நல்லது செய்யும் அனைவருமேகிறிஸ்துமஸ் தாத்தாக்களே!

நல்லது செய்யும் அனைவருமேகிறிஸ்துமஸ் தாத்தாக்களே!

2 mins read
1e9a0bb0-63d3-4356-a652-541c65104f01
கிறிஸ்துமஸ் தாத்தாவுடன் சிறுவர்கள். - ஜனார்த்தனன்
Google News Preferred Icon

உலகத்தில் மற்றவர்களுக்கு நல்ல மனத்துடன் உதவி செய்யும் அனைவருமே சாந்தா கிளாஸ் என்று அன்பாக அழைக்கப்படும் கிறிஸ்துமஸ் தாத்தாக்கள்தான் என்கிறார் எஸ்.ராஜ்குமார்.

துணைப்பாட வகுப்பாசிரியராகவும் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றும்

எஸ். ராஜ்குமார், மாணவர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டி அன்புடன் திருத்துவார்.

சிறுவர்களை மகிழ்விக்க சாந்தா கிளாஸ் வேடம் இடும் திரு ராஜ், 27, ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ஆவலுடன் காத்திருப்பார்.

நல்ல பிள்ளைகளின் வீடுகளுக்குப் பரிசுப்பொருள்களுடன் நான் சாந்தா கிளாஸாகச் செல்வது வழக்கம் என்று அவர் கூறினார்.

இன, சமய நல்லிணக்கத்தை வளர்க்கும் அமைப்புகளில் மும்முரமாகத் தொண்டாற்றும் திரு ராஜ், வெவ்வேறு சமய நம்பிக்கைகளைக் கொண்டுள்ள பெரியவர்களுக்கிடையே கலந்துரையாடல்களை ஊக்குவிக்கிறார்.

சாந்தா கிளாஸாக இவர், பிள்ளைகளிடம் இனிமையாகப் பேசுவார். பிள்ளைகளுடன் நட்பு வளர்த்து அவர்களுடன் விளையாடுவார்.

“2023ஆம் ஆண்டு எப்படி கழிந்தது எனக் கேட்பேன். நல்ல குடிமக்களாக இருந்து, சமூகத்திற்கு நல்லவற்றைச் செய்து பிறருக்கு அன்பு காட்டவேண்டும் என்று முக்கியமாகச் சொல்லுவேன்,” என்றார்.

பிள்ளைகளுக்குப் பலவிதமான பரிசுப் பொருள்களை வழங்கும் திரு ராஜ், புத்தகங்களையும் ஊக்கம் தரும் கடிதங்களையும் தருவதையே விரும்புவதாகக் கூறினார்.

சாந்தா கிளாஸுக்குத் தேவையான பண்புகள் என்ன என்பதையும் திரு ராஜ் பகிர்ந்தார். “சாண்டா என்பவர், கருணையுள்ளவர் அன்பையும் நட்பையும் வளர்ப்பவர். மனிதருக்கு மனிதர் பக்கபலமாக இருக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து செயல்படுபவர்,” என்று அவர் கூறினார்.

குடும்பத்தினரிடமும் நண்பர்களிடமிருந்தும் சமுதாயத்தினரிடமும் பெற்ற நன்மைகளை அவர்களுக்குத் திருப்பித் தருவதே சாந்தா கிளாஸாக வேடமிடுவதன் நோக்கம் என்றார்

திரு ராஜ்.

“இந்தக் காலகட்டத்தில் நமக்குக் கிடைத்த நல்லவற்றை நினைத்து நன்றியைத் தெரிவிக்கலாம். அந்த நன்றியைத் தெரிவிக்கும் வகையில் மற்றவர்களுக்கு நன்மை செய்யலாம். அப்படிச் செய்யும் அனைவருமே ‘சாந்தா கிளாஸ்’கள்,” என்று புன்முறுவலுடன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
மாணவர்