தைப்பூசம்: 500,000 பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கும் ஆலயம்

ஈப்போ: கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டதால் இவ்வாண்டு தைப்பூசத் திருநாளுக்கு ஏறக்குறைய 500,000 பக்தர்கள் வருகைபுரிவர் என எதிர்பார்க்கிறது மலேசியாவின் ஈப்போவிலுள்ள கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம்.

அடுத்த மாதம் 5ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று தைப்பூசத் திருநாள் கொண்டாடப்படுகிறது.

இதனையடுத்து, பக்தர்கள் இப்போதே கோவிலுக்கு வரத்தொடங்கிவிட்டதால் இவ்வாண்டு தைப்பூசத் திருநாள் களைகட்டும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபையின் தலைவர் எம்.விவேகானந்தா.

இம்முறை கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், இரு நாள்களுக்கு முன்னரே ரத ஊர்வலத்தைத் தொடங்க கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் முடிவுசெய்துள்ளது என்று அவர் கூறினார். வழக்கமாக, ரத ஊர்வலம் தைப்பூசத்திற்கு முதல்நாள் இடம்பெறும். 

அதன்படி, பிப்ரவரி 3ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பன்டோங் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கும் ரத ஊர்வலம் மறுநாள், அதாவது தைப்பூசத்திற்கு முதல்நாள் பின்னிரவு 1 மணிக்கு கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயத்திற்கு வந்துசேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிட்டத்தட்ட ஆயிரம் பேர் காவடி எடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாண்டு தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கோவில் நிர்வாகம் எவ்விதக் கட்டுப்பாடுகளையும் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளையும் விதிக்கவில்லை என்று ‘மலாய் மெயில்’ செய்தி ஊடகத்திடம் திரு விவேகானந்தா சொன்னார்.

ஆயினும், நாட்டில் இன்னும் கொவிட்-19 பரவல் இருப்பதால் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து வருவது நல்லது என்று அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.

தைப்பூச நாளன்று நண்பகலில் 30,000 பேருக்கு அன்னதானம் வழங்கவும் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.  

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!