கோத்தா பாரு: கிளந்தானில் இரண்டாவது முறையாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 57 வயது ஆடவர் உயிரிழந்தார். சுஹைமி இஸ்மாயில் எனப்படும் அவர் ஜெலி மாவட்டம் புக்கிட் பங்காவில் உள்ள வீட்டில் வசித்து வந்தபோது நேற்றுக் காலை 9 மணியளவில் கம்போங் ரினாக் ஆற்றில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் அந்த வீடு மூழ்கியது.
அதனைத் தொடர்ந்து அந்த ஆடவரின் உடல் காலை 10 மணியளவில் மீட்கப்பட்டதாக ஜெலி தீயணைப்பு, மீட்பு சேவை நிலைய தலைமை அதிகாரி முகம்மது அட்னி இப்ராகிம் கூறினார்.
தமது வீட்டில் 1.5 மீட்டர் உயரத்திற்கு வெள்ள நீர் புகுந்ததால் அங்கிருந்து தப்பிக்க சுஹைமி முயன்றபோது ஆற்றிலிருந்து கடும் சீற்றத்துடன் பாய்ந்தோடிய நீரில் சிக்கி உயிரிழந்ததாக அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், ஜோகூரில் 16 வயது சிறுவன் நீரில் விளையாடிக்கொண்டு இருந்தபோது கால்வாயில் விழுந்து மாண்டதாக அஸ்ட்ரோ அவானி செய்தி தெரிவித்தது. சிம்பாங் ரெங்கம் பகுதியில் சம்பவம் நிகழ்ந்தது. ஜோகூர் மழை, வெள்ளத்தில் நிகழ்ந்த முதல் மரணம் இது.
முகம்மது டேனிஸ் இர்ஃபான் எனப்படும் அச்சிறுவன் 4.2 மீட்டர் ஆழமுள்ள கால்வாய்க்குள் தவறிவிழுந்ததாக ரெங்கம் தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையே, ஜோகூரில் நிலைமை மேம்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் அவர்களின் இல்லம் திரும்ப அதிகாரிகள் உதவினர். மக்கள் வெளியேறிய பின்னர் பல்வேறு முகாம்கள் மூடப்பட்டன. நேற்றுக் காலை வரை 39 முகாம்கள் மூடப்பட்டன.
வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த திங்கட்கிழமை 9,151க்கு அதிகரித்தது. அந்த எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில் 5,651 பேர் ஆனது. அவர்கள் 1,563 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த எண்ணிக்கை நேற்றுக் காலை மேலும் குறைந்து 5,367 பேர் ஆனது. படிப்படியாக மக்கள் தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பிய வண்ணம் உள்ளனர்.
இருப்பினும் மலேசியாவின் பிற பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வகத்தார் எச்சரித்துள்ளனர்.