காந்தியும் டயட்டிங்கும்

சிறுகதை

சிவகுமார் கே.பி.

"ஏய், என்­கிட்­டயே எப்­ப­வும் வந்து தொண­தொ­ணன்னு பிடுங்­காதே. உங்க அப்­பாவை பாரு! நல்லா சாப்­புட்­டுட்டு சும்மா அந்த கைப்பேசி­யைப் போட்டு நோண்­டிட்­டி­ருக்­காரு. அவர் கிட்ட போய் கேளு," என்று தன்­னி­டம் பள்­ளிப் பாடத்­தில் ஏதோ உதவி கேட்க வந்த மகள் பிரீத்­தி­யி­டம், எரிந்துவி­ழுந்­தாள் கீர்த்­தனா.

"அப்பா," என்று பிரீத்தி முதல் முறை கூப்­பிட்­டாள்.

சில நொடி­க­ளுக்­குப்­பின், "அப்பா!" என்று இரண்­டா­வது முறை குரலை உயர்த்திக் கூப்­பிட்­டும், குனிந்த தலை நிமி­ரா­மல் அந்த கைப்பே­சி­யின் யூடி­யூப்­பில் வந்த ஏதோ படத்­தைப் பார்த்து தனக்குத்தானே சிரித்­துக் கொண்­டி­ருந்­தான் ராஜேஷ்.

பாவம் பிரீத்தி. இப்­போது என்ன செய்­வது என்று தெரி­யா­மல் தன் அப்­பா­வை­யும் அம்­மா­வை­யும் பரி­தா­ப­மாக மாறி­மாறிப் பார்த்­தாள்.

தன் வேலை­யின் நடுவே, பிரீத்தி­யின் பரி­தாப நிலையை கவ­னித்த கீர்த்­த­னா­விற்கு, சுள் என்று கோபம் வந்­தது.

"ராஜேஷ்!" என்று அவள் குரலை உயர்த்­தி­ய­தும், சற்று நிமிர்ந்து அவர்­க­ளைப் பார்த்த ராஜே­ஷிற்கு அப்­போது அங்கே மூன்­றாம் உல­கப் போரின் முதல் குண்டு வெடிக்­கப் போகிறது என்­பது மட்­டும் நன்­றாகப் புரிந்­து­விட்­டது. உடனே அந்த கைப்பே­சியை அணைத்­து­விட்டு, பிரீத்­தி­யின் அறைக்­குச் சென்­றான்.

பிரீத்­தி­யின் அறை­யில் தரை முழுக்க பரப்­பி­யி­ருந்த பாடப் புத்­த­கங்­க­ளைப் பார்த்­த­தும், 'பத்து வயசு பெண்­ணுக்கு இவ்­வ­ளவு படிப்பா' என்று ராஜே­ஷிற்குக் கண்ணைக் கட்­டி­யது.

"அப்பா, எனக்கு பாடத்­துல ஒரு கட்­டுரை படிச்சு பதில் எழு­த­ணும். இங்க என் பக்­கத்­துல வந்து உட்­கா­ருங்க," என்று அவ­னைப் பார்த்­துச் சொல்­லி­விட்டு, சட்­டென்று தரை­யில் உட்­கார்ந்­தாள் பிரீத்தி.

கொஞ்­சம் பரு­ம­னான உடல்­வாகு கொண்ட ராஜே­ஷிற்கு காலை மடித்து தரை­யில் உட்­கா­ரு­வது பெரும்பாடாக இருந்­தது. அது­வும் இரவு சாப்­பாட்­டிற்­குப் பின் உட்­கா­ர்­வது என்­பது மேலும் கொடு­மை­யாக இருந்­தது.

ஆனால், உல­கப்­போ­ரின் குண்டு சத்­தத்­தை­விட, இதைத் தாங்­கிக்­கொள்­வது எவ்வளவோ மேல் என்று சற்று பெரு­மூச்சு விட்­டுக்­கொண்டே காலை மடித்து தரை­யில் உட்­கார்ந்­தான்.

"அப்பா, காந்­தி­ய­டி­கள் பற்றி ஒரு கட்­டுரை. அதுல அவர் சாகும் வரை உண்­ணா­வி­ர­தம் இருந்­தார்ன்னு எழுதி­யி­ருக்கு. அப்­ப­டினா என்­னப்பா?" என்று கேட்க, அவன் அப்­போது இருந்த ஏப்­பம் விடும் நிலைக்கு முர­ணான ஒரு சந்­தே­கத்தை அவள் எழுப்­பி­னாள்.

நாளுக்கு நாலு வேளை உண்­ணும் ராஜே­ஷி­டம் பிரீத்தி இந்­தக் கேள்­வியைக் கேட்­ட­தும், "அது ஒன்னும் இல்ல. அவ­ருக்கு ஆங்­கி­லே­யர்­கள் மேல இருந்த கோபத்தை வெளிப்­ப­டுத்த, அவர் இப்­படி அடிக்­கடி எது­வும் சாப்­பி­டாம போராட்­டம் பண்­ணி­னாரு," என்று சுருக்­க­மாக பதில் அளித்­தான்.

"நான் சாப்­பி­டாம அடம் பிடிச்சா அம்மா திட்­டு­றாங்க? அவர் அடம்­பி­டிச்சா அதைக் கட்­டு­ரையா எழு­திப் படிக்­கச் சொல்­றாங்க!!" என்று வெகு­ளித்­த­னத்­தோடு அவள் கேட்ட கேள்­விக்கு என்ன பதில் சொல்­ல­லாம் என்று ராஜேஷ் யோசித்­தான்.

"உம்ம்..., ஒருவேளை அவர் ஒல்­லி­யாகணும் நினைச்சு அப்­படி அடிக்­கடி 'டயட்­டிங்' இருந்­தார்னு நினைக்­கி­றேன்," என்று அவன் நகைச்சுவையாக சொன்ன பதி­லுக்கு, அப்பாவும் பெண்ணும் சேர்ந்து சிரித்துக்கொண்­ட­னர். அவர்­கள் பேச்சை வெளியே கேட்­டுக்­கொண்­டி­ருந்த கீர்த்­த­னா­விற்கு, அவள் தோழி அனுப்­பிய ஒரு வாட்­ஸ்அப் செய்திதான் அப்­போது நினை­வுக்கு வந்­தது.

அன்று இரவு படுக்கப் போகும்முன், "ராஜேஷ்" என்று ஆசையாக அவனைப் பார்த்தாள் கீர்த்தனா.

"ஏய், கீர்த்தி! இப்படிப் பார்க்கற? என்ன?" என்று கண்ணை சிமிட்டிக்கொண்டு ஆசையோடு அருகே வந்த ராஜேஷிடம் "உம்..., விஷயமோ விசேஷமோ எதுவும் இல்லை," என்று கறாராகப் பதிலளித்தாள்.

"ஏய், ஆசையா ஏதோ சொல்லுவேன்னு பார்த்தா?" என்று ஆதங்கத்தோடு கேட்ட ராஜேஷிற்கு, அன்று இரவு எதுவும் விசேஷம் இல்லை என்று தெரிந்ததும், அவனுக்கு கொட்டாவி வந்து சற்று சாய்ந்தான்.

படுக்கையின் தலையணையில் சாய்ந்தவனுக்கு தூக்கம் கண்களைச் சொக்கியது

"என் தோழி உமா இருக்காளே...அவதான் எனக்குச் சொன்னா," என்று ஆரம்பித்த கீர்த்தனாவை குறுக்கிட்டான் ராஜேஷ்.

"இதுக்கெல்லாம் ஏண்டி அந்த உமாவை உள்ள இழுக்கிற? சரி, என்ன தூபம் போட்டா. சீக்கிரம் சொல்லு," என்றான்.

"அந்த உமா வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி படிச்சாளாம். என்ன தெரியுமா? அஞ்சு நாள் டயட்டிங் செய்து அஞ்சு கிலோ குறைவது எப்படின்னு?" என்று கீர்த்தனா ஆர்வத்தோடு சொன்னாள்.

"நல்லதுதான். அந்த உமாவிற்கு இது கண்டிப்பா தேவை. அப்படி அஞ்சு நாளுல குறையாட்டி, அவளை இன்னும் அஞ்சு நாள் இருக்கச் சொல்லு," என்று கொஞ்சம் குதர்க்கத்தோடு சொன்னவனிடம் "சார், இந்த செய்தி உங்களுக்கு!" என்று கீர்த்தனா சொன்னதும் ராஜேஷிற்கு நெஞ்சே வெடித்துவிடும் போலிருந்தது.

" கலியாணம் ஆகும்போது உங்க இடுப்பு சைஸ் 28. இப்போ 38!!. இதுக்கு என்ன காரணம்?" என்று கீர்த்தனா கோபத்தில் கேட்க, "என் செல்லமே! இது பெரிய சிதம்பர ரகசியமா? உன் சமையலின் கைப் பக்குவம்தான் காரணம்," என்று அவன் சொன்ன பதில் அங்கே எடுபடவில்லை.

அடுத்த ஐந்து நாளைக்கு அவன் என்ன சாப்­பிட வேண்­டும் என்ன சாப்­பிடக் கூடாது என்று கீர்த்­தனா அந்த வாட்ஸ்­அப்­பில் வந்த செய்­தியைப் படித்­தாள். அதை முழு­வ­தும் கேட்ட ராஜேஷ், அன்று இரவு சாப்­பிட்ட வற்றல் ­கு­ழம்­பையும் உருளை பொரி­ய­லை­யும் கடை­சி­யாக ஒரு­முறை நினைக்க, அவன் விரல்­கள் அவன் மூக்­க­ருகே சென்­றன.

டயட்­டிங் - முதல் நாள் காலை.

ஆபீஸ் செல்­வ­தற்குமுன் சாப்­பிட உட்­கார்ந்­த­வ­னுக்கு, இரண்டு கோதுமை ரொட்­டி­யும், சூப் என்ற பெய­ரில் காய்­கறி வேக­வைத்த நீரும் ஒரு கிண்­ணத்­தில் இருந்­தன. மேசையில் அதைப் பார்த்த அவன் மகள் பிரீத்தி, "அப்பா!!! உங்­க­ளுக்குக் காய்ச்­சலா?" என்று கேட்­ட­தும், ராஜேஷுக்கு அழு­கையே வந்­தது.

"கீர்த்­தனா சூப் கிண்­ணம் ஏன் இவ்­வ­ள­வுக்கு குட்­டியா இருக்கு?" என்று கேட்­ட­வ­னி­டம், "உடம்பு பெரி­சா­யி­ருந்தா எல்­லாமே குட்­டி­யாத்­தான் தெரி­யும்," என்று வந்த பதி­லுக்கு, குழந்தை பிரீத்தி சிரித்­தாள்.

"ராஜேஷ், இந்தா லஞ்ச் டப்பா" என்று கீர்த்­தனா மேசை மேல் வைத்­த­போது, அதைத் தூக்­கிப் பார்த்­தான் ராஜேஷ்.

"என்ன செல்­லம்? காலி டப்பா மாதிரி இருக்கு!!" என்று கேட்­ட­வனி­டம், "சே சே நான் உங்­க­ளைப் பட்­டினி போடு­வேனா? அதுல சாப்­பிட ஒரு கோதுமை ரொட்டி இருக்கு," என்­றாள்.

"ஒரு கோதுமை ரொட்டிதானா!! இப்போ காலை­யில இரண்டு இருந்­துந்­துச்சு," என்று கேட்­ட­வ­னி­டம்.

"ஆமாம். படிப்­ப­டியா குறை­யும். காலை­யில இரண்டு, மதி­யம் ஒன்று, அப்­பு­றம் இரவு..." என்று கீர்த்­தனா சொல்­வ­தற்­கு­முன், பிரீத்தி "ஒன்னு­மில்லை," என்று சொல்லி குட்டை உடைத்­து­விட்­டாள்.

"என் செல்­லம்," என்று பிரீத்­தி­யின் கன்­னத்­தைக் கிள்­ளி­ய­வாறு ராஜேஷை பார்த்து, "ராஜேஷ், லஞ்­சுக்கு அப்­பு­றம் பசி எடுக்­கும்னு உமா சொன்னா. அத­னால ஒரு நாலு மணி­வாக்­குல பசிச்சா சாப்­பிட நாலு பாதம் பருப்­பும், இரண்டு முந்­திரி பருப்­பும் இருக்கு," என்று ஏதோ கல்­யாண விருந்து வைத்­ததுபோல் கீர்த்­தனா சொன்­னாள்.

"ஏய், இப்­படி சாப்­பிட்டா கண்­டிப்பா நாலு மணிக்கு பசி­யெ­டுக்­கும். இத அந்த உமா சொல்லித் தான் தெரி­ய­ணுமா?" என்று அந்த உமாவை கரித்­துக்­கொண்டே முதல் நாளைத் தொடங்­கி­னான்.

அன்று நாள் முடிந்து ஆபி­சி­லி­ருந்து வீட்­டிற்­குள் காலடி எடுத்­து­வைத்­த­தும், முத­லில் சாப்­பாடு மேசை­யைத்­தான் பார்த்­தான்.

"அம்மா, அப்பா வந்­தாச்சு, சீக்­கி­ரம் ரெடி பண்­ணுங்க," என்று பிரீத்தி சொன்­ன­போது அடுக்­க­ளை­யி­லி­ருந்து வந்த அந்த உரு­ளைக்­கி­ழங்­கின் வாசம் அவன் மூக்­கைத் துளைத்து அவன் வாயில் உமிழ்­நீர் சுரக்­கச்­செய்­தது.

சட்­டு­புட்டு என்று உடை மாற்றி சாப்­பிட உட்­கார்ந்­த­வன், மேசை மீது இருந்த பாத்­தி­ரத்தை ஆவ­லாக திறந்­தான்.

"உருளை சூப்" என்று அவன் கேள்­விக்கு காத்­தி­ரா­மல் உள்­ளி­ருந்து கீர்த்­த­னா­வின் குரல் வந்­தது.

"பர­வா­யில்­லையே, ஏதோ புதுசா இருக்கு! சரி சூப் சாப்­பிட்டா நல்லா பசி­யெ­டுக்­கும்," என்று ஒரே மூச்­சில் அதைக் குடித்­து­விட்டு, மேசை­யின் அவன் எதிரே உட்­கார்ந்­தி­ருந்த பிரீத்­தி­யைப் பார்த்­தான்.

"அப்பா, இப்போ என்­னோட கொஞ்­சம் விளை­யா­ட­றீங்­க­ளாப்பா?" என்று கேட்­ட­வ­ளி­டம், "இரும்மா செல்­லம். அப்பா இப்­போ­தான் சூப் குடிச்­சேன். சாப்­பாட்­டுக்கு அப்­பு­றம் வரேன்," என்று சொன்­ன­வனைப் பார்த்து பிரீத்தி சிரித்­தாள்.

உள்­ளி­ருந்து கைப்பே­சி­யும் கையு­மாக வந்த கீர்த்­தனா, "ஆமாம் உமா, இன்­னிக்கி முதல் நாள் எல்­லாம் கரெக்டா முடிஞ்­சுது. "ராஜேஷ் இப்போ டின்­னர் கூட முடிச்­சிட்­டாரு. நீ சொன்ன மாதிரி உருளை சூப் மட்­டும்­தான்," என்று அவள் பேச பேச ராஜே­ஷிற்கு தலை­சுற்­றி­யது.

"சரி உமா, நாளைக்கு பேசு­வோம். நீ சொன்ன மாதிரி இன்­னும் ஒரு மணி நேரத்­துல அளவு பார்த்து வைக்­கி­றேன்," என்று பேசி­முடித்து­விட்டு கீர்த்­தனா ராஜேஷை பார்த்­தாள்.

"ரொம்ப சோர்ந்து இருக்­கியே ராஜேஷ். ஆனா உமா சொன்னா, முதல் நாள் இப்­படித்தான் இருக்­கு­மாம். அப்­பு­றம் அதுவே பழ­கிப்­போ­யி­டு­மாம்!" என்று அவள் சொன்­ன­போது அவ­னுக்கு அந்த உமாவைக் கரும்­புள்ளி செம்­புள்ளி குத்தி அடித்­துத் துரத்த வேண்­டும் போலி­ருந்­தது.

அடுத்த ஒரு மணி நேரத்­தில் அவன் இடுப்­பின் அளவை எடுத்த கீர்த்­தனா, "சே, என்ன ராஜேஷ்!!. இன்­னும் 38 அங்­கு­லம்தான் காமிக்­குது," என்று சொன்­ன­தும், "நீ முதல்ல, அந்த உமா இடுப்­ப­ளவை செக் பண்ணு. அவ­ளோ­ட­தை­விட எனக்கு கம்மிதான்," என்று அவன் எரிந்து விழுந்­தான்.

இடுப்­ப­ளவு குறை­யா­த­தால், அடுத்த நாள் அவன் சாப்­பாட்­டில் எந்த மாற்­ற­மும் இல்லை.

இரவு வீடு திரும்­பி­ய­வ­னுக்கு, 'கீரை சூப்' மேசைமீது காத்­துக்­கொண்­டி­ருந்­தது.

கிடைத்தவரை லாபம் என்று அதைக் குடித்­து­விட்டு குழந்தை பிரீத்­தி­யின் தட்டைப் பார்த்­தான்.

அவள் தட்­டில் இருந்த நான்கு பூரி­யும் கிழங்­கும் அவன் கண்­ணைப் பறித்­தன.

"பிரீத்தி, நாலு பூரி­யெல்­லாம் சின்ன பசங்க சாப்­பி­டக்கூடாது. அப்­பு­றம் நீயும் அப்பா மாதிரி குண்­டா­யி­டுவ. எனக்கு ரெண்டு பூரி தாயேன்," என்று அவன் கேட்­ட­தும், "அம்மா, அம்மா" என்று ஏதோ திரு­டன் சுவர் தாண்­டி­ய­தும் கத்­தும் மணிபோல் பிரீத்தி கத்­தி­னாள்.

"ராஜேஷ், போயும் போயும் குழந்தை தட்­டி­லியா கைவைப்ப. சே!!" என்று சொல்­லிக்­கொண்டே இடுப்பு அளவு எடுக்­கும் டேப், மற்­றும் எடை இயந்­தி­ர­மும் கையு­மாக கீர்த்­தனா வந்­தாள்.

முத­லில் இடுப்பு அளவு பார்த்­தாள். பின் எடை அளவு பார்த்­தாள். ராஜேஷ் ஏதோ பெரிய மருத்­துவ ரிசல்ட் வரு­வ­தற்­காக காத்­தி­ருந்­த­வன்போல் கீர்த்­த­னாவை பார்த்­தான்.

"உம்ம்... ஒரு அரை அங்­கு­லம் அப்­பு­றம் ஒரு கிலோ குறைஞ்­சி­ருக்கு. கண்­டிப்பா இந்த வாரம் முழுக்க டயட்­டிங் இருக்­க­ணும்," என்று ஏதோ மருத்­து­வ­மனை பெரிய டாக்­ட­ரி­டம் கலந்­தா­லோ­சிக்­கப் போவ­து­போல், அந்த உமா­வி­டம் பேசச் சென்­றாள்.

முதல் இரண்டு நாள்­க­ளின் வெற்­றிக்­குப்பின், மூன்­றா­வது நாளும் கோதுமை ரொட்டி, கேரட் சூப், பாதாம், முந்­திரி என்று பல­வகை அறு­சுவை பல­கா­ரங்­க­ளோடு அந்த நாளும் வெற்­றி­க­ர­மாக முடிந்­தது.

அன்று இரவு மீண்­டும் ராஜே­ஷின் இடுப்பு அளவை எடுத்து பார்த்த கீர்த்­த­னா­விற்கு, நல்ல முன்­னேற்­றம் தென்­பட்­டது. ஆமாம், அதே அரை அங்­குலம் குறை­வு­தான்.

"ராஜேஷ், பார்த்­தியா!! மூணு நாளுல ஒரு அங்­கு­லம் குறைஞ்­சிட்ட," என்று சொல்லி, ஏதோ மனக்­க­ணக்கு போட்டு பார்த்­து­விட்டு "யோசிச்சு பாரேன், இந்த அஞ்சு நாளைக்கு பதிலா இப்­ப­டியே ஒரு மாசம் - முப்­பது நாள் டயட்­டிங் இருந்தா, என்ன ஆகும்?" என்று கீர்த்­தனா கேட்க, "...ம் முப்­ப­தா­வது நாள் முடி­யும்­போது எனக்கு சங்கு ஊத வேண்­டி­யதுதான்" என்று கடுப்­போடு பதி­ல­ளித்­தான்.

"சே!!! நான் எவ்­வ­ளவு சந்­தோ­ஷமா இருக்­கேன். அப­ச­கு­னமா பேசற!!" என்று அவனைத் திட்­டி­விட்டு கீர்த்­தனா தூங்­கி­விட்­டாள்.

ஆனால் அன்று இரவு ராஜே­ஷிற்குத் தூக்­கம் சீராக இல்லை.

வானில் ஏதோ ஹெலி­காப்­டர்­கள் பறக்­கும் சத்­தம் அவ­னுக்கு கேட்­டது. அப்­படி பறந்த ஹெலி­காப்­டர்­கள், பட்­டி­னி­யால் வாடிய மக்­க­ளுக்கு உண­வுப் பொட்­ட­லங்­க­ளைக் கீழே எறிந்­தன.

கீழே விழுந்த உணவுப் பொட்­ட­லங்­களை எடுக்க மக்­க­ளி­டையே அடி­தடி நடந்­தது. அந்த அடி­த­டி­யில் ராஜே­ஷும் தன் முகத்­தைப் பார்த்­தான்.

'இது என்­னோ­டது... எனக்குப் பசி பசி.. இது எனக்­கு­தான்' என்று கூச்­ச­லிட்­டுக்­கொண்டே ராஜேஷ் தன் கால்­களை உதைத்து, தன் கையை நீட்டி அந்த உணவுப் பொட்­ட­லத்தை எடுக்க முனைந்தபோது, "ராஜேஷ்!!" என்று கீர்த்­த­னா­வின் குரல் கேட்­பதுபோல் உணர்ந்­தான்.

"ராஜேஷ், எழுந்­திரு! மணி ஏழு. தூக்­கத்­துல கனவு கண்­ட­தெல்­லாம் போதும். இன்­னிக்கி நாலா­வது நாள்.

"உமா சொன்னா, இன்­னிக்கி நாள் முழுக்க பழங்­கள் தான் சாப்­பி­ட­ணும்," என்ற அவள் அன்­றைய தினம் பற்றி சொன்­ன­போதுதான் அது கனவு என்று அவ­னுக்கு தெரிந்­தது.

'ஆகா..., கனவா! நல்­ல­வேளை. ஆனா இப்­ப­டியே டயட்­டிங் இருந்து உடம்பு குறைக்க முயற்சி பண்­ணினா உண்­மை­யி­லேயே ஹெலி­காப்­டர் கீழ ஓட வேண்­டி­ய­து­தான்' என்று அவன் மன­த்தில் அந்த உமாவை நினைத்­துத் திட்­டி­ய­போது, வாச­லில் உமா­வின் பேச்­சுக்­கு­ரல் கேட்­டது.

'நான் இருக்­கேனா போயிட்­டே­னான்னு பார்க்க வந்­தி­ருக்­கா­போல!!. படு­பாவி' என்று மனத்­தில் அவ­ளைத் திட்­டி­ய­வாறு வெளியே வந்­த­வனை "ஹை ராஜேஷ்! உங்க டயட்­டிங் பற்றிதான் பேசிட்­டி­ருந்­தோம். அந்த வாட்ஸ்­அப்­பில் வந்த மாதிரி நீங்க எல்லா நாளும் கடைப்­பி­டிக்­க­றீங்­கன்னு கேள்­விப்­பட்­டேன். வெரி குட்," என்று சொல்­லி­விட்டு கீர்த்­த­னாவைப் பார்த்­தாள்.

"சரி கீர்த்­தனா, நான் கிளம்­ப­றேன். நீ சொன்ன மாதிரி நல்ல முன்­னேற்­றம் தெரிஞ்சா, ராஜேஷ் தான் எனக்கு முன்­னோடி. அவ­ருக்குக் குறைஞ்­சு­டுச்­சுனா, நானும் இந்த டயட்­டிங் இருப்­பேன்," என்று சொல்­லி­விட்­டுக் கிளம்­பி­ய­போது 'பாதகி! என்ன வெச்சா இவ ஆராய்ச்சி பண்­ணறா!" என்று ராஜே­ஷிற்குத் தலையே சுற்­றி­யது.

அப்­போது மீண்­டும் தன் பாடப்­புத்­த­கத்­தோடு அங்கே வந்­தாள் பிரீத்தி, "அப்பா நேத்து காந்­தி­யடி­கள் பற்றி இன்­னொரு பாடம் படிச்­சோம். என்ன தெரி­யுமா?"

"இப்போ என்­னமா? அவர் நாள்­மு­ழுக்க சாத்­துக்­குடிச் சாருதான் குடிச்­சா­ருனு சொல்­லப்­போற! நானும் இன்­னிக்கி நாள்­மு­ழுக்க அதுதான் குடிக்­க­ணும்னு உங்க அம்மா சொல்­லப்­போற. வேற என்ன?" என்று சொன்­ன­வனை "இல்லப்பா" என்று மறுத்­தாள் பிரீத்தி.

"அவர் உப்பு எடுப்­ப­தற்­காக தண்டி நடைப்­ப­ணம் போனா­ராம்.. அதற்­காக தினம் பத்து கிலோ­மீட்­டர் மேல நடந்து, நானூறு கிலோ­மீட்­டர் 'தண்டி' நடைப்­ப­ய­ணம் போனா­ராம்.

"அப்­பு­றம், ஆட்­டுப் பாலும், வேர்க்­க­ட­லை­யும் சாப்­பிட்டு, உடற்­ப­யிற்சி செய்­வா­ராம்.

அப்­படி டயட்­டிங் பண்­ணித்­தான் ஒல்­லியா இருந்­தா­ருனு நான் நினைக்­கி­றன். உண்­ணா­வி­ர­தம் இருந்து டயட்­டிங் பண்­ணல.." என்ற அவள் சொன்­ன­போது ராஜேஷ், கீர்த்­த­னாவைப் பார்த்­தான்.

"கீர்த்­தனா, அந்த பாதகி உமா கண்ட கண்ட குப்­பையை வாட்ஸ்­அப்­பில் படிச்­சுட்டு, என்ன வெச்சு ஆராய்ச்சி பண்­ணறா! நீ அதெல்­லாம் நம்­பாதே. நானே இப்போ ஒரு முடி­வுக்கு வந்­துட்­டேன்.

தினம் ஒரு அஞ்சு கிலோ­மீட்­டர் நடந்து, அள­வோ­டை­யும், ஆரோக்கியமாகவும் சாப்­பி­டப்­போ­றேன்," என்று தனக்கு பாடம் புகட்­டிய அவன் மகள் பிரீத்­தி­யைச் செல்­ல­மாக அணைத்­தான்.

காந்­தி­ய­டி­கள் சொன்ன பல நல்­ல­ன­வற்­றை­யெல்­லாம் நாம் மறந்­து­விட்­டோம். ஆனால் அவர் கடைப்­பி­டித்த ஆரோக்­கி­ய­மாக வாழ்க்கை முறையை, 'டயட்­டிங்' என்று அடுத்த தலை­முறை வித்­தி­யா­ச­மாகப் பார்ப்­பது கண்டு, ராஜே­ஷும் கீர்த்­த­னா­வும் இப்­போது பிரீத்­தி­யின் கன்­னத்­தைக் கிள்­ளி­னர்.

பாடப்­புத்­த­கத்­தி­லி­ருந்த காந்தி, தன் பொக்­கை­வா­யைக் காட்டி சிரித்­துக் கொண்­டி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!