உடற்குறையுடைய ஆடவர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து கொள்ளையடித்துவிட்டு தப்பியோட முயன்ற ஆடவரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர். அந்த ஆடவர் போதைப்பொருட்களை உட்கொண்டிருந்ததாக போலிசார் பின்னர் உறுதிப்படுத்தினர்.
தனது காரில் விரைந்து தப்பிச் சென்ற ஆடவரை பொதுமக்கள் பலர் தங்களது இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று பிடித்த, பரபரப்பான இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவியது.
கோலாலம்பூரின் ஜாலான் சங்காட் பகுதியில் நேற்று (டிசம்பர் 13) மாலை 4.50 மணியளவில் சாலைப் போக்குவரத்துத் துறையில் (ஆர்டிடி) பணியாற்றும் அந்த 25 வயது ஆடவர் உடற்குறையுடைய ஒருவரின் பொருளைப் பறித்ததை அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் பலரும் கண்டனர்.
(காணொளியை முழுமையாகக் காண Full Screen Modeக்கு செல்லவும்.)
பின்னர் அங்கிருந்து தப்ப எண்ணி தனது காரில் ஏறி அந்த ஆடவர் சிட்டாய்ப் பறந்தார். ஆனால், அந்தப் பகுதியில் இருந்த பலர் காரின் பின்னால் ஓடிச் சென்றும் தங்களது இரு சக்கர வாகனங்களில் சென்றும் போலிசில் சரணடையுமாறு கோரினர்.
ஆனால், ஜாலான் புடு உட்பட நெரிசல் மிகுந்த சாலைகளில் சென்ற அந்த ஆடவர் அங்கிருந்த வாகனங்களில் குறைந்தபட்சம் ஐந்து வாகனங்களை இடித்துவிட்டு வேகமாக காரை செலுத்தினார்.
அவரைத் துரத்தியவர்களும் சோர்ந்துவிடவில்லை.
இறுதியில் ஜாலான் புருணை உதரா பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அந்த ஆடவரை, விரட்டிச் சென்ற பொதுமக்கள் பிடித்தனர்.
காரிலிருந்து வலுக்கட்டாயமாக அவரை வெளியேற்றி போலிசில் ஒப்படைத்தனர் பொதுமக்கள்.
இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.
டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைமையகத்துக்கு அந்த நபர் விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க, விசாரணைத் துறையின் தலைமை துணை ஆணையர் ஸுல்கிஃப்லி யாயா இன்று தெரிவித்தார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity