இனக் கலவரம்: மலேசியர்கள் பலர் கவலை

மலேசியர்களில் மூன்றில் இரண்டு பங்கினர், தேசிய ஒற்றுமை, பாதுகாப்பு ஆகியவை குறித்து கவலைப்படுகின்றனர். 

அதிலும், குறிப்பாக வன்முறையுடன் கூடிய இனக் கலவரம் அல்லது சிறுபான்மைப் பிரிவுகள் தொடர்பான கலவரம் ஏற்படக்கூடும் என்று அச்சப்படுவதாக 'ஐபிஎஸோஎஸ் மலேசியா' நடத்திய ஆய்வின் முடிவு கூறுகிறது.

இந்த ஆய்வில் பங்கேற்ற 67 விழுக்காட்டினர், இந்த அச்சம் உண்மையானது என நம்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஒப்புநோக்க, உலக அளவில் 60 விழுக்காட்டினரும் பிரிட்டனில் 65 விழுக்காட்டினரும் இதுபோன்ற அச்சம் கொண்டுள்ளதாக அந்த ஆய்வு விளக்கியது.

அதுவும் மலேசியாவில் இந்த அச்சம் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அது தெரிவிக்கிறது. 

இதில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் இனக்கலவரம் ஏற்படக்கூடும் என்ற அச்சம் கொண்டுள்ளவர்களின் எண்ணிக்கை 12 விழுக்காடு கூடியிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. 

இனக்கலவரம் பற்றிய அச்சம் கொண்டுள்ள நாடுகளின் வரிசையில் மலேசியா ஆறாவது நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதில் முதலாம் நிலையில் தென்ஆப்பிரிக்கா (88 விழுக்காடு), துருக்கி (83 விழுக்காடு), இந்தியா (79 விழுக்காடு), அமெரிக்கா (72 விழுக்காடு), கொலம்பியா (69 விழுக்காடு) என மலேசியாவுக்கு முன்னால் முதல் ஐந்து நிலையிலுள்ள நாடுகளையும் ஆய்வு பட்டியலிட்டுள்ளது.

எனினும், அடுத்த 12 மாதங்களில் இதுபோன்ற வன்முறைக் கலவரம் மூண்டால், அரசும் அதன் அமைப்புகளும் பொதுமக்களுக்கு போதுமான பாதுகாப்பை வழங்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாக ஆய்வு கூறுகிறது.

இந்த ஆய்வு செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதிவரை மேற்கொள்ளப்பட்டது. 

இதில் மலேசியாவில் 1,000 பேர் பங்கேற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் 40 விழுக்காட்டினர் மட்டுமே 2020 இலக்கை நாடு எட்டும் என்று கூறும் ஆய்வு, 22 விழுக்காட்டு மலேசியர்களுக்கு 2020 இலக்கு பற்றி தெளிவான புரிதல் இல்லை என்று கூறுகறது.

மலேசியா எதிர்வரும் 2020 ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்க வேண்டும் என்பதே 2020 இலக்கு என்பது இங்கு நினைவுகூரத்தக்கது.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity