தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பான அம்சங்களைத் தமது கைபேசியில் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மலாக்கா அரசு சார்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.சந்துரு, 38, மீதான வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
‘சொஸ்மா’ எனப்படும் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டம் 2012, பிரிவு 13ன் கீழ் வரும் எல்லாக் குற்றங்களும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்பட வேண்டும் என்று துணை அரசாங்க வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஆனால், திரு சந்துரு சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் மெல்வின் டே, தமது கட்சிக்காரர் மீது மலாக்கா அமர்வு நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு விசாரணையில் இருப்பதால் விடுதலைப் புலி விவகாரம் தொடர்பில் அவர் மீது போடப்பட்ட வழக்கும் அந்த நீதிமன்றத்திலேயே விசாரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதி, திரு சந்துரு மீதான வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.
அதேபோல துண்டு உலோக வியாபாரியான 36 வயது ஏ.கலைமுகிலனின் வழக்கையும் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டது செலாயாங் அமர்வு நீதிமன்றம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பிலான இரண்டு பொருட்களை அவர் தன்வசம் வைத்திருந்ததாக கலைமுகிலன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
உடற்குறையுடையவர், பெண்கள் ஆகியோரைக்கொண்ட குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் ஆளாக இருக்கும் கலைமுகிலனுக்கு உடல் நலக்குறைவு இருப்பதாகவும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டு அவரது வழக்கறிஞர் பிணை கோரினார்.
ஆனால், இந்த வழக்கு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதால், கலைமுகிலனுக்கு பிணை அளிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என அமர்வு நீதிமன்ற அரசுத்தரப்பு வழக்கறிஞர் லோ குறிப்பிட்டார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity