சந்தன கலர் சட்டை கோல்டு பிரேம் கண்ணாடி

சிறுகதை

நாசா

இந்­தி­யப் பய­ணத்­தின்­போ­து கோயம்­புத்­தூர் சென்று உற­வி­னர்­க­ளைப் பார்த்து வரு­வது வழக்­கம். மயி­லா­டு­து­றை­யி­லி­ருந்து புறப்­பட்ட தொடர்­வண்­டி­யின் வேகத்­தில் பச்­சைக் கம்­ப­ளம் விரித்­தது­போல இருந்த வயல்­வெ­ளி­களின் பின்­பு­லத்­தில் தெரிந்த பனை மரங்­க­ளெல்­லாம் வேக­மாகப் பின்­னோக்கி ஓடிக்­கொண்­டி­ருந்­தன.

பசு­மை­யான வயல்­வெ­ளி­களில் இருந்து வீசிய அந்­தக் காற்று என் தலை­யைச் செல்­ல­மா­கக் கலைத்து­விட்­டுச் சென்­றது.

வயல்­வெ­ளி­க­ளின் அந்த மணத்­தைச் சுவா­சித்த எனக்கு அதை வெளி­யிட மன­மில்லை.

நீண்ட தொலைவு பய­ணத்­திற்­குத் தொடர் வண்­டிப் பய­ணமே சிறந்­தது. இதில் பய­ணம் செய்­வ­தில் ஒரு தனி சுகம் இருக்­கத்­தான் செய்­யும்.

பேருந்­தில் செல்­வ­தை­விட எனக்­குத் தொடர்­வண்­டிப் பய­ணமே மிக­வும் பிடிக்­கும். அதற்­குக் கார­ணம் தொடர்­வண்­டிப் பய­ணம் நமக்­குக் களைப்­பைத் தராது. அவ்­வப்­போது விற்­கப்­படும் உண­வு­கள், கழி­வறை வசதி எனப் பல­வற்­றைச் சொல்­லிக்­கொண்டே போக­லாம்.

மேலும், தொடர்­வண்­டிப் பய­ணம் நம் வாழ்க்­கைப் பய­ணத்­தோடு மிக­வும் நெருங்­கி­ய தொடர்­பு­கொண்­டது. பலர் நம்­மோடு சேர்ந்து பய­ணிப்­பர்; நெருங்­கிப் பழ­கு­வர்; துணை­யாக இருப்­பர்; பல அனு­ப­வங்­க­ளைத் தரு­வர்; அவ­ர­வர் இறங்க வேண்­டிய இடத்­தில் இறங்கி­வி­டு­வர். இவை அனைத்­தும் நாம் இறங்க வேண்­டிய நிறுத்­தம் வரை நிக­ழும். தொடர்­வண்­டிப் பய­ணத்­தில் நாம் இறங்க வேண்­டிய நிறுத்­தத்தை நாம் அறி­வோம்; வாழ்க்­கைப் பய­ணத்­தில் அறி­யோம்.

தொடர்­வண்டி கரூர் நிலை­யத்­தில் நின்­றது. அந்த நிலை­யத்­தில் வண்டி நிற்­கும்­போது ஆறரை மணி, சற்று நேரம் கழித்தே இந்த நிலை­யத்தை விட்­டுத் தொடர்­வண்டி கிளம்­பும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யத்­தில் இருக்­கும் புகழ்­பெற்ற உண­வங்­கா­டி­யில் இட்லி சுடச் சுடக் கிடைக்­கும் என்று கூறிய சகப்­ப­ய­ணி­கள் இருக்­கை­யி­லி­ருந்து அவ­ச­ர­மா­கக் கிளம்­பி­னர்.

நானும் என் மனை­வி­யி­டம் இட்லி வேண்­டுமா என்­றேன். எனக்­குப் பசிக்­க­வில்லை என்று கூறி­ய­தால் நான் வாசித்­துக்­கொண்­டி­ருந்த புத்­த­கத்தை மூடி வைத்­து­விட்டு அந்த நிலை­யத்தை வேடிக்­கை பார்க்­கத் தொடங்­கி­னேன்.

கையில் பய­ணச்­சீட்டை வைத்­துக்­கொண்டு ஓட்­ட­மும் நடை­யு­மா­கத் தங்­க­ளுக்­கு­ரிய பெட்­டி­யைத் தேடும் பய­ணி­கள்; டீ...டீ... என்ற டீ விற்­ப­வ­ரின் கரடுமுர­டான குரல்.. ம்மா பூ... வாங்­கிக்­கமா.. பத்து ரூவா... தலை சும்மா இருக்­குப் பாரு இந்தா புடி! என்று கட்­டாய விற்­பனை என அந்த நிலை­யம் பர­ப­ரப்­பாக இயங்­கி­க்கொண்­டி­ருந்­தது.

நாங்­கள் அமர்ந்­தி­ருந்த அந்­தப் பெட்டி, சந்­தன முல்­லை­யின் மணத்­தால் நிரப்­பப்­பட்­டி­ருந்­தது.

நான் அமர்ந்­தி­ருந்த சன்­னல் இருக்­கைக்கு எதிரே நடுத்­தர வய­து­டைய பெண்­மணி ஒரு­வர் தரை­யில் அமர்ந்து பூ கட்­டிக்­கொண்­டி­ருந்­தார். ஆனால், அவர் பூவோ பொட்டோ வைத்­தி­ருக்­க­வில்லை.

பூ விற்­ப­வர்­கள் எல்­லாம் இந்த வண்டி கிளம்­பு­வ­தற்­குள் முடிந்­த­ளவு விற்­று­வி­ட­வேண்­டும் என்று பம்­ப­ர­மாய்ச் சுழன்று கொண்­டி­ருக்க இவர் மட்­டும் கண்­ணும் கருத்­து­மா­க­வும் அதே­ச­ம­யம் வேக­மா­க­வும் பூக்­க­ளைக் கட்­டிக்­கொண்­டி­ருந்­தார்.

அவ­ரு­டைய கைவிரல்­கள் ஆடிய நர்த்­த­னமே அவர் நீண்ட நாள்­களாக அந்த வேலை­யைச் செய்து வரு­கி­றார் என்­பதை எனக்கு உணர்த்­தி­யது.

அப்­போது பத்து வயது மதிக்­கத்­தக்க சிறு­வன் ஒரு­வன் அவ­ரி­டம் ஓடி­வந்­தான். அவன் அணிந்­தி­ருந்த சீரு­டை­யின் மூலம் அர­சுப் பள்­ளி­யில் படிக்­கும் மாண­வன் என்று அறிந்­து­கொண்­டேன். அவ­னு­டைய அம்­மா­வின் அரு­கில் புத்­த­கப் பையை வைத்­து­விட்டு எங்கோ விரைந்து சென்­றான்.

சற்று நேரத்­தில் அவ­னால் தூக்க முடிந்த அளவு புத்­த­கங்­க­ளைத் தூக்­கிக்­கொண்டு நாங்­கள் அமர்ந்­தி­ருந்த பெட்­டி­யில் ஏறி குழந்­தை­க­ளு­டன் இருப்­ப­வர்­க­ளா­கப் பார்த்­துப் புத்­த­கங்­களை விற்­கத் தொடங்­கி­னான்.

என் மனைவி அந்­தப் பைய­னைக் கூப்­பிட்­டுச் சில புத்­த­கங்­களை வாங்­கிப் பார்த்­தார்.

அனைத்­தும் சிறு­வர்­க­ளுக்­கான புத்­த­கங்­கள். கண்­ணைக் கவ­ரும் வண்­ணத்­தில் அச்­சி­டப்­பட்­டி­ருந்­தன. அவற்­றில் இரண்டு புத்­த­கங்­களை எடுத்­துக்­கொண்டு விலை எவ்­வ­ளவு என்று கேட்க அவன் ஒரு புத்­த­கம் ஐம்­பது ரூபாய் இரண்­டும் நூறு ருபாய் என்று கூறி­னான்.

என் மனைவி என்­னைப் பார்க்க நான் அவ­ரைப் பார்த்­தேன். அவ­ரின் பார்­வைக்குப் பணம் கொடுங்­கள் என்று பொருள்.

என் பார்­வைக்கு இந்­தப் புத்­த­கங்­கள் நமக்கு எதற்கு என்று பொருள்.

நான் சட்­டைப்­பை­யில் கையை­விட, என் பார்­வை­யைப் புரிந்­து­கொண்ட என் மனை­வியோ, "என் தம்பி மக­ளுக்­காக வாங்­கி­னேன்," என்று கூறி­னார்.

நான் சட்­டைப்­பை­யி­லி­ருந்து ஐநூறு ரூபாயை எடுத்து அவ­னி­டம் நீட்­டி­ய­ப­டியே, "என்ன படிக்­கி­றாய்?" என்று பேச்­சுக் கொடுத்­தேன்.

ஐந்­தா­வது படிக்­கி­றேன் என்று கூறிய அவன், "என்­னி­டம் சில்­லறை இல்லை, நூறு ரூபாய் இல்­லையா?" என்று கேட்­டான்.

நான் காதில் வாங்­கா­த­வாறு, "பள்ளி மாண­வ­னான நீ படிக்­கா­மல் ஏன் புத்­த­கம் விற்­கி­றாய்?" என்று கேட்­டேன்.

"சார், இந்த வண்டி போன­தும் அடுத்த வண்டி வர ஒரு மணி நேரம் ஆகும். அது­வ­ரைக்­கும் அதோ அங்க என் அம்மா இருக்­காங்க, அங்க போய் படிப்­பேன் சார்," என்று அவ­ச­ர­மா­கக் கூறி­னான்.

"உனக்கு அப்பா இல்­லையா?"

"நான் சின்ன குழந்­தையா இருந்­த­போது இறந்­திட்­டா­ராம் சார்!" இம்­முறை பணத்­தைக் கொடுக்­கா­மல் என் வர­லாறு உனக்கு எதற்கு என்­ப­து­போல இருந்­தது அவ­னு­டைய குரல்.

நான் மீண்­டும் சட்­டைப்­பைக்­குள் தேடி­ய­போது அறு­பது ரூபாய்­கள் மட்­டுமே இருந்­தன. "பர­வா­யில்லை மீதம் உள்ள நானூறு ரூபாயை நீ உன் படிப்­புச் செல­வுக்கு வைத்­துக்­கொள்," என்று கூறி­னேன்.

"சார்! எங்­கம்மா, யார் கிட்­டே­யும் இல­வ­ச­மா­கப் பணம் வாங்­கக் கூடா­துன்னு சொல்­லி­யி­ருக்கு சார்.." அவ­னு­டைய குர­லின் டெசி­பெல் முன்­பை­வி­டச் சற்­றுக் கூடி­யி­ருந்­தது.

நாங்­கள் வாங்­கிய இரண்டு புத்­த­கங்­க­ளை­யும் என் மனை­வி­யி­டம் கொடுத்­து­விட்டு அவ­ச­ர­மாக இறங்­கிச் சென்­றான்.

அப்­போது விசில் சத்­த­மும் தொடர்­வண்டி புறப்­ப­டு­வ­தற்­கான ஒலி­யும் கேட்­டன. நான் வண்­டி­யிலி­ருந்து இறங்கி அவ­னு­டைய அம்­மா­வி­டம் பணத்­தைக் கொடுத்­து­வி­ட­லாம் என்று எண்ணி அவரை நெருங்­கி­ய­போது, சற்­று­முன் பூ விற்­ற­வர்­கள் அவ­ரி­ட­மி­ருந்து பூப்­பந்­து­க­ளை வாங்­கிக்­கொண்டு அவ­ச­ர­மாக ஓடிக்­கொண்­டி­ருந்­த­னர்.

அதற்­குள் தொடர்­வண்டி நக­ரத் தொடங்­கி­யது. நான் ஓடி வந்து பெட்­டி­யில் ஏறிக்­கொண்­டேன். தொடர்­வண்டி மெல்ல நக­ரத் தொடங்­கி­யது.

நானும் என் மனை­வி­யும் நாங்­கள் பய­ணம் செய்த பெட்­டி­யின் வாசல் பகு­தி­யில் நின்­று­கொண்­டி­ருந்­தோம். கூட்­டத்­தில் அவ­னைக் கண்­கள் தேடின. எங்­க­ளைப் பதற்­றம் தொற்­றிக்­கொண்­டது. திடீ­ரென கூட்­டத்­தி­லி­ருந்து வெளிப்­பட்ட அவன் முக­மெல்­லாம் வியர்த்­தி­ருந்­தது.

நானூறு ரூபாயை என்­னி­டம் நீட்­டி­ய­ப­டியே தொடர்­வண்­டி­யின் வேகத்­திற்கு ஈடு­கொ­டுத்­த­படி ஓடி வந்­து­கொண்­டி­ருந்­தான்.

"எங்க போன இவ்­வ­ளவு நேரம்?"

ஐநூறு ரூபா­யைக் கொடுத்­த­படியே பின்­னால் திரும்­பிப் பார்த்­தேன். என் மனைவி இருக்­கைக்­குத் திரும்­பி­யி­ருந்­தார். அதை வாங்­கிக்­கொண்ட அவன், "இந்­தாங்க சார் பாக்கி," என்று நீட்­டி­ய­ப­டியே ஓடி வந்­து­கொண்­டி­ருந்­தான். தொடர்­வண்டி இப்­போது வேக­மெ­டுக்க ஆரம்­பித்­தது.

