் கத­வைத் திறக்­க­ணும்னு" சொல்­லி­யி­ருந்­தாங்க. சாப்­பாடு வேளைக்­குத்­தான் கதவு தட்­டப்­பட்­டது. மத்­தி­யான சாப்­பாட கொடுக்­கிற நேரத்­து­ல­தான் சிலர் எழுந்­தி­ருக்­கவே செஞ்­சி­ருப்­பாங்க. சாயந்­தி­ரம் அஞ்­ச­ரைக்கே ராத்­திரி சாப்­பாட வெளி­யில வச்­சிட்டு கதவ தட்­டிட்டு போயி­டு­வாங்க. "ஆமா மத்­தி­யா­னம் தின்­னதே இன்­னும் செமிக்­கல. அதுக்­குள்ள அடுத்­தது. அதே சப்­பாத்தி, இடி­யாப்­பம், தோசை­தான்" புலம்­பல் குமார் ஆரம்­பிச்­சி­டு­வான். "உன் சாப்­பாட மட்­டும் சாப்­பிட்டா செமிக்­கும். மிச்­சம் இருக்­கிற எல்­லாத்­தை­யும் சாப்­பிட்டா எப்­பிடி செமிக்­கும்?" யார்­கிட்­டே­யி­ருந்­தா­வது பதி­ல­டி­யும் வாங்­கு­வான். நல்ல உண­வ­கத்­தி­லேர்ந்­து­தான் சாப்­பாடு வந்­துது. தொடர்ந்து ஒரே மாதி­ரியா இருக்­கும்­போது சலிப்­பா­யி­ருந்­தது. கொரோனா டெஸ்­டை­யும் வாச­லி­லேயே வந்து எடுத்­து­டு­வாங்க. எங்­க­ளோட டார்­மி­ல­யும் நிறைய பேருக்கு பாழாப்­போன அந்த வியாதி வந்­துட்­ட­தால கட்­டுப்­பாடு இன்­னும் கெடு­பி­டி­யா­யிட்டு. நமக்­கும் வந்­தி­டு­மோங்­கிற பய­மும் ஊருக்கு போயி­ருந்­தி­ருக்­க­லா­மேங்­கிற ஏக்­க­முமா அறை நிரம்பி வழிஞ்­சிது.

"என்­னா­டாது கத­வ­கூ­டத் திறக்க முடி­யாதா? நான் கீழ போறேன் என்ன பண்­றாங்­கனு பார்க்­கி­றேன்" குமார் கத்­தவே ஆரம்­பிச்­சிட்­டான். "ஐயோ!! இந்த கொரோனா கொடு­மை­யை­கூட தாங்­க­லாம்டா இவ­னோட பொலம்­பல தாங்க முடி­ய­லை­யேடா"ன்னு அண்­ணா­துரை சொன்­ன­தும் "உனக்­கென்ன... பிரச்­சினை வரப்­போ­குது நீதான் எப்­பப் பார்த்­தா­லும் சன்­னல் பக்­கத்­து­லேயே நின்­னு­கிட்டு பொண்­டாட்­டி­கிட்ட பேசி­கிட்­டே­யி­ருக்­கியே". "எதுக்­குடா அனா­வ­சி­யமா என் பொண்­டாட்­டிய இழுக்­கிற" அண்­ணா­துரை அடிக்க கை ஓங்­கிட்­டான்.

சாதா­ரண நேரமா இருந்தா மக்க மனு­சங்க தல தெரி­யாத இடமா போய் பொண்­டாட்­டி­கிட்ட மணிக்­கணக்­கில் பேசிட்டு வர்­றது வழக்­கம். பேசும்­போது அவ குடும்­பத்த சேர்ந்­த­வங்க பக்­கத்­துல இருக்­காங்­கனு தெரிஞ்சா "என்ன என்­னைய நெனச்­சி­கிட்டே தூங்­கு­னியா. என் நெனப்பு வந்தா அப்­ப­றம் எங்க தூக்­கம் வரப்­போ­குது" இப்­படி ஏதா­வது பேசி அவங்க பதில் சொல்ல முடி­யாம சிணுங்­கி­கிட்டே கொஞ்சி கெஞ்­சி­றத ரசிக்­கி­ற­துல எங்­க­ளுக்கு ஒரு சுகம். இப்போ யாரா­வது சன்­னல் பக்­கம் ஒதுங்கி குசு­கு­சுன்னு பேசி­னாலே நாங்­க­ளாவே ஒதுங்­கி­டு­வோம். அண்­ணா­து­ரை­யின் மனை­விக்கு சீமந்­தம். அம்மா வீட்­டுக்கு அழைத்து போற­துன்னு ஏதா­வது இருந்­து­கிட்டே இருந்­த­தால அவன் பெரும்­பா­லும் சன்­னல் பக்­கத்­தி­லே­தான் இருந்­தான்.

இப்­பெல்­லாம் கண்­ணா­டி­யில நாங்க தோரண அலங்­கா­ர­மெல்­லாம் இல்­லாம முழுசா தெரி­ய­றோம். ஆனா, இந்த சுத்­தம் எங்­க­ளுக்கு சுகத்த தரல. ராத்­தி­ரியே கட்டி வச்ச சோத்து மூட்­டையை தூக்­கி­கிட்டு கம்­பெனி வேன்ல போயி வெயில்­ல­யும் மழை­யி­ல­யும் வேல செஞ்­சிட்டு அக்­க­டான்னு உடம்பு அலுத்­துப்­போயி வந்­தப்ப நிம்­ம­தியா இருந்­துது. வேலைக்கு போகாம பாதி சம்­ப­ளம் கொடுத்­தா­லுமே சும்­மா­யி­ருப்­ப­து­தான் கொடு­மையா இருந்­துச்சு. போதாக்­கு­றைக்கு வெளி­யி­லி­ருந்து வந்த சேதிங்க எங்­க­ளுக்கு அச­திய கொடுத்­துச்சு.

"என் மச்­சான் தங்­கி­யி­ருக்­கிற டார்ம்ல ஒருத்­தன் மொட்ட மாடி­யி­லேர்ந்து குதிச்சி உசுரை மாச்சிக்கிட்டானாம்," என்று ஜேம்ஸ் சொன்­ன­தும் ஐயோ என்­றி­ருந்­தது. "அவன் ரெண்டு மூணு நாளாவே யாரு­கிட்­ட­யும் பேசாம சரியா சாப்­பி­டாம இருந்­தி­ருக்­கான். ரூம்ல இருந்­த­வங்க பேசி பார்த்து சரியா ரெஸ்­பான்ஸ் பண்­ண­லன்­ன­தும் தொந்­த­ரவு செய்ய வேணான்னு விட்­டுட்­டாங்க." "ஆனா அவ­னால எப்­படி வெளி­யில போக முடிஞ்­சிது!! எப்ப பாத்­தா­லும் மாம்ஸ் சுத்­தி­கிட்டே இருக்­காங்­களே?" இப்­படி அந்த செய்­தி­யோட தொடர்ச்­சியா அதைப்­பத்­தின ஊக­மும் உலாவ ஆரம்­பிச்­சி­டும். "அடைஞ்சி கிடக்­கி­ற­துக்குப் பதிலா போயி சேர்ந்­து­ட­லாம்ன்­னு­தான் இருக்கு," சைய­தும் குமா­ரும் முன­கி­கிட்டே சன்­னல் பக்­கம் போனாங்க. "முட்­டாப்­பய வாழ்க்­கையை அனு­ப­விக்க தெரி­யல. இவ­னெல்­லாம் இருக்­கி­ற­துக்கு போறதே மேல்," கைத்­தொலை­பே­சி­யில் படத்­தைப் பாத்­து­கிட்டே முகி­லன் சொன்­ன­தும் கடுப்­பான ராம­சாமி அண்ண "டே... நீ மனு­ச­னாடா. ஒரு உசிரு போயி­ருக்கு. இரக்­கப்­பட வேணா. வாய மூடி­கிட்­டா­வது இருக்­க­லாம்ல" கத்­தி­னார். "கால முச்­சூ­டும் இப்­ப­டி­யேவா இருக்­கப் போறோம்? அதுக்­காக சாவ­ணுமா?" அவ­னும் பதி­லுக்குப் பேச ஆரம்­பிச்­ச­தும் எங்க இது சண்­டை­யில வந்து நின்­னு­டு­மோனு "டேய் முகிலா வாய மூடுடா"னு நான் கொஞ்­சம் கடு­மையா சத்­தம் போட்­ட­தும் அடங்­கிட்­டான். விரும்­பத்­த­காத அமை­தி­யா­யிட்டுது.

திரும்பி முகி­லன பார்த்­தேன். தலை­கா­ணிய சுவத்­துல சாய்ச்சி வச்­சி­கிட்டு சரிஞ்சி படுத்­த­படி கைத்­தொ­லை­பே­சிக்­குள்ள மூழ்­கி­ருந்­தான். பார்க்க கொஞ்­சம் பொறா­மையா இருந்­தது. 'எவ்­வளோ பெரிய செய்­தியை சாதா­ர­ணமா சொல்­லிட்­டான். செத்து போன­வ­னுக்கு இவன் வய­சி­ருக்­க­லாம் இல்ல அதி­க­மா­வும் இருக்­க­லாம். இந்த மனப்­பக்­கு­வம் இருந்­தி­ருந்தா அந்த முடி­வுக்கு வந்­து­ருக்க மாட்­டா­னேனு' வருத்­தமா இருந்­துச்சு. என் கையில "கண்­ண­தா­ச­னின் காவிய வரி­கள்". "ண்ண.... எப்­பப் பாத்­தா­லும் படிச்­சி­கிட்டே இருக்­கீங்­களே! லைஃப்-யும் கொஞ்­சம் எஞ்சாய் பண்­ணுங்­கண்ணா... எங்க இளைய தள­பதி­யோட "சர்­கார்" படத்த பாருங்க'ண்ணானு" அப்­பைக்­கப்ப என்­னை­யும் ஓட்­டு­வான்.

"சிறகு கிடைத்­தால் பறப்­பது மட்­டும் வாழ்க்­கை­யல்ல, சிலுவை கிடைத்­தால் சுமப்­ப­து­தான் வாழ்க்கை" படித்த வரி­கள் நினை­வுக்கு வந்­துச்சு.

அப்­ப­டியே அதை கவுத்து வச்­சிட்டு தரை­யில் இறங்கி படுத்­து­கிட்­டேன். வீட்­டுக்குப் பேச­ணும்­போ­ல­ருந்­தது. எக்கி படுக்­கை­யி­லி­ருந்த கைத்­தொ­லை­பே­சியை எடுத்­தேன். அப்­பா­தான் எடுத்­தார். வேப்­பங்­கொட்டை கூட்­டி­கிட்டு இருக்­கி­ற­தா­க­வும் எப்­ப­யும் இல்­லாத அள­வுக்கு கிலோ அம்­பது ரூபாய்க்கு போற­தா­வும் சொன்­னாரு. "வேகாத வெயில்ல எதுக்கு உங்­க­ளுக்கு இந்த வேல"ன்னு வாய் வரைக்­கும் வந்­தத சொல்­லாம நிறுத்­திட்­டேன். மத்­த­வங்­க­ளி­ட­மும் பேசிட்டு போனை நெஞ்சு மேலேயே வச்­சிட்டு இரண்டு கைக­ளை­யும் மடக்­கித் தலைக்கு கொடுத்­த­படி கிடந்­தேன்.

எப்ப பேசி­னா­லும் கிரா­மத்­துல அவங்­க­ளெல்­லாம் சாதா­ர­ண­மாக இருப்­ப­தா­கத்­தான் சொன்­னாங்க. வந்த புது­சுல சம்­பா­திச்சு அனுப்­பின காசுல அப்பா நஞ்­சை­யும் புஞ்­சை­யுமா கொஞ்­சம் நெலத்­த­தான் வாங்கி போட்­டாரு. பெருசா பணக்­கா­ரன்னு சொல்­லிக்­கி­ற­ள­வுக்கு இல்­லன்­னா­லும் ஆறு வயித்­துக்கு தாரா­ளமா போதும். "கஜா புய­லுக்கு தப்­பிச்ச தென்ன மர­மெல்­லாம் இந்த வரு­ஷம் நல்ல காய்ப்பு தம்பி" அம்மா சொல்­லும்­போது கேக்க அப்­ப­டித்­தான் இருந்­துது. சொந்­தமா ரெண்டு ஊரணி இருக்கு. சுத்­தி­தான் இந்த வேப்­ப­ம­ரம். பெத்­த­வங்­க­ளை­யும், நான் பெத்­த­துங்­க­ளை­யும், பொண்­டாட்­டி­யை­யும் விட்டு இங்க வந்து இன்­னும் கொஞ்ச அதி­கப்­ப­டியா காசு வரு­துன்னு சொல்­லிக்­கி­றத தவிர என்ன இருக்கு? கைத்­தொ­லை­பே­சி­யின் கனம் அழுத்­தி­யது.

ரூமுக்­குள்ள இருக்­கிற பத்து பேரும்­தான் ஒருத்­த­ருக்­கொ­ருத்­தர் ஆறு­தல்ங்­கிறது எங்­க­ளுக்கு புரிஞ்சு போச்சு. சாதா­ரண நாளுல சொத்­தையே வேணா­லும் விட்­டுக் கொடுப்­போம். ஆனா உசிரே போனா­லும் பாத்­ரூ­முக்­குப் போறத மட்­டும் விட்­டு­கொ­டுக்க மாட்­டோம். இப்போ "நீ போற­துன்னா போ நான் அப்­ப­றம் போயிக்­கி­றேன்" அவ­ச­ரத்­தையே உள்­ள­தள்ளி அடக்­குற அள­வுக்கு பக்­கு­வ­மா­யிட்­டோம். சுத்­தம் செய்­ற­துக்கு என்­ன­தான் முறை வச்­சி­ருந்­தா­லும் யாரும் பெருசா கண்­டு­கிட்­ட­தில்ல. அதை­யா­வது செய்­வோம்னு அறையே அரை இஞ்ச் பள்­ள­மா­கி­ற­ள­வுக்கு ஆளா­ளுக்கு சுத்­தம் செஞ்­சோம். மணல் லாரி­யி­லேர்ந்து கொட்­டுற மணல் மாதிரி கண்ட செய்­திங்க கொட்­டி­னா­லும் கண்­டுக்­காம மறு­படி­யும் எங்க கலை நிகழ்ச்சி மேடையை கல­க­லப்­பாக்­கி­னோம். "2020ஆம் ஆண்டு அமோ­க­மான ஆண்டா இருக்­கப்­போ­குது" பழைய 'நீயா நானா' நிகழ்ச்­சி­யில் நாலு ஜோசி­யக்­கா­ரங்க உக்­காந்து சொல்­லிக்­கிட்டு இருந்­தாங்க. "மவ­னுங்­களா நீங்க மட்­டும் என் கையில கிடைச்­சீங்க கைமா­தாண்டா. அப்­ப­றம் உங்க லைஃப் அமோ­கமா இருக்­கும்" அண்­ணா­துரை கத்­தி­னான். ராம­சாமி அண்ண ரொம்ப கட்­டு­செட்டா இருக்­கி­ற­வரு. ஆனா சூப்­பர் ஸ்டா­ரோட படம் வந்­துச்­சுன்னா டிக்­கெட் விலை எவ்­வ­ளோ­யி­ருந்­தா­லும் யோசிக்­காம போயி­டு­வாரு. "நம்ம ராம­சாமி அண்ண பாட்ஷா படத்­துல வர்ற 'மாணிக்­கம்'. அதான் அமை­தி­யாவே இருக்­காரு. பாசக்­கார அண்ண"ன்னு கிண்­ட­ல­டிப்­பா­னுங்க. அவரே, மத்­த­வங்­க­ளெல்­லாம் ஆளா­ளுக்கு ஒண்ணு பண்­றத பாத்­துட்டு "நான் தலை­வ­ரோட பஞ்ச் டய­லாக் சொல்­ல­வான்னு" வெக்­கப்­பட்­டு­கிட்டே கேட்­டாரு. "தலைவா.... வாங்க தலைவா.... உங்­க­ளுக்­கா­கத்­தான் காத்­து­கிட்டு இருக்­கோம்" கத்­தி­னான் பாண்­டி­யன்.

"நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி..."னு ஆரம்­பிச்சி படை­யப்பா, அண்­ணா­ம­லைன்னு வரி­சையா போன­வரு" நான் எப்போ வரு­வேன் எப்டி வரு­வேன்னு தெரி­யாது"னு ஆரம்­பிச்­ச­தும் "அதான் எங்­க­ளுக்கே நல்லா தெரிஞ்­சு­போச்சே தலைவா..." எல்­லா­ரும் சேர்ந்து கத்­தி­னாங்க. திடீர்னு முகி­லன் "நெஞ்­சுக்­குள்ள குடி­யி­ருக்­கும் நம்ம சனம் வெறித்­த­னம்" பாட்ட போட்டு டான்ஸ் ஆடி எல்­லா­ரை­யும் ஆட வச்­சிட்­டான். முடிஞ்­ச­தும் "எப்­ப­டிடா கவ­ச­குண்­ட­லத்த உட்­டுட்டு ஆட வந்த"னு ஆளா­ளுக்கு அவனை ஓட்­டி­னோம். "வர வர இதப் பாக்­கவே வெறுப்பா இருக்­குனு" சொல்­லி­கிட்டே படுக்­கை­யில் வீசி­ன­தும் "டேய் முகிலா என்­னாச்­சுடா உனக்­குனு" நான் கேட்­டுக்­கிட்­டு­ருக்­கும்­போதே அண்­ணா­து­ரைக்கு அம்­மா­வி­ட­மி­ருந்து அழைப்பு வந்­துச்சு. பாண்­டி­யன்­தான் எடுத்­தான். "ஓ... அப்­ப­டியா இருங்க இருங்க அண்­ணா­துரை டாய்­லெட்ல இருக்­கான் கூப்­பி­டு­றேன்னு சொல்­லி­கிட்டே டேய்... அண்­ணா­துரை சீக்­கி­ரமா வாடா உனக்­குப் பொம்­பள புள்ள பொறந்­து­ருக்­கு­தாம்னு" கத்­தி­ன­துமே ரூம் முழுக்க அந்த மகிழ்ச்சி தீ புடிச்­சி­கிட்டு. அடுத்து வந்த கொஞ்ச நாளைக்கு அவன்­கிட்ட குழந்­தைய காட்­டும்­போது நாங்­களும் பாப்­பாவ கொஞ்­சி­கிட்டு சிரிச்­சி­கிட்டு நேரம் போச்சு. "நான் பக்­கத்­துல இல்­லங்­கி­ற­து­னால பாப்­பாவ வீடி­யோ­வுல காட்­டு­றாங்க. இல்­லாட்­டின்னா ஆயிசு குறைஞ்­சு­டும்னு புள்­ள­கிட்ட கேம­ரா­வையே விட­மாட்­டாங்க"னு அண்­ணா­துரை சொன்­ன­தும் மத்­த­வங்­களும் அவங்­க­ளுக்கு குழந்த பொறந்­தப்போ நடந்­ததை சொல்லி பேசி­கிட்­டு­ருக்­கும்­போது "எனக்கு புள்ள பொறந்­தப்ப என் அம்­மாயி நீ கெட்­டப் பய­டானு சொல்லி என்­னைய என் பொண்­டாட்­டி­கிட்­டயே நெருங்க விட­லனு" ஜேம்ஸ் சொன்­ன­தும் சிரிப்பு சத்­தம் கூடி­டுச்சு. "சே!! இந்த சனி­யன் புடிச்ச கொரோ­னா­வால அண்­ணா­துரை புள்­ளைய பாக்­கக்­கூட போக முடி­ய­லனு" குமாரு ஆரம்­பிச்­ச­தும் "டேய் டேய் கொஞ்ச நேரம் சந்­தோ­சமா இருக்­க­லாம்டா" புலம்­பா­த­டானு ஜேம்ஸ் அடக்­கி­னான்.

'விலை கம்­மியா இருக்­குனு ஊருக்கு போற­துக்கு எப்­பவோ டிக்­கெட் போட்டு வச்­சிட்­டான். எல்­லாம் இயல்பா இருந்­தி­ருந்தா அவன் இந்­நே­ரம் ஊருல இருந்­தி­ருப்­பான். பொண்­டாட்­டியை கொஞ்­சி­ருப்­பான். குழந்­தையை தூக்கி அந்த சுகத்த அனு­ப­விச்­சி­ருக்­க­லாம். அம்மா அப்பா மாம­னார் மாமி­யார்னு அவன சுத்தி ஆளுங்க இருந்­து­ருப்­பாங்க. இந்த தரு­ணம் மறு­ப­டி­யும் வர­வாப் போகுதுனு என்­னைய மாதி­ரியே நிச்­ச­யம் யாரா­வது நினைக்­காம இருந்­து­ருக்க மாட்­டாங்க. எப்­ப­டியோ ஆனந்­தக் காற்று கொஞ்­சம் வீசு­தேன்னு நினைச்­சு­கிட்­டு­ருக்­கும்­போது சையத்­தோட வாப்பா இறந்­துட்­டா­ருன்னு வந்த சேதி எங்க எல்­லா­ரை­யுமே உலுக்­கிட்டு. நோய் வந்­து­ருக்­குன்னு சொன்னா இவன் கவ­லைப்­ப­டு­வான்னு சொல்­லா­ம­லேயே இருந்­து­ருக்­காங்க. ஆஸ்­பத்­தி­ரி­யில நாங்­களே இறுதிச் சடங்கை முடிச்சுக்கிறோம்னு சொல்லி உடம்ப வீட்­டுக்­கு­கூ­டக் கொடுக்­கல. "சையது...... வாப்பா முகத்த கட­சியா பாக்­க­கூட விட­லடா" அவங்க அம்மா கத­று­றாங்க. "ஐயோ அம்மா... உன்­னைய வந்து கட்டி புடிச்­சிக்­க­ணும்­போல இருக்­கேன்னு" இவன் அழு­வு­றான். சையத்­தோட தம்பி துபாய் டார்ம்ல மாட்­டி­கிட்டு வாப்பா அம்­மானு கத்­து­றான். ஐயோ இன்­னும் என்ன கொடு­மை­யெல்­லாம் அனு­ப­விக்­கப் போறோமோ தெரி­ய­லை­யேனு கத்­து­றத தவிர வேற வழி யாருக்­கும் தெரி­யல.

அதன்­பி­றகு அவிழ்க்க முடி­யாத இறுக்­க­மான சூழ்­நிலை ரூம் முழுக்க வியா­பித்­தி­ருந்­துது. சையத் சன்­ன­லுக்கு வெளிய அந்த கட்­டி­டத்­தையே வெறிச்சு பார்த்­து­கிட்டு உட்­கார்ந்­தி­ருந்­த­வன் திடீர்னு நமாஸ் பண்­ற­மா­திரி கவுந்­து­கிட்டு "வாப்பா...வாப்பா..."னு முன­கி­னான். உடம்பு லேசா குலுங்­கிச்சு. பின் ஒரு விரல்கடை அள­வுக்கு தலையை தூக்கி தரை­யில முட்டி முட்­டி­கிட்டு அழுவ ஆரம்­பிச்­சிட்­டான். நான் மெதுவா கிட்­ட­போய் உட்­கார்ந்­து­கிட்டு அவ­னோட தோள்­பட்டை ரெண்­டை­யும் புடிச்­சி­கிட்­டேன். 'அவ­ருக்கு தெரி­யாம இவன் செஞ்ச காரி­யம் ஏதா­வது நினை­வுக்கு வந்­தி­ருக்­க­லாம். இல்­லாட்டி முக்­கி­யமா ஏதோ ஒண்ண சொல்ல நினைச்­சி­ருக்­க­லாம். உல­கத்­த­விட்டு போகும் போது­தான் நாம யாருனு தெரி­யும்னு சொல்­லி­கிட்டு இருந்­த­வர் பத்­தோட பதி­னொன்னா மாட்டு வண்­டி­யில கொண்டு போற மாதிரி ஆயிட்­டேங்­கிறது நினை­வுக்கு வந்­தி­ருக்­க­லாம். எது­வா­யி­ருந்­தா­லும் அந்த நேரத்­துல ரூம்ல சோக வாடை­தான் அடிச்­சுது. வந்த சோறும் ரெண்டு வேளையா தெறக்­கா­மலே கெடந்­தது.

ராம­சாமி அண்­ணன் எங்க எல்­லா­ரை­யும் ஒரு பக்­கமா கூட்­டிட்­டுப் போய் "அவ­னோட போக்கே சரி­யில்ல, அவன அவங்க அம்­மா­கிட்ட பத்­தி­ரமா அனுப்ப வேண்­டி­யது நம்ம பொறுப்பு. புரிஞ்­சுதா?" வார்த்­தை­க­ளின் சுமை புரிந்து கல­க­லப்பா இருக்­கி­ற­துன்னு முடிவு பண்­ணிட்­டோம். முகி­லன் சையத் கூடவே இருந்­தது இன்­னும் நிம்­ம­தியா இருந்­துச்சு.

அண்­ணா­துரை, அவன் குழந்தை தூக்­கத்­தி­லேயே சிரிக்­கிறது அழு­வற வீடி­யோ­வை­யெல்­லாம் பொதுவா காமிச்­சி­கிட்டு இருந்­தான். "இங்­கப் பாரு நம்­மாளு வீடி­யோவ, "எனக்கு பர­ம­சி­வன் கொடுக்­கி­றான் நான் அனு­ப­விக்­கி­றேன். உங்­க­ளுக்­கெல்­லாம் பொறா­மையா இருக்கு"னு நித்­தி­யா­னந்தா போஸ்ட் செய்­தி­ருந்த வீடி­யோவை காட்­டிட்டு "வாழ்ந்தா நம்ம நித்தி மாதிரி வாழ­ணும்டா. ஏண்டா கைலா­சத்­துக்கு அனுப்­பு­ற­துக்கு எவ­னா­வது ஏஜெண்ட் இருக்­கா­னான்னு பார்த்து, இருந்தா வொர்க் பெர்­மிட் வாங்­கிட்டு அங்க போயி­ட­லாம்" பாண்­டி­யன் சொன்­னான். "அங்­கே­யும் வொர்க் பெர்­மிட்­ல­தான் போக­ணுமா? சிட்­டி­ச­னாவே போயி­ட­லாம். அப்­போ­தான் பொண்­ணுங்­க­ளோட குசா­லமா இருக்­க­லாம்"ணு நான் சொன்­ன­தும் சையத் நிமிர்ந்து பார்த்து சிரித்­து­விட்­டான். "டேய் அண்­ணிக்­குப் போன போடுடா. இவ­னோட பேச்சே சரி­யில்­லன்னு சொல்­ல­லாம். இதை ஏதோ நம்ம முகில் செல்­லம் சொன்­னா­கூட ஒரு நியா­யம் இருக்கு. அவன் கொஞ்ச நாளாவே கிறக்­கமா இருக்­கான். என்ன நான் சொல்­றது? கரெக்ட்­தா­னடா முகிலா? பாண்­டி­யன் முகி­லனை தேடி­னான். சத்­தத்­தைக் காணும். எங்­கடா அவன்? டாய்­லெட் போயி­ருக்­கானா?"

"இல்­லையே... டாய்­லெட் கதவு திறந்து கிடக்கே!!" அடுத்த சில வினா­டி­யில நாங்க எத்­தனை தடவை முகி­லன கூப்­பிட்­டி­ருப்­போம்னு தெரி­யாது. அவ­னுக்கு போன் அடிச்­சோம். "நெஞ்­சுக்­குள்ள குடி­யி­ருக்­கும் நம்ம சனம் வெறித்­தனம்" முகி­ல­னோட ரிங்­டோன் சத்­தம் சையத்­தின் அரு­கி­லி­ருந்து வந்­தது.

(தேசிய கலை­கள் மன்­றத்­தின் ஆத­ர­வில் நடந்த 'தங்­க­முனை விருது 2021'-ல் முதல் பரிசு பெற்ற சிறு­கதை)

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!