அந்­தத் தொடர்­வண்­டி­யின் வேகத்­திற்கு அவ­னால் ஈடு­கொ­டுக்க முடி­யா­மல் நின்­று­விட்­டான். ஆனால், என்­னையே பார்த்­துக்­கொண்­டி­ருந்­தான். அவன் முகத்­தில் மகிழ்ச்சி இல்லை. ஆனால், நான் மகிழ்ச்­சி­யு­டன் இருக்­கைக்­குத் திரும்­பி­னேன். நான் செய்ய நினைத்­த­தைச் செய்­து­விட்­டேன் என்ற ஒரு பெருமை உணர்வு சற்­றுத் தலைத் தூக்­கத்­தான் செய்­தது.

மேலும், என் செயலை என் மனைவி பாராட்­டு­வார் என்று எதிர்­பார்த்­தேன். ஆனால், அவ­ரு­டைய முகம் சற்று வாடி இருந்­தது.

"நானூறு ரூபாயை வாங்­கா­மல் வந்­து­விட்­டேன்," என்று பெரு­மை­யு­டன் கூறி­னேன்.

"நம்­மால் முடிந்­த­ளவு பிற­ருக்­குத் தான­தர்­மம் செய்­வ­தில் தவ­றில்லை. ஆனால், யாரி­ட­மும் கையேந்­தா­மல் உழைத்து வாழ வேண்­டும் என்ற கொள்­கை­யு­டன் வளர்ந்து வரும் ஒரு நல்ல சிறுவனுக்­குத் தவ­றான பாதை­யைக் காட்டி­விட்­டீர்­கள்!" என்று கூறி­னார்.

"...."

சக ­ப­ய­ணி­கள் என் மனை­வி­யி­டம் "சார் செய்­தது சரி­தான்!" என்­றும் 'இல்லை!' என்­றும் கோபி­நாத் இல்­லாத ஒரு சிறிய நீயா நானா நடத்­திக்­கொண்­டி­ருந்­த­னர்.

நான் மௌன­மாக இருக்­கை­யில் அமர்ந்­தேன். மீண்­டும் புத்­த­கத்தை எடுத்து அடை­யா­ளம் வைத்த பகு­தி­யைத் திருப்­பி­னேன்.

கண்­கள் மட்­டுமே புத்­த­கத்­தைப் பார்த்­துக்­கொண்­டி­ருந்­தன. நான் செய்த உத­விக்கு இப்­படி ஒரு பின்­வி­ளைவு இருக்­கும் என்று நான் நினைத்­துப் பார்க்­க­வில்லை.

என் இரக்­கக் குணம், நான் சிந்­திப்­பதை தடுத்­து­விட்­டதா? ஒவ்­வொரு செய­லுக்­கும் எதிர்ச் செயல் உண்டு என்­பதை மறந்­து­விட்­டனே! என் மனை­வி­போல் ஏன் நான் சிந்­திக்­க­வில்லை. 'பெண்­புத்தி பின்­புத்தி' என்­பது சரி­தான்.

சற்று நேரத்­திற்­குப் பிறகு 'டீ... டீ' என்ற டீ விற்­ப­வ­ரின் குரல் எங்­களை நோக்கி வந்­தது...

"டீ குடிக்­க­லாமா..." என்­றார் என் மனைவி.

"ம்.... இந்­தாப்பா ரெண்டு டீ கொடு" என்­றார்...

அப்­போது... டீ விற்­ப­வ­ரின் கைத்­தொ­லை­பேசி ஒலித்­தது.

அவர் தொலை­பே­சி­யில் பேசி­ய­படியே எங்­க­ளுக்கு டீ ஊற்­றிக் கொடுத்­துக்­கொண்­டி­ருந்­தார்..

"ஆமா! அந்­தப் பெட்­டி­யில்­தான் இருக்­கேன் சொல்லு..."

"சந்­தன கலர் சட்டை கோல்டு பிரேம் கண்­ணாடி... ஆமா இருக்­காரு," என்று என்­னைப் பார்த்­துக்­கொண்டே பேசிக்­கொண்­டி­ருந்­த­வன்... "சரிடா கொடுத்­து­டு­றேன்".

கைத்­தொ­லை­பே­சி­யில் பேசி முடித்­து­விட்டு, "சார் நீங்க புத்­த­கம் வாங்­கிட்டு ஐநூறு ரூபாய்க்­குப் பாக்கி வாங்­காம வந்­துட்­டிங்­க­ளாம்..இந்­தாங்க சார் பாக்கி நானூறு ரூபாய்", என்று என்­னி­டம் நீட்­டி­னான். அந்­தப் பைய­னோட பெயர் என்­னப்பா?

'கோடீஸ்­வ­ரன்'.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!